
நெடும் பயணத்தில் ஒவ்வொரு மைல் கல்லும் முக்கியம். கடினமான பாதையில் செல்லும் போது, நின்று நிதானித்து அதுவரை பயணித்த பாதையில் எதிர்கொண்ட அனுபவங்களை அசைபோட்டு, அடுத்து சந்திக்க வேண்டிய சவால்களுக்கு தயார்படுத்தியபடி, அடுத்த அடியை முன்னெடுக்க வாய்ப்பாக அமைவது இந்த நாள்.

கேரள தலைநகரில்...
வந்த வழியைத் திரும்பி பார்ப்பது வரலாறு வாசிப்பதற்கு ஈடானது. எந்த இலக்கோடு பயணம் துவங்கினோம் என்பதையும், பாதை மாறாமல் பயணித்து இருக்கிறோமா என்பதையும் உறுதி செய்ய அது மட்டுமே வழி.

இன்றைய கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில், இதழ் விரித்த புது மலர் 'தினமலர்' என்பதோ, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அங்கமாக இருந்த நாஞ்சில் நாடு என அறியப்பட்ட இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தை, தமிழகத்தோடு இணைக்க நடந்த போராட்டத்தில், தமிழர்களின் எழுத்தாயுதமாக மேலெழுந்த போர் வாள் தான் 'தினமலர்' என்பதோ, இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும் அடிபணியாமல், மக்களின் நியாயமான கோரிக்கைகளை உரத்த குரலில் எதிரொலித்த காரணத்தால், போர்க்களத்தில் பூத்த புது மலர் என்று தேசிய கவிஞர்கள் போற்றிய இதழ் 'தினமலர்!' பிறக்கும் போதே பார்த்து விட்ட காட்சிகள் என்பதால், இத்தனை ஆண்டுகளில் எந்த ஆட்சியின் அத்துமீறலும், இந்த மலர் மீது சிறு சலனத்தையும் ஏற்படுத்த இயலவில்லை.

டி.வி.ஆர்., பிரகடனம்
தமிழகத்துடன் குமரியின் இணைப்பு நிறைவேறிய பின், திருநெல்வேலிக்கு இடம்பெயர்ந்த 'தினமலர்' அங்கிருந்து பின்பற்ற வேண்டிய பாதையை திடமாகவும், தெளிவாகவும் தீர்மானித்தார் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர்.
'இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் முன்னேற வேண்டும் என்றால், இங்கே கல்வியும், தொழிலும் சிறந்தோங்க வேண்டும். அதற்காக பாடுபடுவதே நம் லட்சியமாக இருக்க வேண்டும்' என பிரகடனம் செய்தார்.தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், கல்விக்கான வசதியும், தொழில்களுக்கான வாய்ப்பும் பரவலாக கிடைக்க, அந்த வினாடியிலேயே சங்கல்பம் செய்து பணியை துவங்கியது 'தினமலர்!'

ஏனைய நாளிதழ்கள் பொதுமக்களை கவர, வகை வகையான செய்திகளை இறக்குமதி செய்து வழங்கிக் கொண்டிருந்த காலத்தில், கிராமம் கிராமமாக செய்தியாளர்களை நியமித்து, மக்களின் அடிப்படை தேவைகள் என்ன என்பதை அறிந்து செய்தியாக்கி, அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, அந்த தேவைகளை பூர்த்தி செய்ய திட்டங்கள் தீட்டி செயல்படுத்தும் வரை, விடாமல் அழுத்தம் கொடுத்தது 'தினமலர்!'

நடுநிலைக்கு சான்று
காங்கிரஸ் முதல் கம்யூனிஸ்டுகள் வரை அனைத்து கட்சிகளையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், சட்டசபையில் நிகழ்த்திய உரைகளில் பெரும்பகுதி 'தினமலர்' செய்திகளின் தொகுப்பாக எதிரொலித்தன என்பதற்கு, சபை ஆவணங்களே சாட்சி.

கல்வியும், தொழிலும் வளர ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்தடுத்த அரசுகள் மேற்கொண்ட அத்தனை திட்டங்களுக்கும் அடிநாதமாக 'தினமலர்' செய்திகள், கட்டுரைகளின் பங்களிப்பு இருக்கும் என்பது, கட்சி வேறுபாடு இல்லாமல் ஒவ்வொரு முதல்வர்களும் பகிரங்கமாக அங்கீகரித்த உண்மை.
அவர்கள் அனைவருமே 'தினமலர்' மீது வழக்குகள் பாயவும் காரணமாக இருந்தனர் என்பது, 'தினமலர்' பின்பற்றும் நடுநிலைக்கு சான்று!நடுநிலை என்பது யாரையும் சார்ந்திராத நிலை என, 'தினமலர்' தவறாக புரிந்து கொள்ளவில்லை. நியாயத்தை சார்ந்து நிற்பதே நடுநிலை என்பது அதன் புரிதல். அதிகமான மக்கள் அதிருப்தி அடைவர் என தயங்கியோ, பலரும் நமக்கு எதிராக கிளர்ந்து எழுவர் என பயந்தோ, 'தினமலர்' நாளிதழ் எந்த பிரச்னையிலும் பின்வாங்கியது இல்லை.
சமூக ஊடகங்கள் வழியாக போலி செய்திகளும், அவதுாறும் இடைவேளை இல்லாமல் பரப்பப்படும் இன்றைய சூழலும், 'தினமலர்' நாளிதழின் உறுதியை அசைத்து விடவில்லை.
மிரட்டல் வந்தாலும்...
தேசியமும், ஆன்மிகமும் 'தினமலர்' பிறப்பிலேயே சுவீகரித்த பண்புகள். நல்லவர்களை வெளிச்சத்துக்கு வரவழைத்து கவுரவிப்பது போலவே, நாட்டு நலனுக்கும், மக்கள் நன்மைக்கும் எதிரான சக்திகளை அடையாளம் காட்டுவதை, நம் இதழ் கடமையாக கொண்டிருக்கிறது.
எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்பது இன்று நாடறிந்த உண்மை.நிறுவனர் வகுத்து தந்த பாதையில் இருந்து தடம் புரளாமல் பயணம் செய்கிறோமா என திரும்பி பார்க்கும் போது, மனதில் நிம்மதி நிரம்புகிறது. இன்னும் செல்லவிருக்கும் பாதையிலும், ஒவ்வொரு திருப்பத்திலும் இதே திருப்தியும், நிறைவான மகிழ்ச்சியும் கைகூட வேண்டும் என்று உறுதி பிறக்கிறது!
கருத்து வேறுபாடுகளும், சண்டை சச்சரவுகளும் சகஜமானவை; வலுவான உறவுக்கு அவசியமானவை. அந்த வகையில் அவ்வப்போது ஊடல்கள் உருவாகி மறைந்தாலும், அனைத்து இந்தியர்களும் ஒரே குடும்பம் என உறுதியாக கருதுகிறது 'தினமலர்!' ஒதுங்கி நிற்பவர்களும், விலகி செல்ல விரும்புபவர்களும் ஒரு நாள் உண்மை உணர்ந்து குடும்பத்தோடு சங்கமிப்பர் என நம்புகிறது.
இது நெடும் பயணம்; தலைமுறைகள் தாண்டியும் தொடரும் பயணம்!அறிவார்ந்த வாசகர்கள், விற்பனையாளர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள், மழை - வெயில் - பெருந்தொற்று என எதையும் பொருட்படுத்தாமல், அவர்களின் கரங்களுக்கு பிரதிகளை கொண்டு சேர்க்கும் சைக்கிள் பையன்கள் என, இந்த பயணத்தில் துணை நிற்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இதயப்பூர்வமான நன்றியை இரு கரம் கூப்பி தெரிவித்து கொள்கிறது உங்கள் 'தினமலர்' நாளிதழ்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE