சென்னை:சொத்து விற்பனை பத்திர பதிவுக்கான கட்டணத்தை குறைப்பது தொடர்பாக, அரசின் ஒப்புதலுக்காக பதிவுத் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் சொத்து விற்பனையின் போது, வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் பத்திரம் தயாரிக்கப்படுகிறது. இதில், சொத்தின் மதிப்பில் 7 சதவீதம் முத்திரை தீர்வை, 1 சதவீதம் பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.கடந்த 2017ல் பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால், முத்திரைத்தீர்வை 7 சதவீதம், பதிவு கட்டணம் 4 சதவீதம் என 11 சதவீதத்தை மக்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பத்திர பதிவு கட்டணம், நாட்டிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகபட்சமாக உள்ளதாக, கட்டுமானத் துறையினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.கடந்த ஆட்சியில், கட்டண விகிதத்தை குறைக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனாலும், இறுதி ஒப்புதல் கிடைப்பதற்குள் தேர்தல் வந்து விட்டது.
இது குறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பதிவு கட்டணத்தை குறைக்க, பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. இதை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான வழிமுறைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.பத்திரப்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; நிலுவை தொகைகள் வசூலிக்கப்பட வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், பதிவு கட்டண குறைப்பிலும், அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE