சென்னை:பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, சென்னை திரும்பிய தமிழக வீரர் மாரியப்பனுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
'2016ல் தங்கம் வென்ற எனக்கு, இதுவரை அரசு வேலை வழங்கப்படவில்லை' என, அவர் வேதனை தெரிவித்தார்.ஜப்பான் தலைநகர்டோக்கியோவில் பாராலிம்பிக் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில், உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த முறை நடந்த போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற இவர், இந்த முறை வெள்ளி பதக்கம் பெற்று, தொடர்ந்து பதக்கம் பெற்ற வீரராக சாதித்துள்ளார்.
போட்டியை முடித்து நாடு திரும்பிய மாரியப்பன், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில், டில்லியில் இருந்து நேற்று காலை சென்னை வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது, தான் வென்ற பதக்கத்தை உயர்த்தி காட்டி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார்.
அதன்பின், மாரியப்பன் அளித்த பேட்டி:பாராலிம்பிக் போட்டியில், நாட்டிற்காக வெள்ளிப்பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தங்கப் பதக்கம் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்றேன். மழை குறுக்கிட்டதால், நான் நினைத்தபடி உயரம் தாண்ட முடியவில்லை. வரும் 2024ம் ஆண்டு போட்டியில் நிச்சயமாக தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பேன்.
கடந்த 2016ல் நடந்த போட்டியில் நான் தங்கப் பதக்கம் வென்றேன். அப்போது என்னோடு போட்டியில் பங்கேற்ற நம் நாட்டை சேர்ந்த சக வீரர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகள் அரசு வேலை வழங்கியுள்ளன. தமிழக அரசு எனக்கு இதுவரை அரசு வேலை வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.சென்னை திரும்பிய மாரியப்பன் நேற்று, முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி எம்.பி., ஆகியோரை, அறிவாலயத்தில் சந்தித்து, வாழ்த்து பெற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE