தேசத்துக்கு இது பவள விழா. தேசத்திற்குப் பின் பிறந்து, தேசத்தோடு வளர்ந்து, தேசத்துக்காகவே பணி செய்யும், 'தினமலர்' தேசிய தமிழ் நாளிதழுக்கு இது, 71ம் ஆண்டு விழா. பவள விழாவை நோக்கி பயணிக்கும் தினமலர், 70 ஆண்டுகளாகக் கடந்து வந்த பாதையை, சமூகத்தின் மீதான கடமையுணர்வுடனும், சாதனை படைத்துள்ள கம்பீரத்துடனும் திரும்பிப் பார்க்கிறது.

இந்த 70 ஆண்டு பயணம் என்பது, இலகுவாகக் கடந்ததில்லை. ஏற்ற இறக்கங்களும், பள்ளம் மேடுகளுமான பாதையில் கரடு முரடுகளைத் தாண்டி, கல்லையும் முள்ளையும் கடந்து பயணித்திருக்கிறது, தினமலர். இந்த மலரின் மீது பூக்கள் மாத்திரமல்ல; கற்களும் நிறையவே எறியப்பட்டிருக்கின்றன.வகை தொகையில்லா வழக்குகள், எவருக்கும் தெரியாத எச்சரிக்கைகள், ஆட்சியாளர்களின் அடக்குமுறைகள், மென்மையும், வன்மையுமான மிரட்டல்கள்... அத்தனை அச்சுறுத்தல்களிலும் கொண்ட கொள்கையில் தவறியதில்லை. 10 பதிப்புகள்இதழியல் அறத்தில் இருந்தும் இடையில் விலகியதில்லை. எல்லா சவால்களையும் சந்தித்திருக்கிறது. அனைத்தையும் சமாளித்து சாதனைகளையும் படைத்திருக்கிறது தினமலர்.
அதுவே நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் அவர்களின் கனவு. அதுவே அவர் வகுத்துத் தந்த பாதையும், பாடமும்.கடந்த, 1951 செப்டம்பர் 6ல் மலையாளக் கரையோரத்தில் மலர்ந்த தினமலர், இப்போது தமிழகத்தில் மொத்தமாய் 10 பதிப்புகளுடன், தமிழர்களின் மனங்களில் அசையாத சொத்தாக ஆட்சி செலுத்துகிறது. எல்லா நாளிதழ்களிலும் வருவது செய்தி என்றால், தினமலர் நாளிதழில் ெவளியாவதோ செய்...தீ.தீ என்றால் வெறும் தீயில்லை; பாரதி சொன்ன அக்னிக்குஞ்சு. தேசத்துக்கு எதிரான தீமைகளை, தமிழக வளர்ச்சிக்கு தடையாகவுள்ள இடையூறுகளை எரித்து அழிக்கும் அக்னிக் குஞ்சு தான், தினமலர் செய்தி.
நாஞ்சில் நாட்டை தமிழகத்துடன் இணைப்பதில் துவங்கி, தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழர்களின் முன்னேற்றத்துக்கும் செய்திகளாலும், செயல்களாலும், தினமலர் எடுத்துள்ள முயற்சிகள் எண்ணிலடங்கா.கோவில் நகரம் என்ற பெருமையில் இருந்து நழுவி, கொலை நகரம் என்று பெயரெடுக்கும் அளவுக்கு வன்முறைக் களமாக மாறிக் கொண்டிருந்தது மதுரை. அதிர்வுகளை ஏற்படுத்திய செய்திகளாலும், ஆணித்தரமான கட்டுரைகளாலும், அரசையும், மக்களையும் விழிக்கச் செய்து, இன்றைக்கு கல்வியிலும், கலாசாரத்திலும், அரசியலிலும், ஆன்மிகத்திலும் தனிப்பெரும் நகரமாக மதுரையை மாற்றிய பெருமை தினமலர் நாளிதழுக்கே உண்டு.
முல்லை பெரியாறு போராட்டத்தில், காவிரி பிரச்னையில், தமிழக விவசாயிகளின் தார்மீக உரிமையை நிலை நாட்டியதில், தினமலர் செய்திகளுக்குப் பெரும் பங்குண்டு. அரசுக்கே ஆதாரம் கொடுத்ததுதமிழகம் இன்று தடையற்ற மின்சாரத்தைப் பெறுவதற்கு கூடங்குளம் தரும் கூடுதல் மின்சாரமும் ஒரு காரணம். அதற்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்த போது, தன் கூரான பேனா முனையால் அதை உடைத்தெறிந்து, அணு மின் நிலையத்தை தேசத்துக்கு அர்ப்பணித்தது தினமலர்.பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில், பல ஆண்டுகளாக கேரளா மறைத்து வந்த உண்மைகளை, கள ஆய்வு செய்து கண்டறிந்து, அரசுக்கே ஆதாரம் கொடுத்தது தினமலர்.
பசுந்தேயிலைக்கு நியாயமான விலை கோரிய போராட்டத்தில் நீலகிரி மக்களின் பக்கம் நின்று, நீதியைப் பெற்றுத் தந்தது.காட்டுக்குள்ளே படப்பிடிப்பு நடத்தி இயற்கையை அழிப்பதை நிரந்தரமாகத் தடுத்தது. யானை வழித்தடங்கள் அழிப்புக்கு எதிராக தொடர் கட்டுரைகளை வெளியிட்டு, வாயில்லா ஜீவன்களுக்கு வழித்தடத்தை பெற்றுத் தந்தது. மலைகளைத் தகர்த்து நடத்தப்பட்ட கல் குவாரிகளுக்கு எழுத்துக்களால் வேட்டு வைத்தது.

தமிழகம் முழுதும் ஆக்கிரமிப்பிலிருந்த பொது ஒதுக்கீட்டு இடங்களை மீட்டு, பூங்கா அமைக்கவும், மரங்கள் வளர்க்கவும் இடமளித்தது. அவற்றின் மதிப்பே பல நுாறு கோடி ரூபாயைத் தாண்டும். கோவையில் குண்டு வெடிக்கும் என்று அரசை எச்சரித்தது தினமலர். உதாசீனப்படுத்தியதால் பல உயிர்கள் பலியாகின.ஓடோடி வந்து உதவியதுநொய்யல் என்ற நதியே பொய்யாகிப் போனபோது, அதை மீட்டெடுக்க தொடர்களை வெளியிட்டு, கோவையில் இன்றைக்கு பல குளங்களை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு காரணமாக இருந்தது. ஆவணங்களிலும் அழிக்கப்பட்ட கவுசிகா நதியை கண்டறிந்து, கட்டுரை வெளியிட்டு, அதன் வழித்தடங்களை மீட்டெடுத்து அதில் நீர் பாய வைத்தது தினமலர்.
தலைநகரம் வெள்ளத்தில் தத்தளித்த போது, அதற்கு அடிப்படை காரணமான ஆக்கிரமிப்புகளை எல்லாம் அக்குவேர் ஆணிவேராக அலசி ஆராய்ந்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. விண்ணை முட்டும் வளர்ச்சியை நோக்கி சென்னை வீறுநடை போடுவதில், தினமலர் வெளியிட்ட அதிரடிச் செய்திகளுக்கும், அர்த்தமுள்ள ஆலோசனைகளுக்கும் அத்தனை பங்குண்டு.
தேசத்துக்கு எதிரான பயங்கரவாதம், தமிழகத்தில் தலையெடுத்த போதெல்லாம், அதை தயவு தாட்சண்யமின்றி அடியோடு அறுத்தெறிந்திருக்கிறது. ஆன்மிக வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளால், மக்களிடம் இருந்த ஏற்றத் தாழ்வுகளை அடித்துத் துவைத்திருக்கிறது.
அரசியலின் பெயரால் ஆட்டம் போட்டவர்களை, அதிகாரத்தின் பலத்தால் தடம் மாறிய அதிகாரிகளை, ஊரை அடித்து உலையில் போட்ட ஊழல்வாதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வியர்க்க வைத்தது தினமலர்.ஹிந்துக்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் பங்கம் வந்தபோதெல்லாம், பலமுள்ள ஆயுதமாகி அவர்களைப் பாதுகாத்தது. குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட போதும், வெள்ளத்தில் ஒடிஷாவும், கேரளாவும் தத்தளித்தபோதும் ஓடோடி வந்து உதவியது பல லட்சம் தமிழ்க்கரங்கள்.
இயற்கைப் பேரிடர்களால் இன்னல் ஏற்படும் போதெல்லாம், இங்கிருந்து நீள்வதே முதல் கையாக இருந்திருக்கின்றன. அதற்கெல்லாம் அழைப்பு விடுத்து, தேச ஒற்றுமைக்கு திடமான பாலம் அமைத்துக் கொடுத்தது தினமலர்.ஆம்... தேசத்தின் வாசம், எப்போதும் தினமலர் மீது வீசும்.பத்து பதிப்புகள், 14 லட்சம் வாசகர்கள் என இன்றைக்கு இமாலய உயரத்தை எட்டியிருப்பதற்கு, வாசிப்பை இன்னும் நேசிக்கும் வாசகர்களாகிய நீங்களே முதற்காரணம்.
வெயிலிலும் மழையிலும் விடாது பணி செய்யும் முகவர்கள், வினியோகிக்கும் பணியாட்கள், விருப்பு, வெறுப்புகளால் நாங்கள் வீழ்த்தப்பட்ட போதெல்லாம், எங்களைத் துாக்கி விட்ட விளம்பரதாரர்கள் எல்லாருக்கும் இந்த இனிய நாளில், எங்களின் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம். இனிவரும் காலம் எல்லாருக்கும் இனிதாகும் பொருட்டு, எங்களின் கடமையை என்றும் தொடர உறுதியளிக்கிறோம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE