தமிழ்நாடு

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஆயத்தப்பணி ஆரம்பம்: துளிர் விடும் நம்பிக்கை!144 கி.மீ., தூரத்துக்கு 5 வழித்தடங்களில் நிலவியல் சர்வே!

Updated : செப் 06, 2021 | Added : செப் 06, 2021
Share
Advertisement
கோவையில் ஐந்து வழித்தடங்களில், மெட்ரோ ரயில் வழித்தடங்களை அமைப்பது தொடர்பாக நிலவியல் அமைப்பை சர்வே எடுக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதால், திட்டம் விரைவாகத் துவங்குமென்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கோவை நகரை, 2011ம் ஆண்டில் மத்திய அரசு தேர்வு செய்தது. அதனுடன் தேர்வான 18 இரண்டாம் நிலை நகரங்களில், பெரும்பாலான நகரங்களில்
கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஆயத்தப்பணி ஆரம்பம்: துளிர் விடும் நம்பிக்கை!144 கி.மீ., தூரத்துக்கு 5 வழித்தடங்களில் நிலவியல் சர்வே!

கோவையில் ஐந்து வழித்தடங்களில், மெட்ரோ ரயில் வழித்தடங்களை அமைப்பது தொடர்பாக நிலவியல் அமைப்பை சர்வே எடுக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதால், திட்டம் விரைவாகத் துவங்குமென்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கோவை நகரை, 2011ம் ஆண்டில் மத்திய அரசு தேர்வு செய்தது. அதனுடன் தேர்வான 18 இரண்டாம் நிலை நகரங்களில், பெரும்பாலான நகரங்களில் இத்திட்டத்துக்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கொச்சி உள்ளிட்ட சில நகரங்களில், திட்டமே நடைமுறைக்கு வந்து விட்டது. ஆனால் கோவையில் பத்தாண்டுகளாக ஆய்வு மட்டுமே நடந்து வருகிறது.

இது தொடர்பாக, 2017 ஜூலை 19 அன்று, சட்டசபையில் விதி எண்: 110ன் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பின் எந்த வேலையும் நடக்கவில்லை. ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன், கோவை மெட்ரோ திட்டம் குறித்த சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பொறுப்பு, சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வசம் ஒப்படைக்கப்பட்டது.சிஸ்ட்ரா மற்றும் ரைட்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், இதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்து கொடுத்தன.

அதை அங்கீகரித்த தமிழக அரசு, கடந்த ஆட்சி முடிவதற்கு ஒரு மாதத்துக்கு முன்புதான், கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதி) தலைமையில் ஓர் உயர் மட்டக் கூட்டத்தைக் கூட்டி, இது பற்றி விவாதித்தது. அதற்குப் பின் தேர்தல் வந்து விட்டது.ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில், கோவைக்கு இத்திட்டம் வருமா என்பதே சந்தேகமானது. கோவையிலுள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க., தோற்றதே சந்தேகத்துக்கான காரணம். ஆனால் இதைத் தீர்க்கும் வகையில், கடந்த ஜூலை 16ம் தேதியன்று, தமிழக அரசின் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சார்பில், ஓர் அரசாணை (எண்:143) வெளியிடப்பட்டது.

அதில், கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டிருந்தது. அத்துடன் ஜெர்மனி நிதியுதவியுடன், இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.இதன் தொடர்ச்சியாக, கோவை மெட்ரோ திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ள ஐந்து வழித்தடங்களின் நிலவியல் அமைப்பை சர்வே எடுப்பதற்கு, டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 29 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டரில், வழித்தடத்தின் அகலம், ஸ்டேஷன்கள் அமைக்க வேண்டிய இடங்கள் குறித்து, ஜி.பி.எஸ்.,முறையில் (DGPS) நிலவியல்ரீதியாக சர்வே எடுக்கப்படவுள்ளது.உக்கடம்-கணியூர் (26 கி.மீ.,), உக்கடம்-காரமடை அருகிலுள்ள பிளிச்சி (24 கி.மீ.,), தடாகம் ரோடு தண்ணீர்ப்பந்தல்-திருச்சி ரோடு காரணம்பேட்டை (42 கி.மீ.,), சிறுவாணி ரோடு காருண்யா நகர்-அன்னுார் கணேசபுரம் (44 கி.மீ.,), மற்றும் உக்கடம்-வெள்ளலுார் (8 கி.மீ.,) என மொத்தம் 144 கி.மீ., துாரத்துக்கு, இந்த சர்வே மேற்கொள்ளப்படவுள்ளது.இதில் 100 மீட்டருக்கு குறைவில்லாத அகலத்துக்கு, வழித்தடங்களின் நில அமைப்பை சர்வே எடுக்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது. நில அமைப்பு சர்வே அடிப்படையில், எந்தெந்த வழித்தடங்களில், எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும், அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கிடப்படும். அதன்பின் மதிப்பீடு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

அரசாணை, நிலவியல் சர்வே என அடுத்தடுத்து சில வேலைகள் நடப்பதால், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.ஆனால் முக்கிய ரோடுகள் அனைத்திலும் பாலங்கள் கட்டப்படுவதால், திட்ட அறிக்கை தயாரிக்கும் முன் மாற்று வழித்தடங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மாற்றி யோசிக்கலாமே!தற்போது கோவையில் அமைந்துள்ள இரட்டை ரயில் தடங்களுக்கு அருகிலேயே மெட்ரோ ரயில் வழித்தடங்களையும் அமைக்கலாம் என்ற ஆலோசனையும் முன் வைக்கப்படுகிறது.

ரயில்வே இடம் அதிகமாக இருப்பதோடு, அதற்கு அருகில் நிலங்களைக் கையகப்படுத்துவதும் எளிது என்பதே இந்த ஆலோசனையை தொழில் அமைப்புகள் முன் வைக்கக்காரணம்.அத்துடன், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் ஆகிய மூன்று வழித்தடங்களில், ரயில் வழித்தடங்களுக்கு அருகில் இதை அமைத்தால் செலவும் குறைவாகும். மக்களுக்கும் போக்குவரத்து வசதி எளிதாக இருக்கும். நகரமும் விரிவடையும். இந்த ஆலோசனை ஏற்கப்பட்டால், எதிர்பார்த்ததை விட விரைவாகவே கோவைக்கு மெட்ரோ ரயில் வர வாய்ப்புண்டு. அனைத்தும் அரசின் கையில்! -நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X