டி.வி.ராமசுப்பையர் -- டி.வி.ஆர்., 1951 செப்., 6ல் கருவாக்கி, உருவாக்கி வளர்த்த 'தினமலர்' நாளிதழ் இன்னும் அதே இளமையோடும், உணர்வோடும், உயிர்ப்போடும் வானளாவி நின்று, இன்று 71வது வயதில் அடி எடுத்து வைக்கிறது.

நம் நாட்டில் சுதந்திர போராட்ட காலத்தில் துவங்கிய பத்திரிகைகளுக்கெல்லாம் இருந்த ஒரே லட்சியம் இந்திய விடுதலை என்பது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின், தினமலர் நாளிதழை துவங்கிய டி.வி.ஆருக்கும் ஒரு லட்சியம் இருந்தது.
எப்படி உருவானது
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த அன்றைய நாஞ்சில் நாடு - இன்றைய குமரி மாவட்டம், மலையாளம் பேசும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த போது, நாஞ்சில் நாட்டை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டம் தீவிரமானது.
ஆனால், பிற பகுதிகளில் இருந்து வெளியாகி கொண்டிருந்த நாளிதழ்கள் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனால், இந்த போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியாளர்கள் கவனத்திற்கு எட்டவே இல்லை. இதற்காகவே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் தினமலர் துவங்கி, நாஞ்சில் நாட்டை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என எழுதி, அதில் வெற்றியும் பெற்றார்.
மாற்று மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில், இன்னொரு மொழி இதழை துவக்கியதே சவாலான துணிச்சல். அந்த துணிச்சலும், எதிர்கொள்ளும் சவால்களை எதிர்த்து எழுதும் திறனும் தினமலர் நாளிதழின் ரத்தத்தில் அன்றே ஊறிப்போனது.
தமிழ் மண்ணில் உதயம்
நாஞ்சில் நாடு தாய் தமிழகத்தோடு இணைந்ததும், தன் நோக்கம் நிறைவேறியதால் நாளிதழை திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 1957ல் மாற்றினார் டி.வி.ஆர்.,
தமிழ் மண்ணில் தினமலர் கால் பதித்ததும், தமிழ் இதழியல் உலகின் செய்தி பார்வையில் பெரும் மாற்றங்கள் உருவாகின. வெறும் கொலை, கொள்ளை, விபத்து, சினிமா, 'கெஜட்' போல அரசின் உத்தரவுகள், அரசியல்வாதிகளின் அறிக்கைகள் என்ற வட்டத்திற்குள் பத்திரிகை செய்திகள் வந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், முதன் முதலாய் மக்களின் தேவைக்காக செய்திகள் தந்தது தினமலர்.
'வளர்ச்சிக்கான இதழியல்'- Journalism for Development என்ற இதழியல் சித்தாந்தத்திற்கு
அடிகோலியது தினமலர். நாட்டின் முன்னேற்றத்திற்காக, சமூக மாற்றத்திற்காக, உள்ளூர் வளர்ச்சிக்காக செய்திகள் வெளியாகின. குடிநீர், சாலை, தெருவிளக்கு, கல்விக்கூடங்கள், மருத்துவமனை, சுகாதாரம், போக்குவரத்து என்று வசதிகள் ஏதுமில்லாமல் இருந்த அன்றைய தமிழகத்தின் அடிப்படை தேவைகளுக்காக எழுதியது தினமலர்; இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறது.
கடந்த 65 ஆண்டுகளாக தமிழகத்தில் உருவாகி இருக்கும் பல வளர்ச்சி திட்டங்கள்,
அரசின் கட்டமைப்புகளில், சாலை வசதிகளில், குடிநீர் திட்டங்களில் தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியின் பங்களிப்பும் இருக்கும். பல திட்டங்கள் தினமலர் வழிகாட்டியவை.
தங்களின் தேவைகளுக்காக முதன்முதலாக ஒரு நாளிதழ் கவலைப்பட்டு, செய்திகளால் சேவை செய்கிறது என்பதை உணர்ந்த வாசகர்கள், தினமலர் நாளிதழை பெரும் ஆதரவோடு அரவணைத்தனர். அப்படி தினமலர் வளர்ந்தது.
வாசகர்களின் நம்பிக்கை
ஒரு பிரச்னை என்றால், 'தினமலர் நாளிதழில் செய்தி வந்தால் அது அரசின் கவனத்திற்கு போகும்; உடனடி நடவடிக்கை எடுப்பர்' என்ற நம்பிக்கை இப்போதும் வாசகர்களிடம் இருக்கிறது. ஒரு செய்தி தினமலர் நாளிதழில் வந்தால் மட்டுமே அதை நம்பு கின்ற வாசகர்கள் அதிகம்.
இந்த நம்பிக்கையை அடிபிறழாது காப்பாற்றுவதால், தினமலர் நாளுக்கு நாள் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
ஊரின் வளர்ச்சிக்காக எழுதிய தினமலர், வாசகர்களின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்காகவும் எழுதியது. வாசகர்களின் கல்வி, தொழில், வேலைவாய்ப்பிற்காக செய்திகளை தந்தது.
பத்திரிகை உலகில் முதன் முதலாய் 1968ல் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு மாதிரி வினா - விடை வெளியிட்டது தினமலர் நாளிதழ். வாசகர்கள் முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சிகள் பலவற்றையும் நடத்தி வருகிறது.
பள்ளி மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த, அவர்கள் உயர் கல்வியை தேர்வு செய்ய, இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற என தமிழ் பத்திரிகை உலகில் முதன் முதலாய் நிகழ்ச்சிகள் நடத்தியது தினமலர் தான்.
செய்தித்தாள் வடிவமைப்பு, அச்சு கோர்ப்பு, அச்சிடுதல் போன்றவற்றிலும் புதுமையை புகுத்தியது தினமலர். ஆப்செட் அச்சுமுறை, போட்டோ கம்போசிங், நாளிதழின் இணைப்பாக புத்தகங்கள், சிறப்பு மலர்கள், ஞாயிறு அன்று இரண்டு இதழ்கள், உள்ளூர் செய்திகளுக்கு தனி இணைப்பு என, தமிழ் பத்திரிகை உலகின் பல 'முதல்'கள் தினமலர் நாளிதழுக்கே சொந்தம். செய்திகள் வெளியிடுவதிலும் 'தினமலர்' சில தனித்தன்மைகளை கொண்டிருக்கிறது.
முதன்முதலாய்
செய்திகள் வெளியிடுவதிலும் தினமலர் சில தனித்தன்மைகளை கொண்டிருக்கிறது. தேசபக்தியை அடிநாதமாக கொண்டிருக்கும் தினமலர் பிரிவினைவாதம், பயங்கரவாதத்திற்கு துணை போகாமல், லஞ்சம், ஊழல், ஜாதி, மத வெறிக்கு எதிராக செய்தி வெளியிடுவதை இதழியல் நெறிமுறையாக கொண்டுள்ளது. மத, ஜாதிக்கலவரங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது, மோதிக்கொண்டது எந்த மதம், எந்த ஜாதி என்று குறிப்பிட்டு எழுதாத நெறிமுறையை தினமலர் கடைப்பிடிக்கிறது.

நடுநிலைமை
சமூக ஊடகங்கள் பெருகி வரும் இக்காலக்கட்டத்தில், அதில் அதிகம் விமர்சிக்கப்படுவதும், வரவேற்கப்படுவதும் தினமலர் நாளிதழ் மட்டுமே. அதன் நடுநிலையான செய்திகளும், செய்திகளை தரும் விதமுமே இதற்கு காரணம். ஆளுங்கட்சிக்கு, எதிர்க்கட்சிக்கு ஆதரவு என்று இல்லாமல் அரசின் செயல்பாடுகளை தட்டிக்கேட்கவும், தட்டிக் கொடுக் கவும் தயங்காது தினமலர் என்பது அதன் செய்திகளில் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது.
அதனால் தான் பத்திரிகை உலகில் 'நடுநிலைமை' என்ற வார்த்தை வரும் போது மக்கள் மனதில் தினமலர் நாளிதழ் வந்து நிற்கிறது. 'நாங்கள் தினமலர் வாசகர்கள்' என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்பவர்கள், 'வீட்டில் தினமலர் வாங்குகிறோம்' என்று கர்வம் கொள்பவர்கள் என, தினமலர் வாசகர்கள் படை பெரியது. அதுவே தினமலர் நாளிதழின்
வெற்றி.
கடந்த 70 ஆண்டுகளாய் தமிழ் மண்ணின் பிரதிபலிப்பாய், தமிழர்களின் உணர்வாய், உயிரோட்டமாய் 'உண்மையின் உரைகல்' என உரக்கச்சொல்லி தினமும் புதிதாய் மலரும் தினமலரின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும்; ஏனெனில் நடுநிலைமை என்ற சொல்லுக்கு, தமிழருக்கு ஒரு நாளிதழ் என்றென்றும் வேண்டும்!