விதிமீறல் பேனர்கள் அகற்றம்| Dinamalar

தமிழ்நாடு

விதிமீறல் பேனர்கள் அகற்றம்

Added : செப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணி வேகமெடுத்துள்ளது. மக்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் உள்ள பேனர்கள், முழுமையாக அகற்றப்பட வேண்டும் என, நம் நாளிதழில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், அரசு இயந்திரம் சாட்டையை சுழற்ற துவங்கியுள்ளது. அதன்படி, நேற்று ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., பகுதிகளில்
விதிமீறல் பேனர்கள் அகற்றம்


சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணி வேகமெடுத்துள்ளது. மக்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் உள்ள பேனர்கள், முழுமையாக அகற்றப்பட வேண்டும் என, நம் நாளிதழில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், அரசு இயந்திரம் சாட்டையை சுழற்ற துவங்கியுள்ளது.

அதன்படி, நேற்று ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., பகுதிகளில் விதிமீறி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில், பேனர் கலாசாரம் மீண்டும் தலையெடுத்தது. சட்ட விதிகளை மீறி வைக்கப்படும் இவ்வகை பேனர்களால், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. கடந்த காலங்களில், கட்சிக்காரர்கள் வைத்த பேனர் சரிந்து விழுந்த விபத்துகளில், அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், தனியார் விளம்பர நிறுவனங்களின் அடாவடி செயல்பாடுகளால், தனியார் கட்டடங்கள் மற்றும் சாலையோரங்களில், ராட்சத விளம்பர பதாகைகள் வைக்கப்படுவது மீண்டும் அதிகரித்தது. கடிதம்பொதுமக்கள் நலன் கருதி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஆபத்தான விளம்பர பதாகைகள் குறித்து, நம் நாளிதழில், படங்களுடன் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையாக, அண்ணாசாலையில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளம்ப பதாகைகள் உடனடியாக அகற்றப்பட்டன. மாநகராட்சி கமிஷனர் பிறப்பித்த உத்தரவின் படி, சென்னை மாநகர் முழுவதும் விதிமீறல் விளம்பர தாகைகள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றை அகற்றும் பணி துவங்கியது.அதே போல், புறநகர் பகுதிகளிலும், அந்தந்த நகராட்சி நிர்வாகிகள் நடவடிக்கையை துவங்கினர்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்த, மாநில அரசு உத்தரவிட்டது.அதில், 'தமிழகம் முழுதும் ஊரகப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை, 20ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என, ஊரக வளர்ச்சித் துறை செயலர் கோபால், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதினார். அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதியின்றி ஏராளமான விளம்பர பலகைகள், பேனர்கள் பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை சட்ட விரோதமாக, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.20ம் தேதிமாநிலத்தின் சில இடங்களில் நடந்த சம்பவங்களால், சாலையில் சென்றவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, மாவட்டங்களின் ஊரக பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்களை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். இதற்காக மாவட்ட அளவில் கூடுதல் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அந்தஸ்துள்ள அதிகாரியை, ஒருங்கிணைப்பு அதிகாரியாக, மாவட்ட கலெக்டர்கள் நியமிக்க வேண்டும்.அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள் போன்றவற்றை அகற்றும் பணியை, வரும் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்; அகற்றும் பணியை புகைப்படம் எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிரடிஇந்த உத்தரவை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பேனர்கள் அகற்றும் பணி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், நேற்று சென்னை ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன.ஓ.எம்.ஆர்., மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பெருங்குடி, கந்தன்சாவடி, பாலவாக்கம், கொட்டிவாக்கம் போன்ற இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை, போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அதிரடியாக அகற்றினர்.இதே போல், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, நீலாங்கரை பகுதிகளிலும், பதாகைகளை அகற்றும் நடவடிக்கை தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X