தமிழக நிகழ்வுகள்
போலீசாரை மிரட்டியவர் கைது
கடலுார் : கடலுார் அருகே போலீசாருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். கடலுார் அடுத்த கூத்தப்பாக்கம், சக்தி நகரை சேர்ந்த குமார் (எ) பொம்மை குமார், 51; சிலை செய்து வருகிறார். அப்பகுதியில் ரோந்து சென்ற திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார், விநாயகர் சிலை செய்ய அரசு தடை விதித்துள்ளதாக குமாரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், போலீசாரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனர்.

தெரு நாய்களை சுட்டுக் கொன்ற இருவர் கைது; துப்பாக்கி பறிமுதல்
விழுப்புரம் : விழுப்புரத்தில் தெரு நாய்களை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் நரிக்குறவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், சாலாமேடு ஆயுதப்படைக் காவலர் குடியிருப்பு அருகே, நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில் வெடிச் சத்தம் கேட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, 2 நாய்களை நரிக்குறவர் தனது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வாகனத்தில் கொண்டு சென்றது தெரிய வந்தது.தகவலறிந்த வி.மருதுார், வி.ஏ.ஓ., உமாபதி, விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
டி.எஸ்.பி., பழனிச்சாமி மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தி, இருவரைப் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், சாலாமேடு ஆற்காடு நகரைச் சேர்ந்த கனகராஜ், 51, தனது வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வருவதும், இந்த கோழிகளை தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கடித்ததால், ஆசாகுளத்தைச் சேர்ந்த நரிக்குறவர் ராஜ்குமார், 35, என்பவரை அழைத்து வந்து, நாட்டுத் துப்பாக்கியால் 2 தெரு நாய்களை சுட்டுக் கொன்று அப்பகுதியில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இருவரையும் ஆயுத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து, ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

பாத்திர கடைக்குள் புகுந்து மாமூல் கேட்டு தாக்குதல் 4 பேருக்கு வலை
புதுச்சேரி : தியாகு முதலியார் வீதியில், பாத்திரக் கடைக்குள் புகுந்து, மாமூல் கேட்டு, உரிமையாளரை சரமாரி யாக தாக்கிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 39. தியாகு முதலி யார் வீதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 2:30 மணிக்கு, இவரது கடைக்கு வந்த 4 வாலிபர்கள், மாமூல் கேட்டு தகராறு செய்தனர். ராஜ்குமார் பதில் அளிப்பதற்குள், 4 வாலிபர்களும், சரமாரியாக கை மற்றும் பாத்திரங்களால் தாக்கினர். இதில், ராஜ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால், கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடினர். அந்த கும்பல், 'நாங்கள் திரும்பி வரும்போது பணத்தை எடுத்து வைக்க வேண்டும்' என கூறிவிட்டு, சென்றது. புகாரின்பேரில் பெரியக்கடை போலீசார் விசாரித்ததில், கடைக்குள் புகுந்து தாக்கியது கோவிந்தசாலையை சேர்ந்த வாலிபர்கள் என தெரிய வந்துள்ளது.
உலக நிகழ்வுகள்
'பஞ்ச்ஷிர் மாகாணத்துக்குள் நுழைந்துவிட்டோம்'- தாலிபான்கள்
பஞ்ச்ஷிர்: ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாத அமைப்பு, பஞ்ச்ஷிர் மாகாணத்தில் ஆட்சியைக் கைப்பற்ற போராடினர். இதனால் அந்த மாகாணத்தில் வன்முறை வெடித்தது. தாலிபான்கள் பஞ்ச்ஷிர் மகாணத்துக்குள் தாங்கள் நுழைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே ஐ.நா.,வுக்கு கடிதம் மூலம் தனது கருத்தை வலியுறுத்தி இருந்தார். பஞ்ச்ஷிர் மாகாணத்தில் உள்ள குடிமக்களின் உயிரை காக்க ஐ.நா., இந்த விவகாரத்தில் தலையிட்டு தலிபான்களுடன் சுமூகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட கோரினார். ஆனாலும் தாலிபான்கள் இந்த மாகாணத்தில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. வடக்கு ஆப்கனில் உள்ள மேலும் சில பகுதிகளை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கி ஏந்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சீன விமானப்படை தைவானில் அத்துமீறல்
தைபே-தைவானின் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக, தைவான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
சிறிய தீவு நாடான தைவானை தன் தேசிய பாதுகாப்புச் சட்டம் வாயிலாக முழுதுமாக ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. இதனையடுத்து தைவானில் அவ்வப்போது சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, தைவான் ராணுவத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சீன விமானப்படை தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, தைவானை மிரட்டுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் தங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் சீன விமானப் படையின் 19 விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது. சீன விமானப்படையின் ஜே 16 ரக ஜெட் விமானங்கள், எச் 16 ரக விமானங்கள் என, 19 விமானங்கள், தங்கள் வான் எல்லைக்குள் நுழைந்து வட்டமிட்டதாகவும், அவற்றை தைவான் விமானப்படை விரட்டியடித்ததாகவும் தைவான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE