சென்னை: கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் என தமிழக சட்டசபையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அளித்துள்ள விளக்கம்: தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றனர். தங்களது வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலையாட்களின் நிலைமையை கருத்தில் கொண்டு கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலை ஆட்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியம் என கருதுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்கும் பொருட்கூறானது முன்வைக்கப்பட்டது. அது குழுவின் உறுப்பினர்களால் ஒத்தக் கருத்துடன் ஏற்கப்பட்டது. எனவே, அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவமானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE