பஞ்சாயத்துக்கே 'பஞ்சாயத்து!'

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021
Advertisement
''ரேஷன் கடைக்கு போகணும்... மித்து'' என்று சித்ரா சொன்னதுமே, மின்னல் வேகத்தில், பேசத் துவங்கினாள், மித்ரா.''அதுக்கு முன்னாடி ரேஷன் கடை மேட்டர் ஒண்ணு சொல்றேங்க்கா... திருப்பூர்ல நடந்த கூட்டுறவு பணியாளர்கள் சங்க ஆர்ப்பாட்டத்துல பேசுன நிர்வாகிங்க சிலரு, தெற்கு தொகுதியோட ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யை கடுமையா விமர்சனம் பண்ணியிருக்காங்க. அவரு அவிநாசி தொகுதிக்குள்ள இருக்கிற
பஞ்சாயத்துக்கே 'பஞ்சாயத்து!'

''ரேஷன் கடைக்கு போகணும்... மித்து'' என்று சித்ரா சொன்னதுமே, மின்னல் வேகத்தில், பேசத் துவங்கினாள், மித்ரா.''அதுக்கு முன்னாடி ரேஷன் கடை மேட்டர் ஒண்ணு சொல்றேங்க்கா... திருப்பூர்ல நடந்த கூட்டுறவு பணியாளர்கள் சங்க ஆர்ப்பாட்டத்துல பேசுன நிர்வாகிங்க சிலரு, தெற்கு தொகுதியோட ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யை கடுமையா விமர்சனம் பண்ணியிருக்காங்க. அவரு அவிநாசி தொகுதிக்குள்ள இருக்கிற திருமுருகன்பூண்டி ரேஷன் கடைல போய், பொருட்கள் சரியாக தர்றாங்களான்னு ஆய்வு பண்ணுனதுதான் இதுக்கு காரணம். தொகுதி விட்டு தொகுதி வந்து ஏன் ஆய்வு பண்றீங்க? ஆய்வுக்கு போறதுக்கு முன்னாடி அந்த கடைக்கு சரியான முறையில பொருட்கள் சப்ளை ஆயிருக்கானு பார்த்தீங்களானு, கூட்டத்துல பேசினவங்க சொல்லியிருக்காங்க...

''ம்ம்ம்…'செல்வ ராஜ்'யம் தானே நடக்குது இப்ப... ஆனா, அமைச்சர் போய் ஆய்வு பண்ணியிருந்தாலும் இப்படித்தான் பேசியிருப்பாங்களான்னு கேக்கறாங்களாம், ஆளும்கட்சி தரப்பு'' என்று, விவரமாக சொன்னாள் மித்ரா.


'கமுக்கமாக' முடிந்தது''மருத்துவக்கல்லுாரியில் தினசரி ஒரு பிரச்னை கெளம்புதாம்'' என 'பில்டப்'புடன் துவங்கினாள் சித்ரா.

'விடுதியில தங்கியிருக்கிற, 65 செவிலிய மாணவிகள், போன வாரம் காலை உணவு சாப்பிடாமலேயே வேலைக்கு வந்திருக்காங்க. அவங்களுக்கு விடுதியில, நல்ல உணவு தர்றது இல்லையாம். நல்ல சமையல்காரரை வைச்சு சமைச்சுத்தர ஏற்பாடு பண்றோம்னு, ஒரு சீனியர் டாக்டர் மூலமா சமரசம் பேசி, பிரச் னையை 'கமுக்கமா' முடிச்சு வச்சிருக்காரு பெரிய டாக்டர்.

''அங்க இருக்குற போலீஸ் 'அவுட்போஸ்ட்'ல போலீஸ்காரங்க இருக்கறதே இல்லையாம். இதையும் கொஞ்சம் சரி பண்ணாங்கன்னா, பரவாயில்ல...'' என்று சொல்லி முடித்தாள் சித்ரா.


'கறார்' எடுபடுமா?''நகராட்சியா தரம் உயரப்போற திருமுருகன்பூண்டி பேரூராட்சியோட இணைக்கணும்னு, பழங்கரை பஞ்சாயத்து சார்பில், தீர்மானம் போட்டு, கலெக்டருக்கு அனுப்பினாங்க. கருத்துக்கேட்பு கூட்டத்துல, பலரும், பூண்டியோட இணைக்கக்கூடாதுனு கறாரா சொன்னாங்களாமே'' என்று பேச்சைத் துவங்கினாள் மித்ரா.

''ஆமா மித்து... குடியிருப்போர் சங்கத்தை சேர்ந்த ஒருத்தரு, ஊராட்சி சார்பில், 5 லட்சம் ரூபாய் செலவுல துவங்குன மரக்கன்று நடும் திட்டத்தை பாதியிலேயே விட்டுட்டாங்க; அந்த பணம் என்ன ஆச்சுன்னே தெரியலைனு, பேசியிருக்காரு.

''தி.மு.க., மக்கள் பிரதிநிதிகள் எந்த கருத்தையும் சொல்லக்கூடாதுனு, கட்சி மேலிட உத்தரவாம்; இதனால், பஞ்சாயத்தை நகராட்சியோட இணைக்கணும்கற கருத்தை ஆணித்தரமா அவங்களால முன்வைக்க முடியாம போயிருச்சாம்'' என்றாள் சித்ரா, விலாவாரியாக.

''ஆனா ஒண்ணு... பஞ்சாயத்து, நகராட்சியா தரம் உயர்ந்தா, வசதிகள் மேம்படத்தானே செய்யும்! சாதகம்னு இருக்கறப்ப, பாதகமும் இருக்கத்தான் செய்யும். பஞ்சாயத்துக்கு வந்த 'பஞ்சாயத்து'க்கு அரசாங்கம்தான் தீர்வு காணனும்'' என்று 'நியாயம்' கற்பித்தாள் மித்ரா.


சீனியர்கள் ஏமாற்றம்''சத்துணவு துறைல, முதல் முறையா பெரிய அதிகாரி முதல், கடைநிலை ஊழியர் வரை பணிமாறுதல் செஞ்சிருக்காங்க. யாருக்கு, எங்கே பணிமாறுதல் செய்யணுங்கற பட்டியலை, சங்கத்துக்காரங்க தான் தயார் பண்ணாங்களாம்…'' என்று அடுத்த தகவலுக்கு தாவினாள் சித்ரா.

''அங்க அப்படின்னா, ஊரக வளர்ச்சித்துறைல அரசனை நம்பி புருஷனை கைவிட்ட 'கதை' நடந்திருக்காம். மண்டல துணை பி.டி.ஓ.,க்களா மூணு வருஷத்துக்கு மேல இருக்கறவங்க, வேலைப்பளு அதிகமா இருக்கறதால, ரெகுலர் துணை பி.டி.ஓ.,க்களா மாத்திடுங்கன்னு கேட்டிருக்காங்க. முதல்ல, இடமாறுதல் கலந்தாய்வுல கலந்துக்கிட்டு, இடமாறுதல் வாங்கிக்கோங்க.

அப்புறமா பணி மாறுதல் செய்யலாம்னு பெரிய அதிகாரிங்க சொல்லியிருக்காங்க. ஆனா, தொழிற்சங்கத்துக்காரங்க, பணி மாறுதல் தராம இடமாறுதல் கவுன்சிலிங்கில் கலந்துக்க வேணாம்னு சொன்னதால, சீனியர் அதிகாரிங்க இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்கலையாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஜூனியர் அதிகாரிங்க, தங்களுக்கு வேண்டப்பட்ட இடத்துக்கு பணிமாறுதல் வாங்கிட்டு போயிட்டாங்க. 'வடபோச்சே…'ங்கற மாதிரி, சீனியர் அதிகாரிங்க, 'அப்செட்' ஆகிட்டாங்களாம்,'' என்று 'போட்டு உடைத்தாள்' மித்ரா.


அரைகுறை நடவடிக்கை''இப்பல்லாம் குடிநீருக்கு கொஞ்சம் கஷ்டம் தான் மித்து. மாநகராட்சிக்குள்ள இருக்கற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புக்கு, சட்டப்படி அரை இஞ்ச் அளவுக்கு தான் குழாய் பொருத்தணுமாம்; ஆனா, விதிமீறி முக்கால் இஞ்ச் அளவுக்கு குழாய்களை பொருத்தியிருக்காங்க. இதுதொடர்பா மண்ணரையில இருக்கறவங்க புகார் செய்ய, விதிமீறி பொருத்தப்பட்ட சில இணைப்புகளை மட்டும் மாத்திட்டு, பல இணைப்புகளை அப்படியே விட்டுட்டாங்களாம்; ஒரு கண்ணுல வெண்ணெய்...

இன்னொரு கண்ணுல சுண்ணாம்புனு இதைத் தான் சொல்லணும்'' என்று ஆதங்கப்பட்டாள் சித்ரா.

''ரூரல் பகுதிகளை கவனிக்கிற பெரிய போலீஸ் அதிகாரி இருக்கிற அலுவலகத்துல, 'ஸ்டோர் செக்ஷன்'ல வேலை செஞ்சிட்டு இருந்த ஒருத்தரு ரொம்ப நாளா லீவுல இருக்கிறதால, நிறைய வேலைகள் தேங்கிக்கிடக்குதாம்; இதையும் கொஞ்சம் கவனிச்சாங்கன்னா பரவாயில்லை,'' என்று மித்ரா கூறவும், 'அவங்கவங்க வேலையை சரியா செய்யலைனா இப்படி தான்,'' என பெருமூச்சு விட்டாள் சித்ரா.


கோழி பத்திரம்''திருப்பூர் ஏ.பி.டி., ரோட்ல இருக்குற கோழிக்கடைல, அடிக்கடி கோழி திருடு போகுதுனு, போலீஸ் ஸ்டேஷன்ல கடைக்காரர் புகார் கொடுக்க போயிருக்காரு. 'உங்க கோழியை, நீங்க தான் பத்திரமா பாத்துக்கணும்; இல்லைனா, கடைக்கு காவலாளி போடுங்க'ன்னு, போலீஸ்காரங்க சொல்ல, சரிங்க… ஆபீசர்ன்னு சொல்லிட்டு கடைக்காரரும் திரும்ப வந்துட்டாரு.

''அப்புறம் அவரே கடைல கேமரா வச்சு, கண்காணிச்சிருக்காரு. கொஞ்ச நாள் முன்னாடி, கோழியை திருடிட்ட போன மூணு பேரை, விரட்டி போய் பிடிச்சிருக்காரு. அவங்க கத்தியை காட்டி மிரட்டி, தப்பிச்சிருக்காங்க. அவங்க பயன்படுத்தின வண்டியையும், திருடப்பட்ட கோழியையும் பிடிச்ச கடைக்காரரு, போலீசுக்கு தகவல் கொடுத்திருக்காரு. ஆனா, போலீஸ்காரங்க கண்டுக்கவே இல்லையாம்.

''இப்படி இருந்தா, பாதிக்கப்படறவங்க என்னதான் பண்ணுவாங்க'' என சலித்துக்கொண்டாள் மித்ரா.


இடைத்தரகருக்கு 'ஒதுக்கீடு'''பல்லடம் ரோட்டுல ஆக்கிரமிப்பு கடை வராம கண்காணிக்க ஒரு கமிட்டி அமைச்சிருக்காரு கலெக்டரு, ரெண்டு நாள், சுறுசுறுப்பா வேலை பார்த்த அந்த கமிட்டி, அப்புறம் 'சைலன்ட்' ஆகிடுச்சாம். ஞாயித்துக்கிழமைகள்ல, கடைக்காரங்க சிலரு, முதல் நாள் இரவே அங்க போய் துண்டு விரிச்சு துாங்கிடறாங்களாம். கடை விரிக்க அதிகாலையில அங்க வர்றவங்களுக்கும், அவங்களுக்கும் பெரிய சண்டையே வந்துடுச்சாம்.

''பல்லடத்துல இருக்கற ஆதார் சேவை மையத்துல, இடைத்தரகர்களுக்கும் 'இட ஒதுக்கீடு' தந்திருக்கிறாங்களாம். அந்த அலுவலகத்துக்கு, காலை நேரத்துல நேரடியா விண்ணப்பம் எடுத்துட்டு வர்ற பொதுமக்களுக்கும், மதியம், இடைத்தரகர் மூலமா வர்ற விண்ணப்பங்களுக்கும் சேவை செய்றாங்களாம். காலை நேரத்தை விட மதிய நேரத்துல தான், வேலை சுறுசுறுப்பா நடக்குதாம். இது எப்படி இருக்குக்கா'' என கேட்டாள் மித்ரா.

''கமிஷன் பலமாக இருக்கும் போல... பல்லடம் மட்டும் அல்ல... இப்படி நெறைய ஆதார் சேவை மையங்கள் இருக்குதாம்'' எனக்கூறி கலாய்த்த சித்ரா, ''அடுத்த வாரம், மீனாட்சி, நதியாவை போய் பார்த்துட்டு வரணும்'' என்றாள்.


மழை... கிலி


''மேகமா இருக்கு... மழை வரும்போல...' என்று 'கணித்தாள்' மித்ரா.

''மழைன்னாலே, திருப்பூர் மக்கள் பயப்படறாங்களாம். ஏன்னா ரோடெல்லாம் வெள்ளக்காடா மிதக்குது. பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிச்சுடுது. இன்னும் பருவமழை பெய்ய தீவிரமானா ரொம்ப கஷ்டம். ஸ்மார்ட் சிட்டி பணிகள் அரைகுறையாக கிடக்குது... சாக்கடையெல்லாம் அடைச்சுப்போச்சு...

''மழை பெஞ்சப்ப, பி.என்., ரோட்டுல, இடுப்பளவு தண்ணீல, மாணவர்கள் நடந்து போறத பார்த்தவுடனே 'பகீர்'னு ஆகிடுச்சு. சின்ன சின்ன பிரச்னைகளுக்கு உடனடியா தீர்வு கண்டுட்டா, பெரிசா மழை வந்தா கூட பயம் இருக்காது. மாநகராட்சி அதிகாரிங்க, சுறுசுறுப்பாக களத்துல இறங்கலேன்னா, மழைக்காலத்துல அவங்கள துாங்கவிடமாட்டாங்க...'' என்று சித்ரா அக்கறையுடன் சொன்னாள்.

''அக்கா... ஊட்டி வர்க்கி இருக்கு... சூடான டீல முக்கி சாப்பிடுங்க... அப்படியே குட்டித்துாக்கம் போடலாம்'' என்ற மித்ராவிடம், ''வர்க்கி, டீ 'ஓகே'... குட்டித்துாக்கம் போட நேரம் இல்ல... ரேஷன் கடை போகணும்'' என்றுபடபடத்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X