சென்னை--''கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

அவர் கூறியதாவது:சென்னை வடிவுடையம்மன் சமேத வேதகிரீஸ்வரர் கோவில், 200 ஆண்டுகள் பழமையானது. இங்கு 60 ஆண்டுகள் திருப்பணிகள் செய்யாததால், கோவில் மிகவும் பழுதடைந்துள்ளது.பழமையான இந்த கோவிலை புதுப்பிக்க, தொல்லியல் துறை அனுமதி பெற்று, புனரமைப்பு பணிகள் நடைபெறும்.தமிழகத்தில் சில கோவில்களில், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்கு, அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து, மொட்டை அடிப்பது இலவசமாகப்பட்டு உள்ளது.
கோவில் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கி நடக்கிறது.விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு, கொரோனா காரணமாக அனுமதி இல்லை. இது, மாநில அரசின் தன்னிச்சையான முடிவல்ல.மத்திய உள்துறை செயலர் அஜித் பில்லா, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திய படியே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் களிமண்ணாலான பிள்ளையாரை வைத்து வழிபட்டு, அதை நீர் நிலைகளில் கரைக்கலாம். ஆனால், இங்கு கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். அரசியல் செய்ய எவ்வளவோ வழிகள் உள்ளன. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அரசியல் செய்ய நினைத்தால் நிச்சயம் அரசு அனுமதிக்காது.இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. சட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சேகர்பாபு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE