தாம்பரம் மாநகராட்சிக்கு இடம் தேர்வு! | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தாம்பரம் மாநகராட்சிக்கு இடம் தேர்வு!

Added : செப் 07, 2021
Share
தாம்பரம் : புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சிக்கான தலைமை அலுவலகம், தாம்பரம் சானடோரியத்தில் அமைய உள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு இடையில் உள்ள, காலி நிலத்தை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், அந்த இடத்தில், தாம்பரம் மாநகராட்சி தலைமை அலுவலகம் அமைக்க, அரசுக்கு

தாம்பரம் : புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சிக்கான தலைமை அலுவலகம், தாம்பரம் சானடோரியத்தில் அமைய உள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு இடையில் உள்ள, காலி நிலத்தை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், அந்த இடத்தில், தாம்பரம் மாநகராட்சி தலைமை அலுவலகம் அமைக்க, அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், செம்பாக்கம் நகராட்சிகள், பல்வேறு பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, புதிய மாநகராட்சி உருவாக்கப்படும்' என, சட்டசபையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.20 ஆண்டு கால கோரிக்கைஅரசின் இந்த அறிவிப்பால், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள், தங்களின் 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதன் மூலம், தாம்பரம் பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுவதுடன், சுற்றுவட்டார பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடையும் எனவும், பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி குறித்த நிர்வாக ரீதியான பூர்வாங்க பணிகளை, அரசு அதிகாரிகள் துவக்கி உள்ளனர். இது தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், வருவாய் துறை உட்பட பல்வேறு முக்கிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். முக்கிய முடிவுகள்இக்கூட்டத்தில், மாநகராட்சி குறித்த சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அது தொடர்பான குறிப்புகள், அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி கட்டடம் ரிப்பன் மாளிகையில் இயங்குவது போல், புதிதாக அமையவுள்ள தாம்பரம் மாநகராட்சிக்கான தலைமை அலுவலகம் அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு இடையில் உள்ள காலி நிலத்தில், கலெக்டர் ராகுல்நாத் சமீபத்தில் ஆய்வு செய்தார். அடிப்படை வசதிகள்அந்த இடத்தில், தாம்பரம் மாநகராட்சியின் தலைமை அலுவலகம் அமைந்தால், ஒருங்கிணைந்த தாம்பரம் மாநகராட்சிக்கான நிர்வாக ரீதியான பணிகளை கவனிக்கவும், பொதுமக்கள், அதிகாரிகள் வந்து செல்லவும் வசதியாக இருக்கும் என, அதிகாரிகள் தரப்பில் கருத்து கூறப்பட்டுள்ளது. மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு தேவையான நிலம், அங்கு அமையவுள்ள அலுவலக பிரிவுகள், அதற்கு தேவையான கட்டடங்கள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் ராகுல்நாத், நிலம் தேர்வு குறித்த தன் கருத்தை அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். சானடோரியம் தவிர, மேலும் நான்கு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு, அதுகுறித்த அறிக்கையும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.சென்னையில் நுழைவாயிலாக உள்ள தாம்பரம் ரயில் நிலையம், எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஜி.எஸ்.டி., சாலை, மக்கள் அதிகம் பயன்படுத்தும் பஸ் நிலையம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய வசதிகள் இந்த இடத்தை சுற்றி அமைந்துள்ளன. எனவே, சானடோரியம் பகுதியில் மாநகராட்சிக்கான தலைமை அலுவலக கட்டடம் அமைப்பது சரியான தேர்வாக இருக்கும் என, அதிகாரிகள் தரப்பிலும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன

. கலெக்டரின் பரிந்துரையை ஆலோசித்து, அரசு விரைவில் முடிவை அறிவிக்கும் எனவும், அதன் பின், மாநகராட்சி தலைமை அலுவலக கட்டடத்திற்கான பணிகள் துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டிக்கு வாய்ப்பு!சிட்லபாக்கத்தைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் ஜெ. சுனில் ஜெயராம், 47, கூறியதாவது:மாநகராட்சியுடன் இணைய உள்ள, ஐந்து நகராட்சிகள், ஆறு பேரூராட்சிகளுடன், நாங்கள் எதிர்பார்த்துள்ளது போல், 15 ஊராட்சிகளும் இணைந்தால், அங்குள்ள மக்கள், சானடோரியம் பகுதிக்கு எளிதில் வந்து செல்ல முடியும்.தாம்பரம் மாநகராட்சியுடன், அதை சுற்றியுள்ள ஊராட்சிகளும் இணைக்கப்பட வேண்டும் என்பதே, இங்குள்ள அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு. நகரமயமாக்கலால், அசுர வளர்ச்சி அடைந்து வரும் புறநகர் ஊராட்சிகள், அடிப்படை வசதிகள் இன்றி, 10 ஆண்டுகளுக்கும் மேல் திணறி வருகின்றன.இவ்வாறான சூழலில், மாநகராட்சிக்கான பணிகள் வேகமெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பொது மக்கள் எதிர்பார்த்துள்ளதுபோல், தாம்பரம் மாநகராட்சி அமைந்தால், 181 சதுர. கி.மீ., பரப்பளவில்,

தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக விளங்கும். அப்போது, 'ஸ்மார்ட் சிட்டி, அம்ருத்' போன்ற திட்டங்களின் கீழ் நிதிகள் ஒதுக்கப்பட்டு, நகரம் அனைத்து வசதிகளிலும் தன்னிறைவு பெற வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.5 ஏக்கர் நிலம்இது குறித்து, தாம்பரம் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுவாக, நகரின் மைய பகுதியில், தலைமை அலுவலகம் இருப்பதே, நிர்வாக பணிகளுக்கு உதவியாக அமையும். இதை கருத்தில் வைத்தே, கலெக்டர் பரிந்துரைத்துள்ளார் என, நம்பப்படுகிறது.மேலும், தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள இடம், 5 ஏக்கர் பரப்பளவிற்கும் மேல் உள்ளதால், அலுவலகம் அமைய, வாய்ப்புகள் அதிகம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X