விழுப்புரம் : மருத்துவக் கல்லுாரியில் இடம் வாங்கித் தருவதாக ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் துக்காராம். இவரது மகனுக்கு மருத்துவக் கல்லுாரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி மரக்காணம், உப்புவேலுாரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், அவரது மகன் டாக்டர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் 43 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால் சீட் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்தனர்.புகாரின் பேரில், அவர்கள் இருவர் மீதும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து டாக்டர் ஸ்ரீநிவாசை கைது செய்தனர்.இந்நிலையில், விழுப்புரம் கே.கே., ரோட்டைச் சேர்ந்த மோகன்ராஜ், 58; என்பவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதில், விழுப்புரம் தனலட்சுமி கார்டனைச் சேர்ந்த நண்பர் திருமாறன் மகளுக்கு மருத்துவக் கல்லுாரியில் சீட் வாங்கி தரக்கோரி, பன்னீர்செல்வத்திடம் கேட்டேன். அவரும், அவரது மகன் ஸ்ரீநிவாஸ், புதுச்சேரி, முத்தியால்பேட்டை சீத்தாராமன், அவரது மகள் டாக்டர் சபரிஸ்ரீ ஆகியோர் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் செலவாகும் எனக் கூறினர்.மேலும், 2017 ஏப், 25ம் தேதி பன்னீர்செல்வம் உட்பட நால்வரும், திருமாறனிடம் இருந்து ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் பெற்றுச் சென்றனர். ஆனால், சீட் வாங்கி தராமல் பணத்தையும் மோசடி செய்துள்ளனர்.பணத்தைத் திருப்பிக் கேட்ட திருமாறனுக்கு, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர் என புகாரில் தெரிவித்துள்ளார்.புகாரின் பேரில், பன்னீர்செல்வம், டாக்டர் ஸ்ரீநிவாஸ், சீத்தாராமன், சபரிஸ்ரீ ஆகிய 4 பேர் மீதும் நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE