நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்குமா?

Updated : செப் 08, 2021 | Added : செப் 07, 2021
Share
Advertisement
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக, ஆகஸ்ட் 31ம் தேதி ஒரே நாளில் ஒன்பது நீதிபதிகள் பதவியேற்றனர். அவர்களில் மூன்று பேர் பெண் நீதிபதிகள். குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி, தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய மூன்று பேர் தான், அந்த பெண் நீதிபதிகள். உச்ச நீதிமன்றம் உருவாகி 39 ஆண்டுகள் கழித்து 1989ம்
தினமலர், தலையங்கம், நீதித்துறை, பெண்கள், உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக, ஆகஸ்ட் 31ம் தேதி ஒரே நாளில் ஒன்பது நீதிபதிகள் பதவியேற்றனர். அவர்களில் மூன்று பேர் பெண் நீதிபதிகள். குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி, தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய மூன்று பேர் தான், அந்த பெண் நீதிபதிகள்.

உச்ச நீதிமன்றம் உருவாகி 39 ஆண்டுகள் கழித்து 1989ம் ஆண்டில் தான் நீதிபதி பாத்திமா பீவி, உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றார். கடந்த மாத நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் ஒரே ஒரு பெண் நீதிபதியாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முன்னர் பதவி வகித்த இந்திரா பானர்ஜி இருந்தார். சமீபத்தில் மூன்று பேர் பதவியேற்றதால் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34. ஏற்கனவே 10 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், சமீபத்தில் ஒன்பது பேர் நியமிக்கப்பட்டதன் வாயிலாக தற்போது, 33 நீதிபதிகள் உள்ளனர். ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் 71 ஆண்டு கால வரலாற்றில், இதுவரை 256 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் மட்டுமே பெண்கள். அதிலும் மூன்று பேர் சமீபத்தில் பதவியேற்றவர்கள். இதுவரை நியமிக்கப்பட்ட மொத்த நீதிபதிகள் எண்ணிக்கையில் பெண்களின் பங்கு 4.2 சதவீதமே.

அதே நேரத்தில், நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் ஆண் நீதிபதிகள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 11 சதவீதமாக உள்ளது. அதிலும், சென்னை மற்றும் டில்லி உயர் நீதிமன்றங்களில் தான் அதிக பெண் நீதிபதிகள் உள்ளதாகவும், மணிப்பூர், மேகாலயா, பீஹார், திரிபுரா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் தற்போது பெண் நீதிபதிகளே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், கீழமை நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம், 2017ம் ஆண்டு நிலவரப்படி 28 சதவீதமாகும். தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 37 சதவீத அளவுக்கு பெண் நீதிபதிகள் உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் பதவியேற்ற பெண் நீதிபதிகளில் ஒருவரான நாகரத்னா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து, உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இவர் முன்னாள் தலைமை நீதிபதி இ.எஸ்.வெங்கட்ராமய்யாவின் மகள். நாகரத்னா, வரும் 2027ல் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனாலும், அவர் ஒரு மாதம் மட்டுமே தலைமை நீதிபதி பதவியில் தொடர முடியும். அதன்பின் அவரின் பணிக்காலம் முடிந்து விடும்.

நீதித் துறையில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு பாலின பாகுபாடும், நாடு சுதந்திரம் அடைந்தது முதல், பல ஆண்டுகள் பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாததும் காரணங்கள். மேலும், கீழமை நீதிமன்றங்களில் தற்போது குறிப்பிட்ட அளவில் பெண் நீதிபதிகள் பணியாற்றி வந்தாலும், அவர் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெறுவது குறைவாகவே உள்ளது. இந்த நிலைமையும் மாற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை, நீதித் துறையும், மத்திய அரசும் எடுக்க வேண்டும். அப்போது தான், நீதித் துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்.
அத்துடன், கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம் என்பது, நுழைவுத் தேர்வு மற்றும் மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு அடிப்படையில்இருப்பதால், பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மாறுபட்ட அணுகுமுறை உள்ளதால், பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.



மேலும், கீழமை நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளாக பணியில் சேருவோர், குறிப்பிட்ட வயதை தாண்டியவர்களாக இருப்பதாலும், குடும்ப பொறுப்புகள், பணியிட மாற்றம் போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருப்பதாலும், அவர்களால் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களுக்கு செல்லும் வாய்ப்பை பெற முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் மட்டுமின்றி, மற்ற பல துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதுபோல, நீதித் துறையிலும் வரும் ஆண்டுகளில் அதிகரிக்க வேண்டும். தகுதியான மாவட்ட நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்கள் பலர், உயர் நீதிமன்றங்களின் நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் பழமையான அணுகுமுறைகள் மாற வேண்டும். பெண்களுக்கான பிரதிநிதித்துவம் சரியான அளவில் அளிக்கப்பட்டால் மட்டுமே, அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படும். அத்துடன் ஏராளமான இளம்பெண்கள் நீதித்துறையில் பணிபுரிய முன்வருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X