இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டாளராக விளங்கும், திருப்பூர் மாவட்டம் மூலனுார் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுகந்தி: நடுத்தர விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள். புகுந்த வீடும் விவசாய குடும்பம் தான். ஆரம்பத்தில் எனக்கு விவசாயம் பற்றி அதிகம் தெரியாது. நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கணவர், இரண்டு மாதம் மட்டுமே உயிரோடு இருப்பார் என, மருத்துவர்கள் கூறினர். இயற்கை உணவுடன், முறையான மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டதில், இரண்டு ஆண்டு கள் வரை உயிர் வாழ்ந்தார். ஆயுளை நீட்டிக்கும் ஆற்றல் இயற்கை உணவுக்கு உண்டு என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.நண்பர்கள் மற்றும் விவசாய பெருமக்களின் வாயிலாக, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி, தானியம், நாட்டு காய்கறிகள் மற்றும் எண்ணெய் வகைகள் குறித்து ஆழமாக கற்று அறிந்தேன். பிளஸ் 2 வரை மட்டுமே படித்திருக்கும் என் சிந்தனையை, விவசாய அனுபவ பாடம் விசாலமாக்கியது.இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை எங்கிருந்து பெறுவது என்ற குழப்பம் மக்களுக்கு இருக்கிறது. இதற்காகவே அவற்றைச் சேகரித்து மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்.மஞ்சள், மிளகு, சீரகம், மல்லி போன்ற உணவுப் பொருட்கள், கொம்புத்தேன், மலைத்தேன், முருங்கைத் தேன், கறுப்பு கவுனி, அறுபதாம் குறுவை, மாப்பிள்ளை சம்பா.பூங்கார், காட்டுயானம், கருங்குறுவை போன்ற பாரம்பரிய அரிசி ரகங்கள் என, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் அனைத்தையுமே, தேவைப்படுவோருக்கு கொண்டு சேர்ப்பதுடன், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்.படித்த இளைஞர்களின் கவனம் தற்போது விவசாயத்தின் பக்கம் திரும்பி உள்ளது. அவ்வாறு விவசாயம் செய்ய ஆசைப்படுவோருக்கு தேவையான ஆலோசனை, உதவிகளை செய்து கொடுக்கிறேன்.விவசாய நிலத்தில் என்ன பயிரிட வேண்டும். அதில் இயற்கை விவசாயம் எப்படி செய்ய வேண்டும். விவசாயம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களை பக்குவமாக கையாளுவது குறித்தும், அவர்களிடம் பகிர தவறுவதில்லை.இயற்கை விவசாயம், தமிழ் இனத்தின் வாழ்வியல் முறைகளுள் ஒன்று. நாம் பின்பற்ற மறந்து விட்ட இப்பழக்கத்தை மீண்டும் கைக்கொண்டு விட்டால் போதும். ஆரோக்கியமான தலைமுறைகளால் இப்பூவுலகம் என்றென்றும் நிறைந்து திருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE