அரசியல் செய்தி

தமிழ்நாடு

துாத்துக்குடியிலும் 71 ஆயிரம் டன் நிலக்கரி மாயம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை விவாதத்திற்கு பின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிலுரை: அனல் மின் நிலையங்களால், வளிமண்டலத்தில் புகை, துாசி மாசு ஏற்படுகிறது. எனவே, அனல் மின்நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. சோலார் மின்சாரத்தால் மாசு ஏற்படுவதில்லை. இதற்காக, இந்திய மரபு சாரா எரிசக்தி நிறுவனத்துடன், 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு

சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை விவாதத்திற்கு பின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிலுரை:

அனல் மின் நிலையங்களால், வளிமண்டலத்தில் புகை, துாசி மாசு ஏற்படுகிறது. எனவே, அனல் மின்நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. சோலார் மின்சாரத்தால் மாசு ஏற்படுவதில்லை. இதற்காக, இந்திய மரபு சாரா எரிசக்தி நிறுவனத்துடன், 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக 20 ஆயிரம் மெகாவாட் சோலார் மின்சாரம்; 3,000 மெகாவாட் நீரேற்று மின்சாரம்; 2,000 மெகாவாட் எரிவாயு மின்சாரம் தயாரிக்கப்படும். தமிழகத்தில் 2006 - 11 இடையிலான தி.மு.க., ஆட்சியில், 2.09 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், 2011 - 16 இடையிலான அ.தி.மு.க., ஆட்சியில் 82 ஆயிரம்; 2016 - 21 இடையிலான ஆட்சியில் 1.38 லட்சம் விவசாய இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

வாரியத்திற்கு சொந்தமான அனல்மின் திட்டங்களை 10 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. செயல்பாட்டில் இருந்த திட்டங்களிலும் நம் உற்பத்தியை குறைத்துள்ளனர். தி.மு.க., ஆட்சியில் 85 சதவீதமாக இருந்த உற்பத்தி, தற்போது 58 சதவீதமாக குறைந்துள்ளது. தனியாரிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 15 ஆண்டுகள், 25 ஆண்டுகள் என, நீண்ட கால ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. துறை ரீதியாக ஆய்வு செய்தபோது, இந்த காலக்கட்டத்தில், சோலார் மின்சக்தி கழகம் 6.32 ரூபாய்க்கு மின்சாரம் வழங்க தயாராக இருந்துள்ளது. ஆனால் 7.01 ரூபாய்க்கு தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.தற்போது, சோலார் எரிசக்தி நிறுவனத்திடம் 1 யூனிட் 2.61 ரூபாய் என்ற விலையில், 1,000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மின் வாரியம் சேவைத்துறை தான்; மறுக்கவில்லை. அதற்காக, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. நம் உற்பத்தியை பெருக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.'பவர் டிரேடிங் கார்ப்பரேஷன்' நிறுவனத்திடம், எந்த மாநிலத்திற்கும் ஒதுக்கப்படாத 1,500 மெகாவாட் மின்சாரத்தை, 1 யூனிட் 3.26 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இப்படி ஒவ்வொன்றாக செலவினங்களை குறைத்து வருகிறோம். மின் வாரியத்தின் மொத்த கடன் 1.52 லட்சம் கோடி ரூபாய். இது, தமிழக அரசின் கடனில் மூன்றில் ஒரு பங்கு. இதற்காக ஆண்டுதோறும் 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டப்படுகிறது.வட்டி விகிதம் 9.50 சதவீதம் துவங்கி 13.5 சதவீதமாக உள்ளது. அதிக வட்டி கொடுத்து கடன் பெறவேண்டிய அவசியம் இல்லை.மக்களிடம் இருந்து வரக்கூடிய வருவாயை வைத்து, மின் வாரியத்தை மேம்படுத்த முடியும். நிர்வாகத்தை சீர் செய்யாமல் விட்டதால் மின் வாரியம் இழப்பை சந்தித்துள்ளது.

மின் வாரியத்தில் மொத்தம் 1.46 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது 56 ஆயிரத்து 877 பணியிடங்கள் காலியாக உள்ளன. இருக்கிறவர்களை வைத்து நிர்வாகத்தை நடத்தும் சூழல் உள்ளது. வடசென்னை மின் நிலையத்தில் ஆய்வு செய்த போது, 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. இதற்காக இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்ததாக முன்னாள் அமைச்சர் கூறினார்.ஆனால், தேர்தல் முடிவு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு எந்த ஆய்வுக்கும் செல்லவில்லை.

தற்போது, குழு அமைக்கப்பட்டு நடந்த முதற்கட்ட ஆய்வில், வடசென்னையில் 2.38 டன்; துாத்துக்குடியில் 71 ஆயிரத்து, 857 டன் நிலக்கரி காணவில்லை என தெரிய வந்துள்ளது. ஆய்வுக்குழுவின் இறுதி அறிக்கை வந்தபின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X