புதுடில்லி: முன்னாள் துணை பிரதமர் மறைந்த தேவி லாலின் பிறந்த நாள் விழாவில், சமாஜ்வாதி தலைவர் முலாம் சிங் யாதவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
முன்னாள் துணை பிரதமரும், இந்திய தேசிய லோக் தள தலைவருமான மறைந்த தேவி லால் பிறந்த தினம், வருகிற 25ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக பிரமாண்ட விழாவுக்கு அவரது மகனும், ஹரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விழாவில் பங்கேற்க, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சிரோமணி அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் விழாவில் பங்கேற்க உறுதி அளித்துள்ளனர்.
தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
''பா.ஜ., காங்., ஆகிய கட்சிகளுக்கு மக்கள் மாற்று தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்த விழாவில், மூன்றாவது அணி உருவாவதற்கான விதை துாவப்படுவதுடன், மக்கள் பிரச்னைகள் குறித்து குரல் கொடுக்கப்படும்,'' என, இந்திய தேசிய லோக் தள தலைவர் அபய் சவுதாலா தெரிவித்தார்.