பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சி அடுத்த மேலச்சேரியில் அகழாய்வு நடத்தப்படுமா? வரலாற்று ஆர்வலர்கள், மக்கள் எதிர்பார்ப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
செஞ்சி : மண்ணோடு அழிந்து வரும் மேலச்சேரி தீப்பாய்ந்தாள் கோவில் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்று நினைவுச் சின்னங்கள் அதிகம் உள்ள பகுதியாக செஞ்சி உள்ளது. செஞ்சி கோட்டையை மையமாகக் கொண்டு 5 கி.மீ., சுற்றளவிற்கு மன்னர்கள் காலத்தில் நெருக்கமான
செஞ்சி அடுத்த மேலச்சேரியில் அகழாய்வு நடத்தப்படுமா? வரலாற்று ஆர்வலர்கள், மக்கள் எதிர்பார்ப்பு

செஞ்சி : மண்ணோடு அழிந்து வரும் மேலச்சேரி தீப்பாய்ந்தாள் கோவில் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்று நினைவுச் சின்னங்கள் அதிகம் உள்ள பகுதியாக செஞ்சி உள்ளது.

செஞ்சி கோட்டையை மையமாகக் கொண்டு 5 கி.மீ., சுற்றளவிற்கு மன்னர்கள் காலத்தில் நெருக்கமான குடியிருப்புகளும், கோவில்களும் இருந்துள்ளன.இதில் செஞ்சி அடுத்த மேலச்சேரி வரலாற்று நகரமாக கருதப்படுகிறது. மன்னர்கள் காலத்தில் மேலச்சேரி ஆன்மிக பகுதியாக மட்டுமின்றி சுங்கச்சாவடியுடன் கூடிய வர்த்தக நகராகவும் விளங்கியுள்ளது.இங்கு அரண்மனை இருந்து அழிந்து விட்டதாக வரலாறு உள்ளது என கிராம மக்கள் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக அரண்மனைத் தோட்டம் எனும் மண்மேடான பகுதி இங்குள்ளது.

அரண்மனையில் வேலை செய்த தாதி பெண்களுக்கு மன்னர்களால் உருவாக்கப்பட்ட கிராமம் மேலச்சேரியை அடுத்து தாதிகுளம் என்ற பெயரிலும், தாதன்களுக்கான தாதன்குப்பம் என்ற கிராமமும் மேலச்சேரியில் உள்ளன. மேலச்சேரியில் உள்ள 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த திரவுபதியம்மன் கோவில், திரவுபதியம்மன் கோவில்களுக்கெல்லாம் மூல கோவிலாக குறிப்பிடுகின்றனர். புதிதாக கோவில் கட்டுபவர்கள் இங்கிருந்து மண் எடுத்துச் சென்று கோவில் கட்டுவதைக் கடந்த காலங்களில் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.அத்துடன் பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த மத்திலீஸ்வரர் குடைவரை கோவிலும், காட்டின் நடுவே அகத்தியர் வணங்கிய மன்னார்சாமி கோவிலும் உள்ளன. சத்திரபதி சிவாஜியின் மகன் ராஜாராமிடம் இருந்து அவுரங்கசீப் செஞ்சி கோட்டையை கைப்பற்றிய போது அவுரங்கசீப்பின் படை தளபதியாக ராஜா தேசிங்கின் தந்தை சொரூப் சிங் இருந்தார்.

இந்த போருக்குப் பிறகு செஞ்சி கோட்டையை ஆட்சி செய்யும் அதிகாரத்தை அவுரங்கசீப் சொரூப் சிங்கிடம் ஒப்படைத்தார். அவருடன் போர் வீரர்களாக வந்த உத்திரபிரதேச மாநிலம், பொந்தில்கண்ட் பகுதியைச் சேர்ந்த ரஜபுத்திரர்கள் அப்போது மேலச்சேரியில் குடியேறினர்.இன்றும் இந்த சமூகத்தினர் இங்கு வசிக்கின்றனர். ரஜபுத்திர வம்சத்தில் கணவர் இறந்த பின் உடன் கட்டை ஏறும் வழக்கம் உண்டு. இதன் காரணமாகவே ராஜா தேசிங்கு இறந்ததும், அவரது மனைவி ராணிபாய் சிதை மூட்டி தீயில் இறங்கினார்.

இவர்கள் தங்களின் வம்சத்தில் தீக்குளித்த பெண்களை தெய்வமாக வணங்கும் வழக்கம் கொண்டவர்கள்.இச்சமூகத்தினரால் கட்டியதாக கருதப்படும் தீப்பாய்ந்தாள் கோவில் மேலச்சேரி காட்டில் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை பொந்தில் சமூகத்தினர் இங்கு வழிபாடு நடத்துகின்றனர். இந்த கோவிலின் பெரும் பகுதி அழிந்து மண்ணில் புதைந்து விட்டதாக பொந்தில் சமூகத்தினர் கூறுகின்றனர்.இந்த கோவிலில் தற்போது பலகை கல்லில் வணங்கிய நிலையில் உள்ள ராணியும், கத்தியுடன் உள்ள மன்னரின் உருவமும் புடைப்பு சிற்பமாக உள்ளது.அரண்மனையில் உள்ளது போன்று பெரிய துாண்களும், சுற்று கரையும் காணப்படுகிறது. காட்டின் நடுவில் வியக்க வைக்கும் வகையில் பிரம்மாண்டமான துாண்களுடன் இருக்கும்

இந்த இடம் தற்போது புதர்கள் மண்டி மண்னோடு மண்ணாக அழிந்து வருகிறது.இந்த இடத்தில் அகழ்வாய்வு நடத்தினால் செஞ்சி பகுதியைப் பற்றிய மேலும் பல தகவல்களைக் கண்டறிய முடியும் என வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே, இங்கு இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி மேலச்சேரியில் நீண்ட நாட்களாக புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளி கொண்டு வரவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X