செய்திகள் சில வரிகளில்... விநாயகர் கோவில் புனரமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... விநாயகர் கோவில் புனரமைப்பு

Added : செப் 08, 2021
Share
பொள்ளாச்சி, கோமங்கலம்புதுார் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்ற நினைத்தனர்.விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் புனரமைக்கும் பணியை மேற்கொள்ளலாம் என முடிவெடுத்து, பழமையான விநாயகர் கோவிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவிலை சுத்தம் செய்து, வர்ணம் பூசும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.இளைஞர்கள் கூறுகையில், 'விநாயகர் சதுர்த்தி விழா

பொள்ளாச்சி, கோமங்கலம்புதுார் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்ற நினைத்தனர்.விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் புனரமைக்கும் பணியை மேற்கொள்ளலாம் என முடிவெடுத்து, பழமையான விநாயகர் கோவிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவிலை சுத்தம் செய்து, வர்ணம் பூசும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர்கள் கூறுகையில், 'விநாயகர் சதுர்த்தி விழா வருவதால், கோவிலை துாய்மைப்படுத்த முடிவு செய்தோம். இது எங்களுக்கு திருப்தியை தருவதால், மன மகிழ்ந்து இப்பணியை செய்கிறோம்,' என்றனர்.இளைஞர்கள் விடுமுறையை வீணாக கழிக்காமல், பயனுள்ளதாக மாற்றி கோவில் துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளதை மக்கள் பாராட்டினர்.

கைத்தறி கொள்முதல் மையம் தேவை

தி.மு.க., நெசவாளர் அணி மாநில செயலாளர் நாகராஜன் கைத்தறி துறை அமைச்சர் காந்தியிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.அதில் கூறியிருப்பதாவது:கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் சேலை, சுடிதார் உள்ளிட்ட துணி ரகங்களை,ஜவுளி கொள்முதல் நிலையங்கள் அமைத்து, தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

வாழ்கைத்தரம் காக்க, தனியாக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு கடன் வங்கி அமைக்க வேண்டும்.நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த, மாணவ, மாணவியரின் உயர்கல்விக்கு அரசு உதவ வேண்டும். மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும்.மாநிலம் முழுவதிலும் உள்ள, கூட்டுறவு சங்கங்களில், கடந்த காலங்களில் நடந்த நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால், அரசு வீட்டுமனைகள் வழங்கி, வீடு கட்டித்தர வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.களையால் மகசூல் இழப்புபொள்ளாச்சி பகுதியில், பருவமழை பெய்யும் நிலையில், விளை நிலங்களில் களைச்செடிகள் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. பயிர் சாகுபடியில் களைகளின் விளைவுகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.
வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி கூறியதாவது:பயிர் சாகுபடியில், பூச்சி, நோய் தாக்குதலால் அதிக இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கருதுகின்றனர். ஆனால், வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வில், பூச்சி, நோய்களால் ஏற்படும் பாதிப்பை விட, களை செடிகளால் பாதிப்பும், இழப்பும் அதிகமாக உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
வேளாண் உற்பத்தியில், ஆண்டு மொத்த இழப்பில், களைகளால், 45 சதவீதம்; பூச்சிகளால், 30 சதவீதம்; நோயினால், 20 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பூச்சி, நோய் கட்டுப்பாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, களைக்கட்டுப்பாட்டுக்கும் கொடுக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

திறந்தவெளி 'பார்' அதிகரிப்பு

பொள்ளாச்சி புறநகர், கிராமப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகளையொட்டி, செயல்பட்டு வந்த பார்கள், ஒப்பந்த காலம் முடிந்ததால் மூடப்பட்டுள்ளன.இதனால், சமீப காலமாக, டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் 'குடி'மகன்கள், ரோட்டோரம் திறந்தவெளியிலேயே மது அருந்தி போதையேற்றிக் கொள்கின்றனர்.இதைக் கண்ட சிலர், டாஸ்மாக் கடைகளுக்கு அருகே, டம்ளர்கள், வாட்டர் பாட்டில், நொறுக்குத்தீனி விற்கும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் அளவுக்கு சூழ்நிலை கெட்டுப் போயுள்ளது.
போதையேறிய நிலையில், ரோட்டிலேயே 'குடி'மகன்கள் கட்டிப்புரண்டு சண்டை போடுவதும் சகஜமாகியுள்ளது. இதை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய போலீசார், கண்டுகொள்ளாமல் இருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு ஆலோசனை

உடுமலை ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லுாரியில், கொரோனா விழிப்புணர்வு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி ஆலோசகர் மஞ்சுளா, தலைமை வகித்தார். முதல்வர் நாட்டுத்துரை, முன்னிலையில், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் சோனை, கொரோனா பாதிப்பு மற்றும் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்றுவதுடன், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஏற்பாடுகளை, என்.எஸ்.எஸ்., அலுவலர் ரகுபதி செய்திருந்தார்.

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

உடுமலை அரசு கலை கல்லுாரியில், 2021-22ம் கல்வியாண்டின், இளநிலைப்பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடந்தது. மொத்தம், 864 இடங்கள் இருந்த நிலையில், 687 பேர், கல்லுாரியில் சேர்ந்தனர்.இதையடுத்து, காலியாக இருந்த, 117 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.அதில், இளநிலை கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில், 41 மாணவர்கள்; இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளில், 19 மாணவர்கள்; தமிழ் இலக்கிய பாடப்பிரிவில், 9 மாணவர்கள்; ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில், 9 மாணவர்கள் என, 78 பேர் சேர்ந்தனர்.

இறுதிகட்ட கலந்தாய்வு, இன்று (8 ம் தேதி) நடக்கிறது. அதற்கான எஸ்.எம்.எஸ்., கிடைக்கப் பெற்ற மாணவர்களும் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என, கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

மக்காச்சோளத்துக்கு சொட்டு நீர் பாசனம்

உடுமலை பகுதியில், கிணற்று பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி, மேற்கொள்ள, சொட்டு நீர், நுண்ணீர் பாசனம் அமைத்துள்ளனர். தற்போது, பரவலாக மக்காச்சோளம் சாகுபடிக்கும், சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., மண்டல பாசனம் இல்லாத காலங்களில், மக்காச்சோளம் சாகுபடி செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே, சொட்டு நீர் பாசனம் அமைத்து, தற்போதைய சீசனில், கிணற்று பாசனம் வாயிலாக மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளோம். இந்த தொழில்நுட்பத்தால், அனைத்து சீசனிலும், மக்காச்சோளம் சாகுபடி செய்ய முடியும்.

தமிழக அரசு, நீரில் கரையும் உரங்கள் எளிதாக கிடைக்க வழிசெய்தால், பயனுள்ளதாக இருக்கும்,'என்றனர்.குடியிருப்பு அருகே குப்பை குவிப்புபொள்ளாச்சி, மகாலிங்கபுரம் நேரு காலனி, இந்திரா நகர் ரோட்டில் ஒரு பக்கம் குடியிருப்புகளும், எதிர் பகுதியில் காலியிடமும் உள்ளது. இந்த காலி இடம் பராமரிப்பு, பாதுகாப்பின்றி இருப்பதால், பலரும் குப்பைக்கழிவுகளை குவித்துள்ளனர்.
இதில், நகராட்சி துாய்மை பணியாளர்களும் அடக்கம். அக்கம் பக்கம் சேகரிக்கும் கழிவுகளை, இங்கு கொட்டிச் செல்வதுடன், அவ்வப்போது தீ வைத்தும் எரிக்கின்றனர்.இதனால், துர்நாற்றம் மற்றும் புகை ஏற்பட்டு, அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நகராட்சி அதிகாரிகள், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X