ரூ.10க்கு அம்மா குடிநீர் மீண்டும் கிடைக்குமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.10க்கு 'அம்மா' குடிநீர் மீண்டும் கிடைக்குமா?

Added : செப் 08, 2021
Share
திருவள்ளூர் : பத்து ரூபாய்க்கு, 'அம்மா குடிநீர்' வினியோகிக்கும் திட்டம் குறித்து, தி.மு.க., அரசு மவுனம் சாதித்து வருகிறது. கும்மிடிப்பூண்டி ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா; மூடு விழா தொடருமா என்ற கேள்விக்கு, இன்றைய மானியக் கோரிக்கையின் போது, பதில் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த, பெத்திக்குப்பத்தில் உள்ள

திருவள்ளூர் : பத்து ரூபாய்க்கு, 'அம்மா குடிநீர்' வினியோகிக்கும் திட்டம் குறித்து, தி.மு.க., அரசு மவுனம் சாதித்து வருகிறது.

கும்மிடிப்பூண்டி ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா; மூடு விழா தொடருமா என்ற கேள்விக்கு, இன்றைய மானியக் கோரிக்கையின் போது, பதில் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த, பெத்திக்குப்பத்தில் உள்ள தமிழக அரசு ஓட்டுனர் பயிற்சி பிரிவு வளாகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2013ல் 'அம்மா' குடிநீர் உற்பத்தி நிலையத்தை திறந்தார். தினமும், 3 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, ஒரு லிட்டர் பாட்டில்களில் அடைத்து, பஸ் நிலையங்களில், 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது பயணியரிடம் வரவேற்பை பெற்றது.இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் பஸ்கள் இயங்காததால், குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் மூடப்பட்டது.அதேநேரம், கும்மிடிப்பூண்டி பகுதியில் பெருகி வரும் தொழிற்சாலைகளால், நிலத்தடி நீர் மட்டம் குறைவதாகவும், அம்மா குடிநீர் ஆலையை மூட வேண்டும் எனவும், உள்ளூர் மக்கள் வலியுறுத்தினர். ஆட்சி மாற்றத்துக்குப் பின், சிறிய பாட்டில்களில், 'கலைஞர் குடிநீர்' என்ற பெயரில் மீண்டும் விற்பனைக்கு வர முயற்சி நடப்பதாகவும் தகவல்கள் பரவின.இதையடுத்து, ஜூலையில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், 'கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பிரச்னைகளை ஆய்வு செய்து, அம்மா குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அரசு முடிவு எடுக்கும்' என்றார்.ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அம்மா குடிநீர் திட்டம் முடங்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:அம்மா குடிநீரின் விற்பனை வருவாயை விட, செலவு அதிகமாகிறது. அப்பகுதியில் எழுந்துள்ள, நிலத்தடி நீர் பிரச்னையால், நிலையத்தை இயக்கவும் எதிர்ப்பு உள்ளது.

இதையறிந்த அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். ஆனால், எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. குடிநீர் நிலையத்தை திறப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், இன்றைய மானிய கோரிக்கையில், அமைச்சர் அறிவிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மாவட்டந் தோறும் ஆலை கும்மிடிப்பூண்டி பகுதியின் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் தண்ணீரை உறிஞ்சி, தமிழகம் முழுதும் வினியோகம் செய்வதைவிட, அனைத்து மாவட்டத்திலும், தலா ஒரு குடிநீர் உற்பத்தி நிலையத்தை அமைக்கலாம். அவற்றில் இருந்து, 'அம்மா குடிநீர்' வினியோகம் செய்யலாம். இதனால் உற்பத்தி செலவும் வெகுவாக குறையும்; போக்குவரத்து துறைக்கு நஷ்டமும் ஏற்படாது.- எஸ்.சுரேஷ்பாபு, கும்மிடிப்பூண்டி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X