புதுச்சேரி : வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தமிழக காவல் துறை காவலர் மற்றும் அவரது தாய் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தேங்காய்த்திட்டு, திலகர் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 25. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார், கொழுந்திராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோன் பிரதீஷ், 28; தமிழக காவல் துறையில் காவலராக உள்ளார். இருவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு செப்., மாதம் திருமணம் நடந்தது.திருமணத்திற்காக 33 சவரன் நகை, 50 ஆயிரம் வெள்ளி பொருட் கள் உள்ளிட்ட பொருட்கள் சீதனமாக கொடுத்துள்ளனர். இருவரும் ஆவடி யில் வசித்தனர். 2016ம் ஆண்டு செப்., மாதம் ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 2018 ஜூன் மாதம் ஆரோன் பிரதீஷ்க்கு பணி மாறுதல் கிடைத்ததால், விழுப்புரத்தில் குடியேறினர்.அப்போது, ஆரோன்பிரதீஷ் வேறொரு பெண்ணுடன் பேசி வருவது குறித்து வெண்ணிலா கேட்டபோது, தான் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக கூறி உள்ளார்.இது குறித்து வெண்ணிலா, கணவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்த போது யாரும் பொருட்படுத்தவில்லை. மேலும், வரதட்சணையாக கார் வேண்டும் என கூறி, 2019ம் ஆண்டு தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.பின்னர், தனது குடும்பத்தாருடன் கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது ஆரோன்பிரதீஷ் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்தார். இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என கூறி, அவரை தாக்கி உள்ளார்.
மேலும், ஆரோன்பிரதீஷ், வெண்ணிலா புகைப்படத்தை சமூக வலைதளத்தில் திருமணமாகாத பெண் என பதிவிட்டுள்ளார்.வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க, புதுச்சேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வெண்ணிலா புகார் அளித்தார்.ஆரோன்பிரதீஷ், அவரது தாயார் மேரி ஸ்டெல்லா மீது வரதட்சணை கொடுமை, தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE