உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
ஆர்.மோகன், வள்ளியூர், அம்பாசமுத்திரம், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆண்டுதோறும் செப்., 17ம் தேதியை தி.மு.க., முப்பெரும் விழாவாக கொண்டாடுவது வழக்கம். அதென்ன முப்பெரும் விழா? அண்ணாதுரை, ஈ.வெ.ரா., ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் தி.மு.க., துவக்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடும்; குதுாகலிக்கும்; ஆனந்த கூத்தாடும்!
பத்து ஆண்டுகளாக பதவியில் இல்லாமல் இருந்த போதே, இந்த முப்பெரும் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடிய தி.மு.க., இந்த ஆண்டு ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது... சும்மா இருக்குமா? இந்த ஆண்டு விழா நிகழ்ச்சி நிரலோடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்காகவும் மற்றும் கொரோனாவை ஒழித்து கட்டியதற்காகவும் தி.மு.க.,விற்கு பாராட்டு விழாவும் நடக்க உள்ளதாம்...

'நிதி இல்லை' என பஞ்சப்பாட்டு பாடும் தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக எப்படி பெருமை பீற்றிக் கொள்ள முடியும் என நினைக்கின்றீரா? செப்., 17ம் தேதி முதல் கோவில்களில் பக்தர்களுக்கு இலவசமாக மொட்டை போடப்படும் என்றும், அன்னதானம் வழங்கப்படும் என்றும், ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருக்கிறார்.
கொரோனா காரணமாக பக்தர்கள் கோவிலில் இறை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்போது இலவசமாக மொட்டை அடிக்கப்படும் என்றால் என்ன அர்த்தம்? தமிழகத்தில் கொரோனா முற்றிலும் ஒழிந்து விட்டது என்பது தானே! தேர்தல் வாக்குறுதியாக அளித்தவற்றை நிறைவேற்ற இயலாது என்பதை தான், தி.மு.க., அரசு சூசகமாக, 'மக்களுக்கு இலவசமாக சோறு போட்டு, மொட்டை அடிக்கிறோம்... ' என அறிவித்து உள்ளது. புரிகிறதா மக்களே!