பாலம் கட்டுமான பணிகளால் குழாய்களில் உடைப்பு: குடிநீர் வினியோகத்தில் சிக்கல்| Dinamalar

பாலம் கட்டுமான பணிகளால் குழாய்களில் உடைப்பு: குடிநீர் வினியோகத்தில் சிக்கல்

Added : செப் 08, 2021
Share
மேட்டுப்பாளையம்;மருதுார் ஊராட்சியில் புதிய பாலங்கள் கட்டுமான பணிகளால், குழாய்களில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் வினியோகத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால், பொதுமக்கள் பாதிக்கின்றனர்.மருதுார் ஊராட்சியில், 20 கிராமங்களும், 30க்கும் மேற்பட்ட லே-அவுட்டுகளும் உள்ளன. சில குடியிருப்பு பகுதிகளுக்கு, இரு நாட்களுக்கு ஒரு முறையும், சில பகுதிகளுக்கு நான்கு

மேட்டுப்பாளையம்;மருதுார் ஊராட்சியில் புதிய பாலங்கள் கட்டுமான பணிகளால், குழாய்களில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் வினியோகத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால், பொதுமக்கள் பாதிக்கின்றனர்.மருதுார் ஊராட்சியில், 20 கிராமங்களும், 30க்கும் மேற்பட்ட லே-அவுட்டுகளும் உள்ளன. சில குடியிருப்பு பகுதிகளுக்கு, இரு நாட்களுக்கு ஒரு முறையும், சில பகுதிகளுக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறையும், சில பகுதிகளுக்கு வாரம் ஒரு முறையும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பாக, சாலை விரிவாக்கம் மற்றும் பாலங்கள் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.மருதுார் ஊராட்சியில், ஏழு இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் பாலங்கள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டதால், போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.மருதுார் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் கூறியதாவது:மருதுார் ஊராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலையில், ஏழு இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்காக குழி தோண்டும்போது, குடிநீர் பிரதான குழாயும், கிராமங்களுக்கு செல்லும் பகிர்மான குழாயும் அடிக்கடி உடைகின்றன. இந்த உடைப்பை தொடர்ச்சியாக சரி செய்யும் பணிகளில், ஊராட்சி குடிநீர் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் குழாய் உடைப்பை தொடர்ச்சியாக சீர் செய்வதால், ஊராட்சி நிதி அதிகளவில் செலவாகிறது. மேலும் பொதுமக்களுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பாலம் கட்ட குழி தோண்டும் போது, குடிநீர் குழாய் உடைந்தால், உடனடியாக குழாய் உடைப்பு, அத்துறையினர் சீரமைப்பு செய்து தரவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X