சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: குடியுரிமை பெற மதம் அடிப்படை அல்ல. மதத்தினை அடிப்படையாக கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது. இலங்கை தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர்.

அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாக பார்க்க வேண்டும். மத்திய அரசு வஞ்சனையுடன் செயல்படுகிறது. மதம், மொழி, இனம் கடந்து ஒற்றுமையுடன் மக்கள் வாழ்கின்றனர். நல்லிணக்கத்திற்கு எதிராக உள்ள இந்த சட்டம் தேவையா? மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களின் கருத்துகளை அரசு கேட்க வேண்டும். ஒற்றுமையை மத நல்லிணக்கத்தை போற்றி பாதுகாக்க இந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுபடுத்தி பார்க்கும் வகையில் சட்டம் உள்ளது . சிஏஏ சட்டம் இலங்கை தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம். இலங்கை தமிழர் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. சட்டப்படியான சமத்துவம், பாதுகாப்பை அரசு மறுக்க முடியாது. குடியுரிமை சட்டம் மதத்தை அடிப்படையாக கொண்டு குடியுரிமை வழங்க வகை செய்வதாக உள்ளது என தெரிவித்த அவர், தீர்மானத்தை ஆதரிக்க தைரியம் இல்லாததால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
பா.ஜ., வெளிநடப்பு
இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பேசும்போது, இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை சட்டம் எதிரானது அல்ல. வேற்றுமையில் ஒற்றுமையை கடைபிடிக்கும் நாடு இந்தியா எனக்கூறினார். தொடர்ந்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE