கோல்கட்டா: மே.வங்கத்தில் பா.ஜ., எம்.பி., அர்ஜூன் சிங் வீடருகே மர்ம நபர்கள் 3 பேர் , 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனர். இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு மாநிலத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் தான் காரணம் என பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.
மே.வங்க மாநிலம் பாரக்பூர் தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் அர்ஜூன் சிங். திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த அவர், கடந்த 2019ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.,வில் சேர்ந்தார். தொடர்ந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது வீடு கோல்கட்டாவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள ஜகதால் பகுதியில் உள்ளது. இன்று(செப்.,8) காலை 6:30 மணியளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள், அர்ஜூன் சிங் வீடருகே 3 வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கதவுகள் லேசாக சேதம் அடைந்தன.

அர்ஜூன் சிங், தற்போது டில்லியில் உள்ளார். வெடிகுண்டு வீச்சு தொடர்பாக தெரிந்தவுடன் உடனடியாக சொந்த ஊர் திரும்புகிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில கவர்னர் ஜக்தீப் தங்கார், மே.வங்கத்தில் வேண்டுமென்றே நடக்கும் வன்முறை சம்பவங்கள் குறைவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. எம்.பி., அர்ஜூன் சிங் வீடருகே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், சட்டம் ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். அவரது பாதுகாப்புக்கு முதல்வர் மம்தா தடை ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
Wanton violence in WB shows no sign of abating.
Bomb explosions as this morning outside residence of Member Parliament @ArjunsinghWB is worrisome on law and order.
Expect prompt action @WBPolice. As regards his security the issue has been earlier been flagged @MamataOfficial.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 8, 2021
இந்த சம்பவத்திற்கு திரிணமுல் காங்கிரஸ் தான் என பா.ஜ., மாநில தலைவர் திலீப் கோஷ் குற்றம்சாட்டி உள்ளார். இதனை மறுத்த திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், பா.ஜ.,வில் நடக்கும் உட்கட்சி மோதல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.