2,300 கட்சிகளின் பதிவு ரத்து? தேர்தல் கமிஷன் அதிரடி!| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

2,300 கட்சிகளின் பதிவு ரத்து? தேர்தல் கமிஷன் அதிரடி!

Updated : செப் 09, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (5)
Share
வெறும் பெயரளவில் உள்ள 2,300க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு தன் பரிந்துரைகளை அளித்துள்ளது.இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி நாடு முழுதும், எட்டு தேசிய கட்சிகள், 53 மாநிலக் கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத 2,638 கட்சிகள், தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ளன.இதில், தேசிய
2,300 கட்சிகளின் பதிவு ரத்து? தேர்தல் கமிஷன் அதிரடி!

வெறும் பெயரளவில் உள்ள 2,300க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு தன் பரிந்துரைகளை அளித்துள்ளது.

இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி நாடு முழுதும், எட்டு தேசிய கட்சிகள், 53 மாநிலக் கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத 2,638 கட்சிகள், தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ளன.

இதில், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளைத் தவிர, பதிவு செய்யப்பட்டுள்ள அங்கீகாரம் பெறாத, 2,638 கட்சிகளில், தோராயமாக 400க்கும் குறைவான கட்சிகள் மட்டுமே தேர்தல்களில் போட்டியிடுகின்றன. அதில் 200 கட்சிகள் தான் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளன. மீதமுள்ள கட்சிகள் வெறும் பெயரளவில் மட்டுமே உள்ளன.தேர்தல் கமிஷனின் புள்ளி விபரப்படி, 2010ல் நாடு முழுதும் 1,112 கட்சிகள் பதிவு செய்திருந்தன. அது 2019ல் 2,301 ஆக உயர்ந்து தற்போது 2,700 ஆக
அதிகரித்துள்ளது.

இவ்வாறு தேர்தல்களில் போட்டியிடாமல், பெயரளவுக்கு உள்ள கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்காக, 1999ல் தேர்தல் கமிஷன் நடவடிக்கை
எடுத்தது. அப்போது, 400 கட்சிகளுக்கு பதிவை ரத்து செய்யப் போவதாக கடிதம் எழுதியது. அதில் பெரும்பாலான கட்சிகளுக்கு அனுப்பிய கடிதம் திரும்பி உள்ளன அல்லது பதில் அளிக்கவில்லை. நீண்ட ஆய்வுக்குப் பின், அந்தக் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.சட்டப்படி, கட்சிகளை பதிவு செய்வதற்கான அதிகாரம் மட்டுமே தேர்தல் கமிஷனுக்கு உள்ளது. பதிவை ரத்து செய்வதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, இதுபோன்ற நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் நிறுத்தி வைத்திருந்தது.

ஆனாலும், கடந்த 2016ல் மத்திய அரசு வாயிலாக கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் நடவடிக்கையில் தேர்தல் கமிஷன் மீண்டும் ஈடுபட்டது. அப்போது கிட்டத்தட்ட 300 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, நாடு முழுதும் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை 1,800ல் இருந்து 1,500 ஆகக் குறைந்தது.ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் கட்சிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. ஏற்கனவே உள்ள கட்சிகளின் பெயர்களுடன் ஒத்துப்போகும் வகையில், பல புதிய
கட்சிகள் துவங்கப்பட்டன. வாக்காளர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி, ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்த, இவ்வாறு புதிய கட்சிகள் பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், தேர்தல்களில் போட்டியிடாமல் பெயரளவுக்கு உள்ள, அங்கீகாரம் இல்லாத, 2,300க்கும் மேற்பட்ட கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கு, தேர்தல்
கமிஷன் மீண்டும் முனைந்துள்ளது.

இதற்காக, கடந்த வாரம் துணை தேர்தல் கமிஷனர் மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு, மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் உயர்
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, பதிவை ரத்து செய்யப்பட வேண்டிய கட்சிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.இந்தக் கட்சிகளில் பெரும்பாலானவை, வருமான வரிச் சலுகை பெறுவதற்காகவும், பண மோசடியில் ஈடுபடுவதற்காகவும் மட்டுமே தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.தற்போதுள்ள சட்டத்தின்படி, இந்தக் கட்சிகள் தங்களுடைய வருமான வரிக் கணக்கை, வருமான வரித் துறையில் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், வருமான வரித் துறையின் கணக்கின்படி, 248 அரசியல் கட்சிகள் கடந்த நிதிஆண்டுக்கான, ஆண்டு வருவாய் கணக்கை தாக்கல் செய்யவில்லை. நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டும், அதற்கு பதிலளில்லை.
'கட்சி என்ற பெயரில் வரி மோசடியுடன், பண மோசடியிலும் சிலர் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலும், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைதன்மையை ஏற்படுத்தவும், தேர்தல்களில் போட்டியிடாமல் பெயரளவில் உள்ள கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும்' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விரைவில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு, 2,300 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.- புதுடில்லி நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X