இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்நான்கு பெண்களுடன் திருமணம் 'கல்யாண மன்னனுக்கு' வலை தாம்பரம் : தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், மாடம்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்தவர், வாணி, 39. இவர், தற்போது நெசப்பாக்கம், மாரியம்மன் கோவில் குறுக்கு தெருவில், வசித்து வருகிறார்.இவர், நேற்று முன்தினம் இரவு, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அளித்துள்ள புகார்


தமிழக நிகழ்வுகள்



நான்கு பெண்களுடன் திருமணம் 'கல்யாண மன்னனுக்கு' வலை




latest tamil news


தாம்பரம் : தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், மாடம்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்தவர், வாணி, 39. இவர், தற்போது நெசப்பாக்கம், மாரியம்மன் கோவில் குறுக்கு தெருவில், வசித்து வருகிறார்.இவர், நேற்று முன்தினம் இரவு, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அளித்துள்ள புகார் மனு:

திருமண வரன் பார்க்கும் இணையதளம் வாயிலாக, பிரேம் ராஜ் என்பவர், கடந்தாண்டு எனக்கு அறிமுகமானார். வடபழனியில் 2020, அக்.,29ல் எனக்கும், அவருக்கும் திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே, எனது, 30 சவரன் நகைகளை வாங்கி கொண்டார்.பின், என்னை மிரட்டி, ஆதார் கார்டு மற்றும் கையெழுத்தை பெற்று, வங்கிகள் மற்றும் கடன் தரும் நிறுவனங்கள் வாயிலாக, 20 லட்சம் ரூபாயும், என் நண்பர்களிடம், 5 லட்சம் ரூபாயையும், என் பெயரில் கடனாக பெற்றார்.

அவர், என்னைப் போலவே, மூன்று பெண்களை திருமணம் செய்து, ஏமாற்றியுள்ளார். அவர் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், அவர் வாங்கிய கடன்களில் இருந்து, என்னை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




தொற்றால் பாதிக்கப்பட்ட அதிகாரி வீட்டில் கொள்ளை


சேலையூர்--தாம்பரம் அடுத்த வேங்கைவாசல், சந்தோஷபுரம், ஆதிநாத் அவென்யூ பிரதான
சாலையைச் சேர்ந்தவர் கந்தசாமி, 69; ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மனைவி விஜயலட்சுமி, 64.இருவருக்கும் செப்., 1ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் வீட்டு வேலைக்காரர் ராஜி, நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் பணிக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அவர், சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் ஆய்வு செய்ததில், 15 சவரன் நகைகள், 4,000 ரூபாய் ரொக்கம், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப், 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 'ஐ பாட்', 10க்கும் மேற்பட்ட பட்டு சேலைகள், மூன்று உயர் ரக வெளிநாட்டு 'வாட்ச்', இரண்டு தங்க பதக்கங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போயிருந்தன. கந்தசாமியின் மருமகன் மதன், 40 அளித்த புகாரில், போலீசார் விசாரிக்கின்றனர்.


பெண்ணிடம் சில்மிஷம் தலைமை காவலர் கைது


போரூர்-இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போக்குவரத்து காவலரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போரூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் குமரன், 50. இவர் அய்யப்பன்தாங்கலில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் பணி முடிந்து, அதே பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். அங்கு வந்த இரண்டு இளம் பெண்களில், ஒரு பெண்ணின் தோள் மீது கையை வைத்து, காவலர் குமரன் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த பெண் தன்னிடம் போக்குவரத்து காவலர் சில்மிஷம் செய்ததாக கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போரூர் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


latest tamil news



செயின் பறித்த சிறுவன் கைது


திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சிறுவனை, போலீசார்
கைது செய்தனர்.திருவல்லிக்கேணி போலீசார், நேற்று முன்தினம் இரவு பல்லவன் சாலையில்
கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அங்கு, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த
சிறுவனை பிடித்து விசாரித்தனர்.இதில், அண்ணா நகரைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் என்பதும்,
செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அச்சிறுவன் நேற்று சேர்க்கப்பட்டான்.


சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் தொழிலாளி மீது 'போக்சோ'

கடலுார் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி மீது 'போக்சோ' சட்டத்தில்

போலீசார் வழக்குப் பதிந்து தேடுகின்றனர்.

கடலுார் மாவட்டம், வடலுார் போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 40; வடலுாரில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனி தொழிலாளி. இவர், பிளஸ் 2 முடித்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனையறிந்து, கடந்த 25ம் தேதி நியாயம் கேட்க சென்ற சிறுமியின் தாயிடம் நடந்து சம்பவத்தை வெளியில் கூறினால் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.மறுநாள் சிறுமியை, வடலுார் செல்லியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று சந்தோஷ் திருமணம் செய்து கொண்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து சந்தோஷை தேடி வருகின்றனர்.


போலீஸ் மீது தாக்குதல்; திருப்பூரில் 4 பேர் கைது


திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டு அர்ஜுனன், போலீஸ்காரர் சந்திரசேகர், நேற்று முன்தினம் இரவு பாண்டியன் நகரில் ரோந்து சென்றனர்.

அங்குள்ள பால்கோவா நிறுவனத்தில் பணிபுரியும் சரத்குமார், 29, சரண்ராஜ், 32, பஷீர் அகமது, 33 ஆகியோரை நிறுத்தி பெயர், விபரம் விசாரித்தனர்.'நள்ளிரவில் வெளியே சுற்றக் கூடாது; முக கவசம் இல்லாமல் வெளியே வரக் கூடாது' என எச்சரித்து, வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தினர். இந்நிலையில், மூவரும், நண்பர் செபாஸ்டின், 50 என்பவருடன் திரும்பிவந்தனர்.அர்ஜுனன் கிளம்பி சென்றுவிட, போலீஸ்காரர் சந்திரசேகரிடம் தகராறில் ஈடுபட்டனர். அவரை பீர் பாட்டிலால் தாக்கி, 'வாக்கி டாக்கி'யை பறிக்க முயன்றனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்த சந்திரசேகர், உடன் பணிபுரியும் மற்றொரு போலீஸ்காரர் மாதேஸ்வரனுக்கு மொபைல் போனில் தகவல் அளித்தார். அவர் தட்டி கேட்டபோது, அவரையும், கல், கட்டையால் தாக்கிவிட்டு தப்பினர்.காயமடைந்த போலீஸ்காரர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நால்வரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


இளைஞர் வங்கி கணக்கிலிருந்து நுாதன முறையில் பணம் மோசடி


விழுப்புரம் : விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அருண்ராஜா,44; இவரை கடந்த மே 29ம் தேதி மொபைலில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், தான் தேசியமயமாக்கபட்ட வங்கியின் கிரெடிட் கார்டு கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், உங்களுடைய கார்டின் காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்ய கோரி சில விபரங்களை கேட்டுள்ளார்.

அந்த நபர் கேட்ட விபரங்களை அருண்ராஜா கொடுத்துள்ளார். பின், அருண்ராஜாவின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து இரு தவணைகளாக 99 ஆயிரத்து 812 ரூபாய், 43 ஆயிரத்து 749 ரூபாய் என மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 561 ரூபாயை, மர்ம நபர் எடுத்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருண்ராஜா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


காளை குத்தி இளைஞர் பலி

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியைச் சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு மகன் ராஜா 19. இவர், ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் போது, காளை முட்டியதில் காயம்
அடைந்தார். சிகிச்சைக்காக மதுரை மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


இந்திய நிகழ்வுகள்



பச்சிளம் ஆண் குழந்தையை, பெற்றோரே புதரில் வீசியெறிந்த சம்பவம்


சிக்கமகளூரு : சிக்கமகளூரு மூடிகரே, பிளகுளா கிராமத்தில் வசிக்கும் சந்துரு என்பவர் நேற்று முன் தினம் மாலை, நடந்து செல்லும் போது, புதரிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

அங்கு சென்று பார்த்த போது, பச்சிளம் ஆண் குழந்தை இருப்பது தெரிந்தது. குழந்தையை காப்பாற்றி, அருகிலுள்ள மூடிகரே அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். போலீசார் விசாரணையில், மூடிகரே கிராமம் ஒன்றில் வசிக்கும், கூலி வேலை செய்யும் 25 வயது நபரின் இரண்டாவது மனைவிக்கு, 13 நாட்களுக்கு முன், மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன் தினம், குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

ஊருக்கு செல்லும் வழியில், பிளகுளா அருகில் புதரில் குழந்தையை வீசி எறிந்தனர். அக்கம், பக்கத்தினரிடம் மருத்துவமனையில் குழந்தை இறந்ததாக பொய் கூறினர்.ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதால், மற்றொரு குழந்தையை வளர்ப்பது கஷ்டம் என, புதரில் வீசி எறிந்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது


நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண் பலாத்காரம்


மும்பை : வெப்' தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷர். 42 வயதான ஆஷிஷ், 'வெப்' தொடரையும் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், 'வெப்' தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ஆஷிஷ் மீது கடந்த மார்ச் மாதம் 21 வயது நிரம்பிய இளம் பெண் மும்பை கோரிகன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


பா.ஜ., எம்.பி.வீடு மீது வெடிகுண்டு வீச்சு


கொல்கத்தா : மேற்குவங்காளம் பாரக்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. அர்ஜூன் சிங். திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த அவர், கடந்த 2019ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.கவில் சேர்ந்தார். தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அர்ஜூன் சிங் வீடு கொல்கத்தாவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள ஜகதால் பகுதியில் உள்ளது. நேற்று காலை 6:30 மணியளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள், அர்ஜூன் சிங் வீட்டருகே 3 வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கதவுகள் லேசாக சேதம் அடைந்தன.அர்ஜூன் சிங், தற்போது டெல்லியில் உள்ளார். மேற்குவங்காளத்தில் வேண்டுமென்றே நடக்கும் வன்முறை சம்பவங்கள் குறைவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என மாநில கவர்னர் ஜக்தீப் தங்கார் கூறினார்.


உலக நிகழ்வுகள்


காஸ் கசிந்து வெடிவிபத்து; இருவர் பலி


மாஸ்கோ: ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள நோஜின்ஸ்க் நகரில் 9 மாடிகளைக் கொண்ட குடியிருப்பில் 73 வீடுகளில் 200-க்கும் அதிகமானோர் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிவு காரணமாக பயங்கர வெடிப்பு நேரிட்டது. இந்த வெடிப்பு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மற்றும் 3-வது தளம் இடிந்து விழுந்தது. விபத்தின்போது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 173 பேரை பத்திரமாக மீட்டனர். எனினும் இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிறுவர்கள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.



சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்

இஸ்ரேலிய சிறையில் இருந்து பாலஸ்தீன கைதிகள் தப்பியதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் தூங்கியதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


கில்போவா : இஸ்ரேலிய நாட்டில் கில்போவா என்ற இடத்தில் அதி உயர் பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையை இஸ்ரேல் அமைத்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு இந்த சிறையில் இருந்து சுரங்கம் அமைத்து 6 பாலஸ்தீன கைதிகள் தப்பிச் சென்றனர். கைதிகள் சுரங்கப் பாதையில் இருந்து சுற்றுச் சுவரைத் தாண்டி வெளியேறும் காட்சிகளுடன், அதனைக் கண்காணிக்கும் அதிகாரிகள் தூங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X