ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சி தாராபுரம் ரோட்டின் கிழக்கு பகுதியில் சின்னக்குளம் அமைந்துள்ளது. இக்குளம் ஆக்கிரமிப்புக்கு முன்பு 56 ஏக்கரில் அமைந்திருந்தது. நாளடைவில் சுருங்கி, சுருங்கி தற்போது நீர் பிடிப்புப் பகுதி 26 ஏக்கராக மாறிவிட்டது.
இக்குளத்தை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் சாகுபடி நடந்து வருகிறது.ஒட்டன்சத்திரம் மலை அடிவாரத்தில் இருந்து இந்த குளத்திற்கு நீரை கொண்டு சேர்க்கும் ஓடை செல்கிறது. இப்பகுதியில் பலத்த மழை பெய்யும் பொழுது இந்த ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். பல ஆண்டுகளுக்கு முன்பு நகரம் விரிவடையாமல் இருந்தபோது குளத்தில் மழைநீர் சேமிக்கப்பட்டு வந்தது.நாளடைவில் கால மாற்றம் காரணமாக நகரின் கழிவுநீர் இந்த ஓடையில் சென்று ஒட்டன்சத்திரத்தின் 'கூவமாக' காட்சியளிக்கிறது.
குளம் நிரம்பினால் மறுகால் செல்லும் நீர், ஓடை வழியாக சென்று நங்காஞ்சி ஆற்றில் கலக்கும்.ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குப்பைகளை கொட்டுவதில் இருந்து சின்னக்குளத்தை பாதுகாக்கவும் உருவானதுதான், பாசன விவசாயிகள் சங்கம். இதனை பாதுகாக்க பாசன விவசாயிகள் பல காலமாக போராடி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் குளத்தை மீட்டெடுக்க உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் சொல்வதை கேளுங்கள்:ஓடை இருப்பதே தெரியவில்லை நல்லசாமி, தலைவர், சின்னக்குளம் பாசன விவசாயிகள் சங்கம்: குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பலமுறை வலியுறுத்தியும் எதுவும் நடக்கவில்லை. குளத்திற்கு நீரைக் கொண்டு சேர்க்கும் மற்றும் நீர் வெளியேறி மறுகால் செல்லும் ஓடையும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. முன்பு மாட்டு வண்டியில் மறுகால் ஓடையில் சென்றுள்ளேன். ஆனால் தற்போது ஓடை எங்கு உள்ளது என்றே தெரியாத அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கழிவுகள் சேரும் இடம் ஆர்.பி.ராஜேந்திரன், மாநிலச் செயலாளர், நீரினை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்க தலைவர்கள் கூட்டமைப்பு: சின்னக்குளம் நகரின் மையப் பகுதியில் இருப்பதால் சாக்கடை கழிவுகள் சேகரமாகும் இடமாக மாறிவிட்டது. குளத்தில் ஏராளமான செடி, கொடிகள் உள்ளன. அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு காரணமாக குளம் பாதியாக சுருங்கி விட்டது. சின்னக்குளத்தை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE