புதுடில்லி: இந்தியாவில் போர்டு நிறுவனம், தங்களது வாகன உற்பத்தி ஆலைகளை மூட முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவைச்சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான போர்டு, இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளது. சுமார் 2 பில்லியன் டாலர் அளவில் நஷ்டம் உள்ளிட்ட பிரச்னை காரணமாக போர்டு நிறுவனம், இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் போர்டு நிறுவன ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் இந்தியாவிலும் ஆலைகளை மூட உள்ளது. இம்முடிவை அமல்படுத்த குறைந்தது ஓராண்டு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனையை மட்டும் இந்தியாவில் தொடர போர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை போர்டு நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. முன்னதாக ஜெனரல் மோட்டாரஸ், ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது உற்பத்தி ஆலைகளை மூடியது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE