எதிர்க்கட்சி தலைவர் பழனி சாமி: பத்து ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் மதச் சண்டை, ஜாதி சண்டை, நில அபகரிப்பு, ரவுடிகள் ராஜ்ஜியம் இல்லை. போலீசார் சுதந்திரமாக செயல்பட்டனர். கட்டப்பஞ்சாயத்து கிடையாது. வியாபாரிகள், தொழிலதிபர்கள், தொழிலாளர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
அமைச்சர் துரைமுருகன்: உங்கள் ஆட்சியில் தான் ரவுடிகள், கத்தியால், 'கேக்' வெட்டினர். வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து, முட்டிக்கு கீழே சுடுவது தான் போலீசாரின் வழக்கம். உங்கள் ஆட்சியில், துாத்துக்குடியில் ஜீப்பில் ஏறி நின்று சுட்ட சம்பவம் நடந்தது.
பழனிசாமி: தி.மு.க., ஆட்சியில் எத்தனை துப்பாக்கி சூடு நடந்தது என்பது, எனக்கும் தெரியும். முதல்வராக இருந்த கருணாநிதி, 'சூட் டூ கில்' என்ற கொள்கை தான் கடைபிடிக்கப்படுவதாகவும், கண்ணீர் புகை, தடியடி பிரயோகம் நடத்திய பின் தான், துப்பாக்கிச் சூடு நடப்பதாகவும், உயிரிழப்பு ஏற்படுமானால் போலீஸ் பொறுப்பல்ல என்றும் பேசி இருக்கிறார்.
எனவே, கலவரங்களை அடக்கும் சூழ்நிலையில், துப்பாக்கி பிரயோகம் தடுக்க முடியாததாகி விடுகிறது. இதெல்லாம், அந்த சூழ்நிலைக்கு ஏற்பட நடக்கிறது. எந்த அரசிற்கும், யார் மீதும் தணிப்பட்ட விரோதம் கிடையாது. இதை உங்கள் தலைவரே, அனுபவ ரீதியாக பேசி இருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின்: நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் சாதாரணமான இடம் அல்ல. முதல்வராக இருந்த ஜெயலலிதா, தங்கி இருந்திருக்கிறார். முதல்வரின் முகாம் அலுவலகமாக அறிவிக்கப்பட்டு, கோப்புகளையும் பார்த்துள்ளார். அங்கு நடந்த குற்றங்களை எல்லாம் எதில் சேர்ப்பது? கண்காணிப்பு கேமரா அனைத்து இடங்களிலும் பொருத்த வேண்டும் என, நீங்கள் கூறினீர்கள்.ஆனால், அங்கு பொருத்தி இருந்த கேமரா அப்புறப்படுத்தப் பட்டுள்ளது; இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? சம்பவம் நடந்தபோது, நீங்கள் தான் முதல்வர். அப்போது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
பழனிசாமி: ஜெயலலிதா மறைந்து விட்டார். வேறொருவருக்கு சொத்து போய் விட்டது. முதல்வராக ஜெயலலிதா இருந்திருந்தால், கோடநாட்டிற்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்திருப்பர்.
முதல்வர்: சம்பவம் நடந்த பின், நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்தீர்கள். என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
பழனிசாமி: அது, தனியார் சொத்து. ஜெயலலிதா பொறுப்பில் இருக்கும் வரை, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதன்பின், போலீஸ் பாதுகாப்பு இல்லை.
முதல்வர்: இந்த வழக்கின் விசாரணை நடக்கக் கூடாது என்று, நீதிமன்றத்திற்கு ஏன் சென்றீர்கள்; விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவு போட்டதும், தடை கேட்டு, உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது நீங்கள் தான்.
பழனிசாமி: அந்த சம்பவம் நடந்த உடனே, வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வேண்டும் என்றே குற்றம் சுமத்துவதற்காக, நீங்கள் பேசுகிறீர்கள்.
முதல்வர்: விசாரணைக்கு ஏன் தடை கேட்டீர்கள் என்பது தான் என் கேள்வி.
பழனிசாமி: நாங்கள் எங்கு போய் கேட்டோம். வழக்கில், 43க்கும் மேற்பட்ட சாட்சிகள் உள்ளனர். அவர்கள் கேட்டுள்ளனர். அதை ஏன் தொடர்புபடுத்தி பேசுகிறீர்கள். நீங்கள் வழக்கை நடத்துங்கள்; புலன் விசாரணை நடத்துங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நாங்கள் தடை செய்ததாக குற்றம் சாட்டுகிறீர்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு,நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
வேண்டும் என்றே திட்டமிட்டு, எங்கள் மீது குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும். எங்களுக்கும், அதற்கும் சம்பந்தம் கிடையாது. அது, தனிப்பட்ட பிரச்னை. அரசியல் காழ்ப்புணர்ச்சி யோடு பேசுவது கூடாது. உண்மை நிலையை கண்டறியுங்கள்; யாரும் தடை செய்யவில்லை. அ.தி.மு.க., அரசு, சட்டம் ஒழுங்கை காப்பதில் முதன்மையாக விளங்கியது. இப்போது, பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக செய்தி வருகிறது. லோடு, லோடாக, 'குட்கா' வருகிறது.
முதல்வர்: குட்கா இருக்கிறது; அது இன்னும் ஒழிக்கப்படவில்லை. அதை ஒழிக்கும் முயற்சியில் தொடர்ந்து, அரசு ஈடுபடுகிறது. உங்கள் ஆட்சியில், குட்கா வாயிலாக யார் யார் லஞ்சம் பெற்றனர் என்பது தெரியும். போலீஸ் அதிகாரிகளில் துவங்கி, அமைச்சர் வரை, இதில் இடம்பெற்றுள்ளனர். அதை மறந்து விடக் கூடாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE