தமிழக கோவில்களில், பக்தர்களின் தட்டுக்காசை மட்டுமே நம்பி பல ஆண்டுகளாக இறை பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான, 'அதிகப்படி' குருக்கள், பட்டாச்சாரியார்களின் மனக்குறையை தமிழக அரசு தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து, அறநிலையத் துறை அமைச்சராக சேகர்பாபு, கமிஷனராக குமரகுருபரன் பொறுப்பேற்ற பின், இத்துறைக்கு விடிவு பிறந்துள்ளது. 100 நாட்களில் எண்ணற்ற மாற்றங்களை கண்டுள்ள அறநிலையத் துறை, வெளிப்படையாக செயல்படத் துவங்கி
உள்ளது.
'பட்டாச்சாரியார்'
தொழில்நுட்ப யுக்திகள் வாயிலாக ஊழலுக்கான ஓட்டைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கப்பட்டு வருகின்றன.கோவில் சீரமைப்பு, ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, வளர்ச்சிப் பணி என மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள், பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. அதேவேளையில், அர்ச்சகர் நியமனம், தமிழில் அர்ச்சனை போன்ற நடவடிக்கைகள் பெரும் விவாதப் பொருளாகி, விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.தமிழில் அர்ச்சனை என்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே, பல கோவில்களில் நடைமுறையில் இருக்கிறது; பல்வேறு ஜாதியினரும் அர்ச்சகர்களாக இருப்பது, விஷ்வ ஹிந்து பரிஷத்தின், 'கிராம கோவில் பூஜாரிகள் பேரவை' நடத்திய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிராமணர்கள் அர்ச்சகர்களாக 10 சதவீதத்துக்கும் குறைவான கோவில்களில் தான் உள்ளனர்; இதுதான் எதார்த்தம்.பெருமாள் கோவிலில் உள்ளவர்கள், 'பட்டாச்சாரியார்' என்றும், சிவன் கோவில்களில் உள்ளோர் குருக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அர்ச்சகர்களிலேயே மூன்று வகை உண்டு. ஒன்று, பரம்பரையாக வரும் அர்ச்சகர். இரண்டு, ஹிந்து சமய அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்டு ஊதியம் பெறும் அர்ச்சகர்கள். மூன்றாவது, 'அதிகப்படி' குருக்கள்.
கடும் பாதிப்பு
தமிழக கோவில்களில் உள்ள அர்ச்சகர்களில் 90 சதவீதம் பேர், அதிகப்படி குருக்கள். இவர்களின் வருமானம், பக்தர்கள் வழங்கும் தட்டுக்காசு மட்டுமே.தமிழக அரசின், சமீபத்திய அர்ச்சகர் நியமன நடவடிக்கையால், அதிகப்படி குருக்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாயினர்.இவர்கள், கோவில்களில் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்படாதவர்கள் என்பதால், அந்தந்த கோவில்களில் ஒரு ரூபாய் செலுத்தி, பதிவு செய்து, உப சன்னிதிகளில் சக அர்ச்சகர் விடுப்பு, சுழற்சி முறையில் பூஜைகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த அதிகப்படி குருக்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய, 25 ஆண்டுகளுக்கும் மேலாக மன்றாடியும், எந்த ஆட்சியாளர்களும் செவிசாய்க்கவில்லை. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகப்படி குருக்களாகவே வறுமையில் துவண்டும், ஓய்வு பெற்றும், காலமானவர்கள் பலர் உண்டு.இவர்கள் இந்த பரிதாப நிலையில் தத்தளிக்கும் சூழலில் தான், அறநிலையத்துறை சார்பில் புதிதாக, 58 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காணிக்கை
இது, பல்லாயிரக்கணக்கான அதிகப்படி குருக்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறியதாவது:தமிழக கோவில்களில் பல்லாயிரக்கணக்கான அதிகப்படி குருக்கள், குறைந்தபட்சம் ஐந்து முதல் 35 ஆண்டுகளாக, இறை தொண்டாற்றி வருகிறோம். எங்களின் ஒரே வருமானம், பக்தர்களின் தட்டு காணிக்கை மட்டுமே.நகர்ப்புறங்களிலேயே பெரிய கோவில்கள் தவிர மற்ற கோவில்களில் மாதம், 3,000 முதல் 5,000 ரூபாய் வரை தான் வருமானம் கிடைக்கும். நகராட்சிகள் அளவிலான கோவில்களில், 1,000 ரூபாய் தான் கிடைக்கும்.இன்றளவும், கிராமங்களில் உள்ள எண்ணற்ற கோவில்களில், மாத வருமானம் 500 ரூபாய்க்கும் குறைவாகப் பெற்று, வாழ்க்கை நடத்தும் அதிகப்படி குருக்களும் இருக்கின்றனர்.
இவர்களுக்கு, வேறு தொழிலும் தெரியாது என்பதால், இறை பணியை தொடர்கின்றனர்.கிராம மக்களிடம் பல்வேறு உதவிகளைப் பெற்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான அவல நிலையில், தமிழகத்தில், 40 ஆயிரம் அதிகப்படி குருக்கள் இருக்கின்றனர். பணி நிரந்தரம் செய்யக் கோரி பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.
ஆனால், கோவில்களில் பூஜை செய்த அனுபவம் இல்லாத 58 பேர், நேரடி அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்; இது நியாயமல்ல.
புதிய அர்ச்சகர்கள்
எங்கள் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து அமைச்சர் சேகர்பாபு தீர்வு காண வேண்டும். வருங்காலத்தில் அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது, அதிகப்படி குருக்களாக மட்டுமே நியமிக்க வேண்டும். தற்போது, ஐந்து ஆண்டு களுக்கு மேலாக அதிகப்படி குருக்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதன் பிறகே, புதிய அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதோ ஒரு உதாரணம்!
விருதுநகர் மாவட்டம், சாத்துார் வெங்கடாஜலபதி கோவில் பட்டர் ரங்கநாதன், 71. கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். இவரது ஒப்பந்தமும் முடிந்துவிட்டது. இவருக்கு மாதச் சம்பளமாக, 4,000 ரூபாய் வழங்கப்பட்டது.புதிய அர்ச்சகராக, துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், புதுாரைச் சேர்ந்த சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மாதச் சம்பளம் 11 ஆயிரத்து 200 ரூபாய். புதிதாக நியமிக்கப்படுவோருக்கு ஊதியம் உயர்த்தி வழங்குவதை யாரும் குறை கூறமாட்டார்கள். ஆனால், அதேவேளையில், ஆண்டாண்டு காலமாக இதே பணியாற்றி வருவோருக்கு மிகக்குறைவான வருவாய் கிடைப்பது தான், மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் பாதிக்கப்பட்டோர். -- நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE