பாரம்பரிய இசை கருவிகளை வகைப்படுத்தி அரசு பிறப்பித்த வரிவிலக்கு உத்தரவு சரியே | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'பாரம்பரிய இசை கருவிகளை வகைப்படுத்தி அரசு பிறப்பித்த வரிவிலக்கு உத்தரவு சரியே'

Added : செப் 10, 2021
Share
சென்னை:பாரம்பரிய இந்திய இசை கருவிகளுக்கு, விற்பனை வரி விலக்கு அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னையைச் சேர்ந்த ராடெல் எலக்ட்ரானிக் நிறுவன மேலாளர் தாக்கல் செய்த மனு: எங்கள் நிறுவனம், இந்திய இசை கருவிகளை தயாரித்து விற்பனை செய்கிறது. மின்னணு இசை கருவித் துறையில் நாங்கள்தான் முன்னோடி. 40 ஆண்டுகளாக இயங்கி

சென்னை:பாரம்பரிய இந்திய இசை கருவிகளுக்கு, விற்பனை வரி விலக்கு அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னையைச் சேர்ந்த ராடெல் எலக்ட்ரானிக் நிறுவன மேலாளர் தாக்கல் செய்த மனு: எங்கள் நிறுவனம், இந்திய இசை கருவிகளை தயாரித்து விற்பனை செய்கிறது. மின்னணு இசை கருவித் துறையில் நாங்கள்தான் முன்னோடி. 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். இந்திய இசை கருவிகள் விற்பனைக்கு வரி விலக்கு அளிக்க கோரினோம்.

கடந்த 2004ல் அரசு பிறப்பித்த உத்தரவில், அனைத்து இந்திய இசை கருவிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. அதன்பின், 2006ல் பிறப்பித்த உத்தரவில், குறிப்பிட்ட கருவிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இவ்வாறு இசை கருவிகளை வகைப்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் வழக்கறிஞர் நன்மாறன் ஆஜராகி, ''தலைமுறை தலைமுறையாக இசைக் கருவிகளை தயாரிக்கும் ஏழை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக வரி விலக்கு அளிக்கப் பட்டு உள்ளது. மனுதாரர் நிறுவனம், வணிக ரீதியில் பெரிய அளவில் தயாரித்து, மின்னணு இசை கருவிகளை விற்பனை செய்கிறது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:கடந்த 2004ல் அரசு பிறப்பித்த உத்தரவில், பொதுவாக இந்திய இசை கருவிகளுக்கு வரி விலக்கு அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் சில பிரச்னைகள், முரண்பாடுகள் இருந்ததால், அடுத்ததாக2006ம் ஆண்டில் மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இரண்டாவதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இந்திய இசை கருவிகளான நாதஸ்வரம், வீணை, வயலின், தம்புரா, மிருதங்கம், கடம், தவில், மகுடி, சங்கு, கொம்பு, உடுக்கு என 40க்கும் மேற்பட்ட கருவிகள், அதன் பாகங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.அவற்றுக்கு, விற்பனை வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் விபரங்கள் வழங்கப்படவில்லை; இரண்டாவது உத்தரவில், எந்தெந்த கருவிகள் என, விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.


கோர முடியாது

அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவிலும், ஏழை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கத் தான் வரி விலக்கு எனக் கூறப்பட்டுள்ளது.மின்னணு முறையிலான இசை கருவி என்றால், அதை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட இந்திய இசை கருவியாக கருத முடியாது. வரி விலக்கு அளிக்கப்படுவது ஒரு சலுகை. அதை உரிமையாக கோர முடியாது. சட்டத்துக்கு உட்பட்டு தான் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், பெரிய தயாரிப்பாளர்கள் லாபம் அடைய ஏதுவாக, நியாயமற்ற முறையில் வரி விலக்கு அளிக்க முடியாது. விளிம்பு நிலை, ஒடுக்கப்பட்ட, ஏழை, எளியவர்களின் மேம்பாட்டுக்கு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்; பெரிய அளவில் லாபம் ஈட்டுபவர்களுக்காக அல்ல.எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X