பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவை போல ரயில்வே அமைச்சர் தமிழகத்திலும் நியமிக்கப்படுவாரா?

Added : செப் 10, 2021
Share
Advertisement
அண்டை மாநிலமான கேரளா, ரயில்வே துறை வளர்ச்சியில் தமிழகத்தை விட 20 ஆண்டுகள் முன்னோக்கி சென்றுஉள்ளது. எனவே, அங்கு உள்ளது போல, தமிழகத்திலும் ரயில்வே அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.கோரிக்கைஇதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க செயலர் எட்வர்டு ஜென்னி கூறியதாவது: கேரளாவில் பல ஆண்டுகளாக, ஏராளமான புதிய ரயில்வே திட்டங்கள்

அண்டை மாநிலமான கேரளா, ரயில்வே துறை வளர்ச்சியில் தமிழகத்தை விட 20 ஆண்டுகள் முன்னோக்கி சென்றுஉள்ளது. எனவே, அங்கு உள்ளது போல, தமிழகத்திலும் ரயில்வே அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.


கோரிக்கை

இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க செயலர் எட்வர்டு ஜென்னி கூறியதாவது: கேரளாவில் பல ஆண்டுகளாக, ஏராளமான புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கேரளாவில், ரயில்வே வளர்ச்சியை கவனிக்க மாநில அமைச்சராக அப்துல் ரஹ்மான் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர், விளையாட்டு துறை அமைச்சராகவும் உள்ளார். அதுபோல, தமிழக அரசிலும், ரயில்வே வளர்ச்சியை கவனிக்க தனித்துறை ஏற்படுத்தப்பட்டு, அதற்கு ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும்.தற்போது இருக்கும் அமைச்சர்களில், ஒருவருக்கு கூடுதலாக ரயில்வே துறையை ஒதுக்கலாம்.


ஒவ்வொரு ஆண்டும்

மத்திய பட்ஜெட்டுக்கு முன், கேரள மக்கள், ரயில்வே திட்டங்கள் தொடர்பாக அளிக்கும் கோரிக்கைகளை தொகுத்து பட்டியல் தயார் செய்யப்படுகிறது. மத்திய ரயில்வே அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை சந்திக்கும், கேரள ரயில்வே அமைச்சர் அந்த பட்டியலை கொடுக்கிறார். அந்த கோரிக்கைகளில் பலவற்றை மத்திய அரசும் ஏற்கிறது. இதனால், கேரளாவுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் வருகின்றன.


'கே- ரயில்'



கேரளாவில், மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள, 'கே- ரயில்' எனப்படும், கேரளா ரயில் வளர்ச்சி கழகம் சார்பில், பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதுபோல, கர்நாடகாவிலும் ஏராளமான ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. காரணம், ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற, அம்மாநில அரசு எடுக்கும் முயற்சி.

அங்கே ரயில்வே திட்டங்களுக்காக, மாநில அரசு கொடுக்கும் நிலம் அனைத்தும் இலவசம். திட்ட தொகையில் பாதியை மாநில அரசு, மத்திய அரசுக்குக் கொடுத்து விடுகிறது. தமிழகத்திலும், இந்த நிலை வர வேண்டும். தமிழகத்தின் ஒரு சில மாவட்ட ரயில் பாதைகள், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டத்தின் கீழ் வருகின்றன. இந்த பகுதிகள் தொடந்து புறக்கணிக்கப்படுகின்றன. அதை நிவர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


ரயில் அடர்த்தி எவ்வளவு?

மக்கள் தொகை அடர்த்தியை போன்று, ரயில் அடர்த்தியையும் கணக்கிடுகின்றனர். ரயில் அடர்த்தி என்பது 1000 சதுர கி.மீ., பரப்பளவில், எவ்வளவு ரயில் பாதைகள் உள்ளன என்பதை வைத்து கணக்கிடப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 32.07 என்ற அளவிலேயே ரயில் அடர்த்தி உள்ளது. இதை படிப்படியாக 50 வரை உயர்த்த வேண்டும்.

ரயில் அடர்த்தியில் உ.பி., பஞ்சாப், ஹரியானா, பீஹார், மேற்கு வங்கம் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.


-10 திட்டங்களின் கதி என்ன?

ரயில்வே வாரியம் ஆறு மாதங்களுக்கு முன், தெற்கு ரயில்வேக்கு கடிதம் அனுப்பியது. அதில், தெற்கு ரயில்வேக்கு உள்ளே நடக்கும் புதிய பாதை திட்டங்களில் 10 திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டாம் என கூறப்பட்டு இருந்தது. அதோடு, அனைத்து பணிகளையும் முடக்கி வைக்கும் படியும் தெரிவித்தது.

கடந்த பிப்.,யில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தின் 10 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அதாவது, ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா 1,000 ரூபாய் மட்டுமே. இதனால், இந்த திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதா என, கேள்வி எழுப்புகின்றனர்.


கூட்டு நிறுவனம் அவசியம்!

-ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகள், 50 சதவீத நிதி மற்றும் திட்டத்திற்கு தேவையான நிலத்தை இலவசமாக, ரயில்வே துறைக்கு கொடுத்தால் திட்டங்கள் விரைந்து நடக்கும். மற்ற மாநிலங்கள், ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற, கூட்டு நிறுவனங்களை துவக்கியது போல, தமிழகமும் ரயில்வே துறையுடன் இணைந்து, கூட்டு நிறுவனத்தை துவங்க வேண்டும்.


பின்தங்கிய தென் மாவட்டங்கள்!

தென்தமிழகத்தின், பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கில் தென்மாவட்ட மக்கள், சென்னை, மும்பை மற்றும் பெங்களுரூ சென்று கொண்டிருக்கின்றனர். மதுரைக்கு தெற்கே, கன்னியாகுமரி தவிர, மற்ற மாவட்டங்களில் உள்ள ரயில் பாதைகள், ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டவை. கடந்த 1979 ஏப்., 15ல் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் 87 கி.மீ., துார புதிய அகல ரயில்பாதை 1981 ஏப்., 8ல் திருநெல்வேலி - நாகர்கோவில் 74 கி.மீ., துார புதிய அகல ரயில் பாதையும் பயன்பாட்டுக்கு வந்தன.

இந்த இரண்டு பாதைகளையும் சேர்த்து, தென் தமிழக எல்லைக்குள், நாடு சுதந்திரம் அடைந்த 1947க்கு பின், சில நுாறு கி.மீ., துாரத்திற்கு மட்டுமே, புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின், இதுவரை எந்த ஒரு புதிய பாதையும் அமைக்கப்படவில்லை.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X