இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021
Share
இந்திய நிகழ்வுகள்படகு விபத்து: 84 பேர் மீட்புஜோர்ஹாட்: அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில், பிரம்மபுத்ரா நதியில் நேற்று முன்தினம் இரவு 87 பேருடன் படகு ஒன்று பயணித்தது. அப்போது எதிரில் வந்த ஒரு கப்பலில் மோதி, நதியில் கவிழ்ந்து படகு விபத்துக்கு உள்ளானது. நீரில் தத்தளித்த பயணியரை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது; 84 பயணியர்
இன்றைய, கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்படகு விபத்து: 84 பேர் மீட்பு

ஜோர்ஹாட்: அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில், பிரம்மபுத்ரா நதியில் நேற்று முன்தினம் இரவு 87 பேருடன் படகு ஒன்று பயணித்தது. அப்போது எதிரில் வந்த ஒரு கப்பலில் மோதி, நதியில் கவிழ்ந்து படகு விபத்துக்கு உள்ளானது. நீரில் தத்தளித்த பயணியரை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது; 84 பயணியர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும், இரண்டு பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

யானை தாக்கி 3 பேர் பலி

கோர்பா: சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, குழந்தையுடன் ஒரு தம்பதியினர், இரு சக்கர வாகனத்தில் தங்கள் வீட்டிற்கு சென்றனர். வனப் பகுதிக்கு அருகே உள்ள சாலையில் அவர்கள் சென்றபோது, அருகில் இருந்த யானைக் கூட்டத்தை அவர்கள் கவனிக்கவில்லை. அங்கிருந்த ஒரு யானை வேகமாக வந்து, அவர்களை வண்டியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கால்களால் நசுக்கியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விசாரணைக்கு ரவி தேஜா 'ஆஜர்'

ஐதராபாத்: தெலுங்கானாவில், 2017ம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின் நடத்தப்பட்ட விசாரணையில் தெலுங்கு திரைத் துறையினர் பலரின் பெயர்கள் அடிபட்டன. இதில் போதை பொருட்களை கடத்தி வினியோகிக்க சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதும் அம்பலமானது. இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரி கள், நடிகர் ராணா டகுபதி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக தெலுங்கு நடிகர் ரவி தேஜா நேற்று ஆஜரானார்.


தமிழக நிகழ்வுகள்


latest tamil news


வேன் மீது லாரி மோதி நான்கு பெண்கள் பலி
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே, வேன் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதிய விபத்தில், நான்கு பெண்கள் பலியாகினர்; 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

துாத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் உலர் பூ தயாரிக்கும் நிறுவனத்தில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பணியாற்றுகின்றனர். தினமும் காலை 6:00 மணிக்கு வேனில் அழைத்து வரப்படுபவர்கள் மாலையில் வீடு திரும்புவர்.நேற்று காலை 6:00 மணிக்கு ஆட்களை ஏற்றி வேன் சென்றது; பாபு, 26 ஓட்டினார். சில்லாநத்தம் அருகே சென்ற போது, துாத்துக்குடி சாலையில் எதிரே வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி, வேன் மீது மோதியது.

இதில், வேன் முழுதும் நொறுங்கியது.வேனில் இருந்த 40 - 48 வயதுடைய மூன்று பெண்கள் அதே இடத்தில் இறந்தனர். காயமுற்ற 10 பேர் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, 20 வயது பெண் இறந்தார். லாரி டிரைவர் பண்டாரம் கைது செய்யப்பட்டார். புதியம்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

'பான்மசாலா' விற்பனை; நான்கு பேருக்கு சிறை

கோவை:தடை செய்யப்பட்ட 'பான்மசாலா' பொருட்களை விற்பனை செய்த நான்கு பேர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, வழக்கு பதிவு செய்து ஸ்டேஷன் பெயிலில் விட்டு விடுவதால், தொடர்ந்து விற்பனையில் ஈடுபடுகின்றனர்.இதனால் தடை உத்தரவை மீறி விற்பனை செய்பவர்களை, கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இச்சூழலில், நேற்று முன்தினம் ரத்தினபுரி போலீசார் காந்திபுரம், ராதாகிருஷ்ணா ரோட்டில் சென்ற மூன்று பேர் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவர்களின் உடைமைகளை ரோந்து போலீசார் சோதனையிட்டனர்.40 கிலோ பான்மசாலா பொருட்கள் மற்றும், 20 ஆயிரத்து, 500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் ஈச்சனாரியை சேர்ந்த அய்யண்ணன், 32, டவுன்ஹாலை சேர்ந்த ரணசிங், 36, உமத்சிங், 26 என்பது தெரிந்தது. மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.போத்தனுார் போலீசார் வெள்ளலுார், என்.ஜி.ஆர்., நகரில் ஒரு மளிகை கடையில், பான்மசாலா பொருட்கள் விற்ற ராஜ்குமார், 31 என்பவர் கைது செய்யப்பட்டார். 100 பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


latest tamil news


பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் சாய்ந்து ஐந்து பேர் காயம்
கோவை;கோவை பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் விழுந்து, 5 பேர் காயமடைந்தனர்.கோவை கலெக்டர் அலுவலகத்துக்கும், எஸ்.பி., அலுவலகத்துக்கும் இடையே எண் 1 இணை சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பத்திரம் பதிய வரும் பொதுமக்கள் காத்திருக்க வசதியாக, எஸ்.பி., அலுவலக காம்பவுண்ட் சுவரை ஒட்டி, தகரஷீட் கொண்டு கூரை கொட்டகை அமைத்துள்ளனர்.நேற்று மதியம் 1:00 மணியளவில், எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இருந்த மே பிளவர் மரம் முறிந்து, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் கூரை கொட்டகை மீது விழுந்தது.இதில் பத்திரம் பதிவதற்காக காத்திருந்த 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மே பிளவர் மரத்தின் அடிப்பகுதி உளுத்துப்போன நிலையில், பிடிமானம் இன்றி முறிந்து விழுந்தது தீயணைப்புத்துறையினர் ஆய்வில் தெரியவந்தது. மரத்தை, தீயணைப்பு படை வீரர்கள் வெட்டி அகற்றினர்.

டாஸ்மாக் விற்பனையாளரிடம் வாளைக்காட்டி சாவி பறிப்பு

ராமநாதபுரம்--முதுகுளத்துார் அருகே வளநாடு தெய்வதானம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டபிரபு 43. இவர் பட்டணம்காத்தான் குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 8:10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு டூவீலரில் புறப்பட்டார்.கிழக்கு கடற்கரை சாலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே சென்ற போது பின்னால் டூவீலரில் வந்தவர் நிற்குமாறு கூறினார். டூவீலரை நிறுத்திய போது மற்றொரு டூவீலரில் இருவர் வந்தனர்.அதில் கையில் வாளுடன் இருந்த ஒருவர், பையை கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி பின்னர் மூவரும் பறித்துச்சென்றனர். அந்த பையில் டாஸ்மாக் கடை சாவி, மணிகண்டபிரபு வீட்டின் சாவி மட்டுமே இருந்தது. கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

மாயமான புதுப்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

விழுப்புரம்:கணவருடன் ஏற்பட்ட தகராறில், காணாமல்போன புதுப்பெண் கிணற்றில் இறந்து கிடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், ஆயந்துாரைச் சேர்ந்தவர் சரத்குமார் மனைவி நர்மதா, 19. இவர்களுக்கு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. கடந்த 8ம் தேதி நர்மதாவின் தோழி ஆஷா, 19 என்பவருக்கு திருமணம் நடந்துள்ளது.இந்த திருமணத்திற்கு நர்மதாவை அழைத்து செல்லாமல், சரத்குமார் மட்டும் சென்றுள்ளார்.

இதனால், கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு, நர்மதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், அங்குள்ள பழனியாண்டி என்பவரின் விவசாய கிணற்றில், நர்மதா சடலமாக மிதந்தார். காணை போலீசார், நர்மதா உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

கார் மீது டிப்பர் லாரி மோதியதில் பெண் டாக்டர் பலி

சிவகங்கை: கார் மீதுடிப்பர் லாரிமோதியதில்பெண் டாக்டர் ஒருவர் பலியானார்.மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் இந்திாா வயது 55. மகப்பேறு மருத்துவர். நாட்டரசன்கோட்டையில் நடந்தஉறவினர் இல்ல நிகழ்ச்சியில்கலந்து கொண்டு விட்டுமதுரைக்கு காரில் புறப்பட்டார்.காரை அவரே ஓட்டினார்.சிவகங்கை அருகே ஒக்கூர் என்ற இடத்தில் கார் வந்தபோது,ஜல்லி ஏற்றி வந்த ஒரு டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.கடைசியில் அது கார் மீது கவிழ்ந்தது. டிப்பர் லாரியின் அடியில் சிக்கி கார் நசுங்கியது.இதில் டாக்டர் இந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X