தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ள பயிற்சி அலுவலரின் அலட்சியமான செயல்பாடுகளால், பொதுமக்கள் மற்றும் நலச்சங்கத்தினர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
தாம்பரம் வருவாய் கோட்டத்தின் கீழ், தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. அங்கு, தாம்பரம், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், மேடவாக்கம் ஆகிய நான்கு குறுவட்டங்களின் கீழ், தாம்பரம், பெருங்களத்துார், செம்பாக்கம், வெங்கம்பாக்கம், சிட்லபாக்கம் உட்பட 25 கிராமங்கள் உள்ளன.ஜாதி, வருமானம், இருப்பிடம், பிறப்பிடம், வாரிசு, உறவின் முறை சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்து போனால் அதற்கான சான்றிதழ்கள் மற்றும் உட்பிரிவு பட்டா மனுக்கக்கான சான்றிதழ்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
தாம்பரம் தாசில்தாராக இருந்த சரவணன் என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தாசில்தார் பயிற்சி பெறும் பிரேமா என்பவர் நியமிப்பட்டுள்ளார். தினமும் நுாற்றுக்கணக்கானோர் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வந்து செல்லும் இந்த அலுவலகத்தில், பொறுப்புடன் செயல்பட வேண்டிய தாசில்தார், பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாக, 1,000க்கும் மேற்பட்ட கோப்புகள் முடிக்கப்படாமல் தேங்கி உள்ளதாகவும், சான்றிதழ்கள் உட்பட பல்வேறு தேவைகளுக்காக வரும் மக்கள், சரியான நேரத்தில் பலன்களை பெற முடியாமல் அவதியுறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, தங்கள் மனுக்களுக்கு தீர்வு காணப்படாததால் விரக்தி அடைந்த பொதுமக்கள் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு, 250க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் மற்றும் மனுக்களின் விண்ணப்பங்கள், தாசில்தாரின் ஒப்புதலுக்காக செல்கின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்ற பயிற்சி தாசில்தார், பொதுமக்களை முறையாக சந்திப்பதில்லை. இதனால், கோப்புகள் தேங்கி வருகின்றன. பொதுமக்களும் தினசரி தாசில்தார் அலுவலகம் சென்றாலும் அவர்களின் தேவை நிறைவேற்றப்படுவதில்லை.
தற்போது, தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனால், பணி பளு அதிகரிக்கும்; தேவைகளும் அதிகரிக்கும். தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த அலுவலகத்தில், அனுபவம் பெற்ற தாசில்தார்களால் மட்டுமே நிலையைமையை சமாளிக்க முடியும்.இது குறித்து ஆர்.டி.ஓ., மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளோம்.
மேலிட 'ஆசீர்வாதம்' இருப்பதால், உரிய நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளும் தயக்கம் காட்டுகின்றனர்.எனவே, மாவட்ட கலெக்டர், இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- -நமது நிருபர்- -
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement