பொது செய்தி

இந்தியா

தடுப்புகளை உடைத்தெறியும் யானைகள்; விளைச்சலை துவம்சம் செய்வதால் பாதிப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
மைசூரு : நாகரஹொளேவில், வனத்துறை அமைத்துள்ள தடுப்புகளை உடைத்தெறிந்து, கிராமத்துக்குள் நுழையும் காட்டு யானைகள் விளை நிலங்கள், தோட்டங்களை மிதித்து துவம்சம் செய்கின்றன. விவசாயிகள் பாடுபட்ட விளைச்சல்களை பாழாக்குகின்றன.கர்நாடக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்கள், பல ஆண்டுகளாக காட்டு யானைகளின் தொந்தரவை அனுபவிக்கின்றன.காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறை பல

மைசூரு : நாகரஹொளேவில், வனத்துறை அமைத்துள்ள தடுப்புகளை உடைத்தெறிந்து, கிராமத்துக்குள் நுழையும் காட்டு யானைகள் விளை நிலங்கள், தோட்டங்களை மிதித்து துவம்சம் செய்கின்றன. விவசாயிகள் பாடுபட்ட விளைச்சல்களை பாழாக்குகின்றன.

கர்நாடக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்கள், பல ஆண்டுகளாக காட்டு யானைகளின் தொந்தரவை அனுபவிக்கின்றன.காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறை பல நடவடிக்கைகள் எடுத்தும் தோல்வியில் முடிந்தது. நிவாரணம் கிடைக்காமல் மக்கள், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.மைசூரின் நாகரஹொளே தேசிய பூங்காவின், வனப்பகுதிக்குட்பட்ட கிராமங்களில் காட்டு யானைகளின் தொந்தரவு அதிகமாக உள்ளது. விளைச்சல்களை தின்று, மதித்தும் நாசமாக்கின.

காட்டுயானைகளின் தொல்லையை கட்டுப்படுத்தும் நோக்கில் வனப்பகுதி எல்லையில் பள்ளங்கள் வெட்டி வைக்கப்பட்டது. இதை தாண்ட யானைகள் தயங்கின. நாளடைவில் சில புத்திசாலி யானைகள், பள்ளத்தில் மண்ணை தள்ளி மூடி, சமன்படுத்திக்கொண்டு, வனத்திலிருந்து வெளியே செல்ல துவங்கின.இது மட்டுமின்றி பள்ளங்களை வனத்துறை ஊழியர்கள் பராமரிக்காததால், மண் சரிந்து பள்ளங்கள் தானாகவே மூடிக்கொண்டன.

பள்ளங்கள் தோண்டும் திட்டம் தோல்வியடைந்ததால், வனப்பகுதிகளின் எல்லையில் 'சோலார் வேலி' பொருத்தப்பட்டது. ஆனால் யானைகள் உலர்ந்த மரங்களை கொண்டு வந்து, சோலார் வேலி மீது போட்டு, அதை முறித்துக்கொண்டு தாண்டிச்செல்ல துவங்கின.எனவே வனத்துறை புதிய திட்டத்தை தேடத்துவங்கியது. ஆப்ரிக்கா போன்று, ரயில் தண்டவாளங்களின் வேலியை பொருத்தும்படி, மாநில அரசு ஆலோசனை கூறியது.

இத்திட்டம் வனத்துறைக்கும், சரியாகவே தோன்றியதால், வல்லுனர்கள், உயர் அதிகாரிகள் குழுவை, ஆப்ரிக்காவுக்கு அனுப்பியது.இது குறித்து ஆய்வு செய்து திரும்பிய குழுவினர், அத்திட்டத்தை சிபாரிசு செய்தது. இதற்காக பட்ஜெட்டில் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்பட்டது. கர்நாடகாவில் முதல் முறையாக, நாகரஹொளே தேசிய பூங்காவின் வனப்பகுதி எல்லையில் ஒன்றரை ஆண்டுக்கு முன், கிராமங்களை சுற்றிலும் ரயில்வே தண்டவாளங்கள் பொருத்தப்பட்டன.

அதன்பின் இப்பகுதி கிராமத்தினர் நிம்மதியடைந்தனர். இந்த நிம்மதி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. தற்போது யானைகள், ரயில்வே தண்டவாள கம்பி வேலியை முறித்து, அவ்வப்போது, கிராமங்களுக்குள் நுழைகின்றன. விளைச்சல்களை பாழாக்குகின்றன.நடப்பாண்டு நல்ல மழை பெய்ததால், கரும்பு, காய்கறிகள், உணவு தானியங்கள் அமோகமாக விளைந்துள்ளது. பெஞ்சள்ளி, குருபுரா, பரதவாடி, வீரனஹொசஹள்ளி, அகசனஹுன்டி, ராஜேகவுனடஹுன்டி, அன்னுர், மேடிகுப்பே கிராமங்களில், விளைச்சல்கள் பச்சை பசேலென்று காணப்படுகிறது.

இம்முறை அதிக லாபம் கிடைக்குமென, விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரிக்கிறது. நிலத்தில் புகுந்து வாழை, பருத்தி, கேழ்வரகு என பல விளைச்சல்களை தின்றும், மிதித்தும் பாழாக்குவதால், விவசாயிகள் மனம் நொந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X