சில வரி செய்திகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள்

Added : செப் 10, 2021
Share
காங்., தலைவருக்கு 'நோட்டீஸ்'சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் வேலையின்மை, குற்றச் செயல் அதிகரிப்பை கண்டித்து சமீபத்தில், காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 8 வயது சிறுவனை ரிக் ஷாவில் அமர வைத்து 'பேனர்'களை கட்டியிருந்தனர். 'இது குழந்தைகளை கொடுமைப்படுத்தும் செயல்' என, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன்

காங்., தலைவருக்கு 'நோட்டீஸ்'

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் வேலையின்மை, குற்றச் செயல் அதிகரிப்பை கண்டித்து சமீபத்தில், காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 8 வயது சிறுவனை ரிக் ஷாவில் அமர வைத்து 'பேனர்'களை கட்டியிருந்தனர். 'இது குழந்தைகளை கொடுமைப்படுத்தும் செயல்' என, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் கூறியுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்கும்படி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் இரு எம்.எல்.ஏ.,க்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.

தந்தையை தாக்கியவருக்கு சிறை

தானே: மஹாராஷ்டிராவின் பால்கார் மாவட்டம் பரபாடா கிராமத்தில், 2018ம் ஆண்டு மது போதையில் வீட்டிற்கு வந்த சந்தீப் தியோரம் பாகி, 40, அவரது 60 வயது தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த வழக்கில் சந்தீப் தியோரம் கைதானார். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், சந்தீபுக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

நிர்வாண ஊர்வலம்

தாமோ: மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டம் பனியா கிராமத்தில் போதிய மழை இல்லை. இதனால் மழைக்கான கடவுளை வேண்டி, சமீபத்தில் சிறுமியரின் நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக ஆறு பெண்கள் உட்பட எட்டு பேர் மீது 'போக்சோ' சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிர்வாண ஊர்வலம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கோரி, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

உ.பி., தேர்தல்: காங்., யாத்திரை

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதனை எதிர்கொள்ளும் விதமாக, காங்கிரஸ் சார்பில் பல்வேறு கிராமங்கள், நகரங்கள் வழியாக, பொதுச் செயலர் பிரியங்கா தலைமையில் யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. 'மக்கள் அச்சமின்றி வாழ உறுதி அளிக்கிறோம்' என்ற கோஷத்துடன் 12 ஆயிரம் கி.மீ., துாரம் யாத்திரை மேற்கொள்ளப்படும் என, கட்சியின் மாநில நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

கையெறி குண்டு வீச்சு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் சனாபோரா அரசு குடியிருப்பு பகுதியில், பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் மற்றும் இரு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பூமி பூஜை: பிரதமர் பங்கேற்பு

புதுடில்லி: குஜராத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்பயிற்சி அளிக்க, ஆமதாபாதின் சர்தார்தம் பவனில் புதிய கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இங்கு 2,000 மாணவியர் தங்குவதற்கான விடுதியும் கட்டப்பட உள்ளது. புதிய கட்டடத்தை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மாணவியர் விடுதிக்கான பூமி பூஜையிலும் பங்கேற்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X