கோல்கட்டா:மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மைத்துனி ஐரா பாசு, நடைபாதையில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிண முல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு 2000 - 11ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புத்ததேவ் பட்டாச்சார்யா. இவரது மனைவி மீராவின் தங்கை ஐரா பாசு. டாக்டர் பட்டம்'வைராலஜி' பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஐரா பாசு, சிறந்த டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் வீராங்கனையாகவும் இருந்தார்.
மேற்கு 24 பர்கனஸ் மாவட்டத்தில் உள்ள பிரியநாத் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1976ம் ஆண்டு அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி 2009ல் ஓய்வு பெற்றார்.ஓய்வுக்கு பின் பாராநகர் மற்றும் கர்டாஹ் பகுதிகளில் வசித்து வந்த ஐரா பாசு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாயமானார்.
இந்நிலையில் மேற்கு 24 பர்கனஸ் மாவட்டம், பாராபஜார் பகுதியில் உள்ள டன்லப் சாலையின் நடைபாதையில் அவர் வசித்து வருவது சமீபத்தில் தெரிய வந்தது. நடைபாதையிலேயே தங்கியுள்ள அவர், தெருவோர வியாபாரிகளிடம் உணவு வாங்கி சாப்பிட்டு வருவதும் தெரிந்தது.
புகைப்படங்கள்
நடைபாதையில் ஐரா பாசு வசிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அங்கு சென்று ஆம்புலன்சில் ஐரா பாசுவை ஏற்றி கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஐரா பாசு கூறியதாவது:ஆசிரியை பணியை விரும்பி தேர்வு செய்தேன். என் சகோதரியின் கணவர் முதல்வராக இருந்தாலும், என்னை பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
என் சகோதரியுடன் நெருக்கமான உறவும் கொண்டிருக்க வில்லை.எனக்கு இப்போதும் பாடம் கற்பிப்பது பிடிக்கும். 'ஆன்லைன்' வகுப்புகளை ஏற்கமாட்டேன். பள்ளிக்கு நேரிடையாக சென்று மாணவர்கள் படிப்பது தான் சிறந்தது.இவ்வாறு அவர் கூறினார். எனினும் நடைபாதையில் அவர் வசித்து வந்தற்கான காரணம் தெரியவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE