பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அகழாய்வு பணி இந்த மாதம் நிறைவு

Added : செப் 10, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், ஏழு இடங்களில் நடக்கும் அகழாய்வு பணிகள், இந்த மாதத்துடன் நிறைவு பெறுகின்றன.சிவகங்கை மாவட்டத்தில் கீழடி; துாத்துக்குடி -ஆதிச்சநல்லுார், சிவகளை மற்றும் கொற்கை; ஈரோடு - கொடுமணல்; கிருஷ்ணகிரி - மயிலாடும்பாறை; அரியலுார் - கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஏழு இடங்களில், தமிழக தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச்சில் அகழாய்வு பணிகள் துவங்கின.கீழடியைப் பொறுத்தவரை,

சென்னை:தமிழகத்தில், ஏழு இடங்களில் நடக்கும் அகழாய்வு பணிகள், இந்த மாதத்துடன் நிறைவு பெறுகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் கீழடி; துாத்துக்குடி -ஆதிச்சநல்லுார், சிவகளை மற்றும் கொற்கை; ஈரோடு - கொடுமணல்; கிருஷ்ணகிரி - மயிலாடும்பாறை; அரியலுார் - கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஏழு இடங்களில், தமிழக தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச்சில் அகழாய்வு பணிகள் துவங்கின.

கீழடியைப் பொறுத்தவரை, ஏற்கனவே, ஆறு கட்ட அகழாய்வுகள் முடிந்த நிலையில், தற்போது ஏழாம் கட்ட அகழாய்வு நடக்கிறது.இதில், மவுரியர் காலத்துக்கு முன்பான வெள்ளிக்காசு, சுடுமண்ணால் செய்யப்பட்ட, துணியில் வடிவமைப்பு செய்ய உதவும் முத்திரை, இரும்பு ஆணி, கத்தி, விலையுயர்ந்த மணிகள், காதில் அணியும் தங்க வளையம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.கீழடிக்கு அருகில் உள்ள அகரத்தில், ஐந்து உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், அதிகபட்சம் 12 அடுக்குகள் உள்ளன.

இங்கு, சங்க காலத்தைச் சேர்ந்த சங்கு மணிகள், வளையல்கள், கண்ணாடி மணிகள், முன்கற்கருவிகள், நுால் நுாற்கும் தக்களி, நீர் வார்க்கும் மூக்கு கெண்டி, செப்பு காசுகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.கொந்தகையில், கறுப்பு, சிவப்பு நிற ஈமத்தாழிகள் கிடைத்துள்ளன. மணலுாரில், கிண்ணம், குவளை, இரும்பு குறுவாள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

ஆதிச்சநல்லுார், சிவகளையிலும் ஈமத்தாழிகள், அதனுள் முன்னோர் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்திருக்கும் எலும்புகள் குறித்த ஆய்வை, மதுரை காமராஜர் பல்கலை செய்து வருகிறது.கொடுமணலில், மணிகள் செய்ய பயன்படும் ஆலை, உலை, கார்னேலியன், அகேட் உள்ளிட்ட மணிகள் கிடைத்துள்ளன.கங்கைகொண்ட சோழபுரத்தில், ராஜேந்திர சோழனின் அரண்மனைப் பகுதியில் அகழாய்வு நடக்கிறது. இதுவரை, 10 மீட்டர் நீளம்; 1.5 மீட்டர் அகலம் உள்ள சுவர் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு, இரும்பு ஆணிகள், கூரை ஓடுகள், காசுகள், ஆபரண பொருட்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

மயிலாடும்பாறையில், கல்திட்டை, பானைகள், பெருங்கற்கால பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்கான அனுமதி, இந்த மாதத்துடன் முடிகிறது. இதனால், தொல்லியல் துறையினர், இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே அகழாய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, தொல்பொருட்களை பட்டியலிட்டு பாதுகாத்தல், அகழாய்வுக் குழிகளை மூடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

மரபணு சோதனைகளை செய்ய, மதுரை காமராஜர் பல்கலை உதவி வருகிறது. அங்கு, மரபணு பரிசோதனைக்காக ஆய்வகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணி, மூன்று மாத காலத்தில் நிறைவடையும். அதன்பின், மரபணு சோதனை இன்னும் சிறப்பாக நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X