பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
கொரோனா கெடுபிடி காரணமாக, பொது இடங்களில் கொண்டாட்டம், வீதி ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதிக்காத நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை, பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே மகிழ்ச்சி பொங்க உற்சாகமாக கொண்டாடினர்.ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், விநாயகரை பூஜித்தால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை.ஒவ்வொரு விநாயகர்
 சென்னையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

கொரோனா கெடுபிடி காரணமாக, பொது இடங்களில் கொண்டாட்டம், வீதி ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதிக்காத நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை, பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே மகிழ்ச்சி பொங்க உற்சாகமாக கொண்டாடினர்.

ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், விநாயகரை பூஜித்தால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை.ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியின் போதும், வீதிக்கு வீதி, 13 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் வைத்து, வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக, இந்தாண்டு பொது இடங்களில் சிலை வைத்து, கடலில் கரைக்க தடை விதிக்கப்பட்டது.இதனால், சென்னை நகர் முழுதும் ஏராளமான களிமண் விநாயகர் சிலை கடைகள் முளைத்திருந்தன. குறைந்தபட்சம், 50 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டன.மஞ்சள் கிழங்கு, வாழை கன்று, அருகம்புல், எருக்கம்பூ மாலை, கம்பு, கரும்பு ஆகியவற்றின் விற்பனையும் சூடுபிடித்தது. இனிப்பகங்களில் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டைக்கு வரவேற்பு காணப்பட்டது.

பொதுமக்கள், தங்கள் வீடுகளில் விநாயகரை வைத்து, கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், பழங்கள் படையலாக கொண்டு வழிபாடு நடத்தினர். பிரசாதங்களை அக்கம்பக்கத்தினருக்கு வழங்கி மகிழ்ந்தனர்.சென்னை, புறநகரில் உள்ள பல விநாயகர் கோவில்களில், சிறப்பு அபிஷேக, அலங்கார, வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


வித்தியாசமான விநாயகர்

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ., சாலை, காமாட்சி அம்மன் கோவில் அருகே, ஹிந்து முன்னணி, ராயபுரம் விநாயகர் சதுர்த்தி விழாக்குழு சார்பில், 31ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.இதில், கொரோனா ஒழிய வேண்டி, இரண்டடி உயரம், 11 கிலோ எடையில், 11 வரை மூலிகை கலந்த மஞ்சள் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்பட்டது. மாலையில், மஞ்சள் விநாயகர் சிலை கரைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என, விழாக்குழுவினர் கூறினர்.

* சென்னை, திருவொற்றியூர், அப்பர் சாமி கோவில் தெரு, சுப்ரமணிய சுவாமி கோவில், வடிவுடை மாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை சார்பில், சங்கடஹர தேங்காய் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. கொரோனா முற்றிலும் நீங்க வேண்டி, இயற்கை முறையில், ஏழு அடி உயரம், 1,008 தேங்காய்கள் பயன்படுத்தி, விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது.

108 சங்கு வழிபாடு, சங்கநாதம் மற்றும் கயிலாய வாத்தியங்கள் முழங்க, துாப தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில், குறைவான அளவிலான பக்தர்களே, முக கவசம் அணிந்து, இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.மூன்று நாட்கள் வழிபாட்டிற்கு பின், ஞாயிற்றுக்கிழமை, தேங்காய் விநாயகர் கலைக்கப்பட்டு, பக்தர்களுக்கு தேங்காய் பிரசாதமாக வழங்கப்படும்.

கடந்த ஆண்டு, பழங்களால் ஆன விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

* சென்னை, மணலியை அடுத்த சின்னசேக்காடு, காந்தி நகர், திருவேங்கடம் தெரு, ஸ்ரீ சர்வ மங்கள விநாயகர் ஆலய அறக்கட்டளை சார்பில், 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்து விழா கொண்டாடப்பட்டது.அதன்படி, 2,500 சில்வர் டம்ளர்களை பயன்படுத்தி, 15 அடி உயரத்திற்கு, பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலை 15 நாட்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட டம்ளர் விநாயகர் சிலைக்கு, மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. வழிபாட்டிற்கு பின், டம்ளர் விநாயகர் கலைக்கப்பட்டு, டம்ளர்கள் சுற்றவட்டார பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என, விழாக்குழுவினர் கூறினர்.தவிர, கத்தரிக்காய்களால் இரண்டடி உயரத்திற்கு செய்யப்பட்ட 'செல்பி' விநாயகர், பூசணியில் செய்யப்பட்ட முருகர் சிலை, பழங்களில் செய்த குத்துவிளக்கு, மலர் செண்டு போன்றவை, பக்தர்களை வெகுவாக கவர்ந்தன.

கடந்த ஆண்டுகளில், கரும்பு, அன்னாசி, தேங்காய் உள்ளிட்ட பல வகை விநாயகர் சிலைகள் இங்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.அலைமோதிய கூட்டம்!விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூஜை பொருட்களை வாங்க, புறநகர் பகுதி மார்க்கெட்டுகளில், இரண்டு நாட்களாக கூட்டம் காணப்பட்டது.

வணிக ரீதியாக அதிக நெரிசல் கொண்ட, தாம்பரம் மற்றும் பல்லாவரம் மார்க்கெட்டுகளில், பூஜை பொருட்களை வாங்க, கூட்டம் காணப்பட்டது. மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து, விநாயகர் சிலை, குடை, பூ, பழம், வாசனை திரவியங்கள், தேங்காய், வெல்லம், அரிசி மாவு போன்ற பொருட்களை வாங்கிச் சென்றனர்.
- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X