'குடி, குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்' என, எல்லா தமிழக 'டாஸ்மாக்' கடைகளிலும் எழுதி வைத்துள்ளனர். தமிழகத்தில் உருவாகும் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் குடிப்பது போல காட்டினால், உடனே ரொம்ப யோக்கியமாக குடிப்பது தவறு என எழுதி, சமூக கடமையை நிறைவேற்றியது போல் புளகாங்கிதம் அடைகின்றனர்.
தமிழகத்தை ஒப்பிட வேண்டுமென்றால், ரஷ்யாவுக்குத்தான் போக வேண்டும். 'வோட்கா' பானம் 14ம் நுாற்றாண்டில், 'இஸிடோர்' என்னும் கிறிஸ்துவ பாதிரியால் உருவாக்கப்பட்டது. இத்தாலிய அரசு துாதுவர்கள் ரஷ்யாவின் 'டிமிட்ரி டோன்ஸ்கோய்' என்னும் மாஸ்கோ நகர அரசரிடம் அதை கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ பானமாக வோட்கா உள்ளது.
'வோட்கா' என்பது என்ன?
வோட்காவின் பின், ஒரு நாட்டு மக்களின் பேரழிவும்இருக்கிறது. இன்னும் தொடர்கிறது. வோட்கா எளிதாக செய்யக்கூடிய பானம். இதற்கு தனி ருசி ஏதும் கிடையாது. மணம் கிடையாது. ஏறத்தாழ சாராயம் மாதிரி தான். கடந்த 14ம் நுாற்றாண்டில், ரஷ்யா பல சிற்றரசுகளாக பிரிந்து கிடந்தது. அதை 1547ல் ஐவன் த டெர்ரிபிள் என்னும் அரசர் ஒருங்கிணைத்து, தன்னை பேரரசராக 'ட்ஸார்' என அறிவித்துகொண்டு ஆண்டார்.
சிற்றரசுகளாக பிரிந்து கிடந்த போது, விவசாயிகள்வோட்காவை வீடுகளிலேயே தயாரித்து குடித்துக்கொண்டிருந்தனர்.ஐவன் த டெர்ரிபிள் பேரரசராக அறிவித்துக் கொண்ட பின், ரஷ்யர் எவரும் தனியாக வோட்கா தயாரிக்கக்கூடாது என்றும், அரசே தயாரித்து வினியோகம் செய்யும் என்றும் அறிவித்தார். மூலைக்கு மூலை சாராய கடைகளைத் திறந்து (அந்த கால டாஸ்மாக்) தன் கஜானாவை நிரப்பிக்கொண்டார் பேரரசர்.
ராணியின் சலுகை
இங்கே அரசு என்பது ராஜ குடும்பம் மட்டுமே என்பதை நினைவில் கொள்க. கேத்தரின் என்ற ராணி தனக்கு விசுவாசமாக இருக்கும் பிரபுக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால், வோட்கா ஆலை துவங்க அனுமதி கொடுப்பார். தமிழகத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் சாராய ஆலைகளை நடத்துவதற்கு அனுமதி பெறுவதை இங்கே நினைவில் கொள்ளலாம். கடந்த 1648ல் மூன்றில் ஒரு ரஷ்யர் சாராயக் கடைகளுக்கு நிரந்தர கடனாளியாக இருந்தனர் என சொல்கின்றனர். 1860ல் வோட்காவால் மட்டுமே அரசுக்கு 40 சதவீத வருமானம் வந்துகொண்டிருந்தது.
அரசுக்கு லாபமோ லாபம்
இதனால் ரஷ்ய பேரரசுக்கு பலவிதங்களில் லாபம். முழுக்க குடிகாரரான ஒரு ரஷ்யர் தன் சம்பாத்தியத்தை குடிக்காகவே செலவழிப்பார். தொழிலாளருக்கு கூலியாக கிடைக்கும் பணத்தில் முக்கால்வாசி அப்படியே சாராயத்தால் திரும்பவும் அரசுக்கே வந்துவிடும். குடிபோதையில் இருப்பவன் தன் மற்ற பிரச்னைகளை சிந்திக்கமாட்டான். அவன் தன் குழந்தைகளையும் குடிக்க பழக்குவான். இப்படிப்பட்ட தொழிலாளர்களால் அரசுக்கு எதிராக எந்த விஷயத்துக்காகவும் போராட முடியாது. ராஜ குடும்பத்துக்கு வேறென்ன வேண்டும்!
இதனால், பேரரசே மக்களை குடிக்க ஊக்குவித்தது. பாட்டிலின் மூடியை கழற்றினால், திரும்பி மூட முடியாத மாதிரியில் வோட்கா பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன.ஏனெனில், திறந்து கிடப்பதை குடித்துவிடுவோமே, மக்கள் குடிக்கட்டும் என ஒரு சிந்தனை! போல்ஷ்விக் என்னும் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்ட பின், கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்கள் குடிக்கக்கூடாது என பிரசாரம் செய்தனர்.குடிக்காதவர்களால் தான் ட்ஸாருக்கு எதிராக போராட்டத்தை நடத்த முடிந்தது. போல்ஷ்விக் கட்சி லெனின் தலைமையில் அரசாட்சியை அமைத்ததன் பின்னால் வோட்காவை தடை செய்ய பலமுறை முயன்றது. ஆனால், 1925ல் ஸ்டாலின் மீண்டும் வோட்காவை தெருத்தெருவாக வினியோகிக்க ஆரம்பித்தார்.
முன்னாள் ரஷ்ய பேரரசுஎப்படி வோட்காவை உருவாக்கி வினியோகித்து மக்களை கடனாளியாக ஆக்கியதோ அதே மாதிரிதான். ஆனால் ஸ்டாலின் அதற்கு 'மக்கள் வோட்கா' எனபெயரளித்து வினியோகித்தார். ஆகவே இது புரட்சிகர பானமாகிவிட்டது எனலாம். ஏனெனில் 'சோவியத்' அரசுக்கும் பணம் வேண்டுமே.அதைவிட அந்த தொழிலாளர்களது கீழ்ப்படிதல் வேண்டுமே... ட்ஸாருக்கு பதிலாக ஸ்டாலின்; அவ்வளவுதான் வித்தியாசம்.
பின்னால் வந்த நிகிடா குருஷேவ், லியோனித் பிரஷ்னேவ், ஆண்டர்போவ், செர்னன்கோ, கோர்பச்சேவ் ஆகியோரும் ரஷ்ய மக்கள் அடிமையாகிக் கிடந்த குடிப்பழக்கத்தை குறைக்க முயல்வதாக சொல்லிக் கொண்டனர். குடியைக் குறைப்பதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றவர் கோர்பச்சேவ் எனலாம். மக்களின் ஆயுள் உயர்ந்தது, குடிப்பழக்கம் குறைந்தது. குற்றங்களும் குறைந்தன. ஆனால், இதனாலேயே கோர்பச்சேவ் மிகவும் வெறுக்கத்தக்கவராக ஆகியிருந்தார்.
குடியால் மரணம் அதிகரிப்பு
அரசே ஊற்றி கொடுத்த 400 ஆண்டுகளில் ரஷ்ய மக்கள் இன்று பெருங்குடியர்களாக ஆகியுள்ளனர். 30 சதவீத ரஷ்யர்கள் குடிப்பழக்கத்தினால் இறக்கின்றனர் என்று 'லான்சட்' என மருத்துவ இதழ் கூறுகிறது. கடந்த 2009ல் ஒவ்வொரு ரஷ்யரும் ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக 18 லிட்டர் வோட்காவை குடித்தனர் என கணக்கிட்டுள்ளனர்.
உலகத்திலேயே மிக அதிகமாக தற்கொலை செய்து கொள்பவர்கள் ரஷ்யர்கள்தான். ரஷ்யர்கள் பெருங்குடியர்களாக ஆகியிருப்பதால், அவர்களது ஆண்மை பாதிக்கப்பட்டு, குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இந்தப் பிரச்னையால் மக்களின் சராசரி ஆயுள் 57 ஆண்டுகள் ஆயிற்று. தற்போது 14 கோடியாக இருக்கும் ரஷ்ய மக்கள்தொகை, 2100ல் வெறும் எட்டு கோடியாக குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்துகள் முதல் சிறுநீரக புற்று நோய் வரை பரவும் காரணங்களால், உலகில் ரஷ்யாவை குடி மரணங்களில் முதன்மையான நாடாக ஆக்கியுள்ளது.
தமிழகம் எப்படி?
தமிழகமும் அப்படி ஒரு நிலையை வெகுவிரைவில் எட்டிவிடும் என்பது நிச்சயம்.-----தமிழகத்திற்கும் ரஷ்யாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? மதுவை தயாரிப்பதையும், வினியோகத்தையும் அரசே செய்வதுதான்.கடந்த 1886ல் மெட்ராஸ் அப்காரி சட்டம் என்ற ஒன்றை இங்கிலாந்து அரசு கொண்டு வந்தது.மெட்ராஸ் மாகாணத்தில் யாரும் மது தயாரிக்கக்கூடாது என்றும், ஆங்கிலேயர் தமிழகத்தில் உருவாக்கிய மது ஆலைகள் மட்டுமே மதுவை உற்பத்தி செய்யும் என்றும், அதுவே வினியோகிக்கவும் செய்யும் என்றும் சட்டம் கொண்டு வந்தது.
காரணம் மதுவால் கிடைக்கும் பணத்தை இங்கிலாந்துக்கு எடுத்து செல்வதற்குத்தான். அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் மொத்த வருமானத்தில் 38 சதவீதம் இப்படி சாராயம் விற்று கிடைத்த பணமே.பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக உருவான சுதேசி இயக்கங்கள், காங்கிரஸ், சட்ட மறுப்பு இயக்கம் போன்றவை அனைத்துமே மதுவுக்கு எதிரான கொள்கையை கொண்டு இருந்தன.கடந்த 1937ல் காங்கிரஸ் மெட்ராஸ் மாகாணத்தில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதும், முதல்வர் ராஜாஜி, சேலம் மாவட்டத்தில் மது தடை சட்டத்தை கொண்டு வந்தார். அதன் பின், மாகாணம் முழுதுக்கும் மதுதடையை விஸ்தரித்தார்.
![]()
|
அனுமதி தந்த கருணாநிதி
முப்பது ஆண்டுகளுக்கு பின்பு கருணாநிதி முதல்வராக ஆனதும், மது தடை சட்டத்தை வாபஸ் வாங்கினார். மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தார். பின் 1974ல் கருணாநிதி மது தடை சட்டத்தை திரும்ப கொண்டு வந்தார்.கடந்த 1981ல் எம்.ஜி.ஆர்., மீண்டும் மது தடை சட்டத்தை வாபஸ் வாங்கினார். 1987ல் மீண்டும் மதுவை தடை செய்தார். 1990ல் கருணாநிதி மீண்டும் மது தடை சட்டத்தை வாபஸ் வாங்கி மதுக்கடைகளை திறந்தார்.
கடந்த 2001ல் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதைவிட முக்கியமாக, அரசே மது வினியோகம் செய்வதற்காக 'டாஸ்மாக்' என்ற அரசு நிறுவனம் துவங்கப்பட்டு, வினியோகத்துக்கான முழு உரிமையை பெற்றது. கடந்த 2002ல் டாஸ்மாக்கின் வருமானமாக இருந்தது 2,808 கோடி ரூபாய். 2014ல் டாஸ்மாக் மூலம் கிடைத்த வருமானம் 26,188 கோடி ரூபாய். 2018--19ல் கிட்டத்தட்ட 31,157 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம்.ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 20 சதவீத வளர்ச்சி! தமிழக அரசு வருமானத்தில் 2016ம் ஆண்டில் 30 சதவீதம் சாராய விற்பனை மூலமாக வந்ததுதான்.
கடந்த 2016ல் இந்தியாவிலேயே சாராயம் மூலம் மிக அதிக வருமானம் பெறும் மாநிலமாக தமிழகம் ஆகியிருக்கிறது.இன்று டாஸ்மாக் வருமானத்தை அதிகரிப்பதற்காக ஐ.ஏ.எஸ்., ஆபீசர்கள் தமிழகத்தில் பணியாற்றுகின்றனர். கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகளை பழனிசாமி அரசு திறந்தது. அப்போது விமர்சித்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும், தான் நிரந்தரமாக மதுத்தடையை கொண்டு வருவேன் என கூட்டங்களில் பேசினார்.
ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மதுக்கடைகளை திறந்ததோடு மட்டுமல்லாமல், திறந்திருக்கும் நேரத்தையும் அதிகப்படுத்தி, சாராயத்தின் விலையையும்அதிகரித்துள்ளது.
இதனால் தி.முக., அரசு பெண்களின் வயிற்றெரிச்சலை சம்பாதித்துக்கொண்டிருக்கிறது. பிரச்னை, தமிழகத்தில் மதுவை அனுமதித்திருப்பது அல்ல. மது தடை இல்லாத நாடுகளில் பலர் மது அருந்துகின்றனர். நான் இருக்கும் நாட்டில் சாப்பாட்டுக்கு முன்னால் சற்று ஒயின் சாப்பிடுவது கலாசார ரீதியானஒரு விஷயம்.
அரசே செய்யலாமா?
பிரச்னை அரசே அதை ஒற்றை உரிமையாக எடுத்து உற்பத்தி செய்வதும், வினியோகம் செய்வதும் தான்.அரசுக்குப் பணத்தேவை நிரந்தரமானது. மக்களை அதிகம் குடிக்க வைத்து தன் வருமானத்தை பெருக்கலாம் என அரசாங்கத்தில் உள்ளவர்கள் நினைப்பது இயல்பானது. அதுதான் மிக ஆபத்தானதும் கூட.இரண்டாவது, மது மூலம் வரும் வருமானம் அரசுக்கு முக்கியமில்லாத ஒன்றாக இருக்க வேண்டும். மதுவின் மூலம் வரும் வருமானத்தை பெரிதும் நம்பி இருக்கக்
கூடாது. கடந்த 1937லிருந்து 1971வரை மது இல்லாமல் இருந்த மாநிலம் தமிழகம். இன்று 30,000 கோடி ரூபாய்க்கு மது அருந்தும் மாநிலமாக ஆகியிருக்கிறது. இதன் விளைவு தமிழகத்தில் இன்னும் பல நுாற்றாண்டுகளுக்கு இருக்கும். அரசே வினியோகம் செய்வதற்கு பல காரணங்கள் சொல்கின்றனர். அவை எல்லாமே போலித்தனமான காரணங்கள்.
என்ன செய்ய வேண்டும்?
மது தடை செய்ய வேண்டாம். ஆனால், மதுவை அரசே வினியோகம் செய்வதை நிறுத்த வேண்டும். இதில் செய்ய வேண்டியது என நான் கருதுவது இதுதான்.
* முதலில் டாஸ்மாக்கை கலைத்துவிட்டு மக்களே வினியோகம் செய்துகொள்ளலாம் என சட்டம் இயற்றுவது
* மக்களை கள் இறக்கவும், கள் வினியோகம் செய்யவும் அனுமதிப்பது. (இன்றைய சட்டப்படி தமிழ் மக்கள் கள் இறக்கவோ, கள் தயாரிக்கவோ முடியாது)
* சாராயத்தை தடை செய்துவிட்டு, கள், பீர், ஒயின் போன்ற மதுக்களுக்கு அனுமதி வழங்குவது
* கள், பீர், ஒயின் போன்றவற்றை உற்பத்தி செய்ய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது
* உற்பத்தி செய்யப்படும் மது வகைகள் எதிலும் 5 சதவீதத்துக்கு மேல் ஆல்கஹால் இருக்கக்கூடாது என சட்டம் இயற்றுவது.இது ஆரம்ப ஆலோசனைகள் மட்டுமே. இது ஒரு விவாதமாக மக்களாலும், அரசியல்வாதிகளாலும், மக்கள் நலம் விரும்பிகளாலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.
கோ.துக்காராம்இணைய இதழ் ஆசிரியர், அமெரிக்கா
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE