சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

மகாகவியின் நூற்றாண்டு நினைவு நாள் இன்று!

Added : செப் 10, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
இன்று மகாகவி பாரதியின் நுாற்றாண்டு நினைவு தினம். 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ரா., என்ற கி.ராஜநாராயணன் சமீபத்தில் இறந்த போது, அவரது சொந்த ஊரான, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல்பட்டியில் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.தொடர்ந்து, அவர் பிறந்த கிராமமும், படித்த பள்ளியும் சீர்
மகாகவியின் நூற்றாண்டு நினைவு நாள் இன்று!

இன்று மகாகவி பாரதியின் நுாற்றாண்டு நினைவு தினம். 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ரா., என்ற கி.ராஜநாராயணன் சமீபத்தில் இறந்த போது, அவரது சொந்த ஊரான, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல்பட்டியில் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.தொடர்ந்து, அவர் பிறந்த கிராமமும், படித்த பள்ளியும் சீர் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. உள்ளபடியே, எழுது கோலே தெய்வமாகக் கருதும் எழுத்தாளர்களின் நெஞ்சம் நெகிழ்ந்தது.


latest tamil news
14 வித அறிவிப்புகள்உடல், பொருள், ஆவி என அனைத்தையும் நாட்டுக்காக, தமிழ் மொழிக்காக அர்ப்பணித்த, 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த தின விழாவை கொண்டாடும் விதத்தில் அவரது பெயரில் 5 லட்சம் ரூபாய்க்கு, ஆண்டுதோறும் விருது வழங்குவது உள்ளிட்ட 14 வித அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.பாரதியின் நினைவு தினம் தியாகத் திருநாளாக கடைப்பிடிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். உள்ளபடியே, நாட்டை, மொழியை நேசிப்போர் உள்ளமெல்லாம் மகிழ்ந்தது.இதோ, எழுத்தாளர்களுக்கு எல்லாம் எழுத்தாளராக, கவிஞர்களுக்கு எல்லாம் மகாகவியாக, வீட்டை விட அதிகம் நாட்டை நேசித்தவராக, எழுச்சிமிகு கவிதைகளால் நாட்டு விடுதலைக்கு வித்திட்டவருமான நம் பாரதியின் நுாற்றாண்டு நினைவு தினம் இன்று.விபரம் தெரிவதற்குள் தாயை இழந்து, விபரம் தெரியத் துவங்கும் போது தந்தையை இழந்தார்.
செல்லம்மாளுக்கு முன்பாகவே வறுமையை மணந்து, எட்டயபுரத்து சகவாசம் நம்மையும் நம், கவிதையையும் அல்லவா சோம்பேறியாக்கிவிடும் என பயந்து, கொஞ்ச நாள் காசியில் வாழ்ந்து, திலகரை தலைவராகக் கொண்டு, பேச்சும், மூச்சும் சுதந்திரமே என வாழ்ந்தார்.அதன் காரணமாக பிரிட்டிஷ் போலீசாரால் வேட்டையாடப்பட்டு, ஒவ்வொரு நாளை மட்டுமல்ல, ஒவ்வொரு வேளையையும் வேதனையிலும், சோதனையிலுமே கழித்த ஒரு மனிதனால் எப்படித் தான் இத்தனை கவிதைகளை இயற்ற முடிந்ததோ!பாரதி எழுதிய புத்தகங்களை விட, பாரதி பற்றி எழுதப்பட்ட புத்தகங்களே நாட்டில் மிக அதிகம். மனைவி செல்லம்மாள், மகளாய் புதுச்சேரியில் வளர்ந்த யதுகிரி, பாரதிக்கு சேவகம் செய்வதை புண்ணியமாகக் கருதிய குவளைக்கண்ணன் உள்ளிட்ட பலரும் அவரவர் பார்த்த பார்வையில், பழகிய விதத்தில், தங்கள் புத்தகங்களை படைத்துள்ளனர்.மவுன விரதம்அதில் பழுதில்லை தான். ஆனால் அதன் சாறு பிழிந்து இந்த தலைமுறைக்கு இந்த அரசு எப்படி தரப்போகிறது?பாரதிக்கு 30 வயது இருக்கும் போது யதுகிரிக்கு வயது 11 தான். ஆனால் அவரிடம் தான் 'நல்லதோர் வீணை செய்தே' உளளிட்ட பல பாடல்களை பாடி காட்டியிருக்கிறார். பாடல் குறிப்புகளையும் கொடுத்து வைத்திருக்கிறார்.ஒரு முறை தான் பாடிய ஒரு முக்கியமான பாடல் குறிப்பு காணாமல் போய் விட, அந்த பாடலை யதுகிரி பத்திரப்படுத்தி எடுத்துக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடல், 'இந்த தெய்வம் நமக்கநுகூலம்' என துவங்கும் பாடலாகும்.கால நேரமில்லாமல் கடல் அலைகளின் முன் அமர்ந்திருந்ததையும், யாருமில்லாத பின்னிரவு வேளையிலேயே சத்தமிட்டு பாடியதையும், மாதக்கணக்கில் இந்த மகாகவி மவுன விரதம் இருந்ததையும் பற்றியெல்லாம் யதுகிரி எழுதியிருக்கிறார்.

ஆனால் எழுதியதை புத்தகமாக்கும் முன், யதுகிரி இறந்து போனார். அவரோடு அவர் எழுத்தும் பலரால் படிக்கப்படாமலே உள்ளது. அவரது எழுத்து பரவலாக்கப்பட வேண்டும்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இன்றைய அரசின் முழக்கத்தை ஓங்கிப்பிடித் தவன் அன்றைய பாரதி.பாரதத்தின் வேர் என்பது தாய்மொழிக் கல்வி என்பதை உணர்ந்த வெள்ளையர்கள், அந்த வேரை வெந்நீர் ஊற்றி அழிக்க கொண்டு வந்தது தான் ஆங்கிலக் கல்வி. குமாஸ்தாக்களை மட்டுமே உருவாக்கும் முறையில் கொண்டு வரப்பட்ட அந்தக் கல்வியைத் தான் இன்றைக்கும் நாம் கொண்டாடுகிறோம் என்பதை சாடுகிறார்.

அதற்கு காரணம், நம் தாய் மொழி தமிழில் உள்ள நல்ல பல விஷயங்களை, நயம்பட இந்த தலைமுறையிடம் கொண்டு போய்ச் சேர்க்காததால் தான், இப்போதாவது அதை செய்ய வேண்டும்.தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலகட்டத்தில், பாரதி ஒரு பத்திரிகையாளராக ஆற்றிய பணி மகத்தானது.
'சுதேசமித்திரன், இந்தியா, சக்கரவர்த்தினி, விஜயா, பால பானு, பால பாரதா, சூர்யோதயம், கர்மயோகி, தர்மம், யங் இந்தியா, சர்வஜனமித்திரன், ஞானபானு, காமன்வில், ஆர்யா, மெட்ராஸ் ஸ்டாண்டர்டு, நியூ இந்தியா, கலைமகள், பெண் கல்வி, கதாரத்னாகரம், தனவைசிய ஊழியன், தேசபக்தன்' என அவர் பங்களிப்பு செய்த பத்திரிகைகளின் பட்டியல் நீள்கிறது.பாரதியின் படைப்புகளை கால வரிசைப்படுத்திய சீனி விசுவநாதன் கூறியதை நினைத்துப் பார்க்க வேண்டும்.பாரதி கவிதை எழுதியதை விட, மேற்சொன்ன பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதியது மிக அதிகம். ஆனால், மக்கள் அவரது கவிதையை ஏற்றுக்கொண்ட அளவிற்கு கட்டுரைகளை ஏற்கவில்லை.உண்மையில் அவரது கவிதைகளுக்கு கொஞ்சமும் அந்த கட்டுரைகள்சளைத்தவை அல்ல.'மகாகவி நாள்'இமைப் பொழுதும் சோராமல் அவர் எழுதிக் குவித்த அந்த கட்டுரைகளை எல்லாம் படிக்கும் வாய்ப்பு அவரது இந்த நுாற்றாண்டில் தந்தால், அதுவே அவருக்கு செய்யும் மகத்தான அஞ்சலியாக இருக்கும்.மொத்தமே 39 வயதில் 300 ஆண்டுகள் வாழ்ந்த அனுபவத்தை தந்திட்ட பாரதியின் பேச்சும், மூச்சும் நாட்டைப்பற்றியே இருந்தது.'இந்த நாட்டிற்கு சுதந்திரமா...' என உள்ளூர் தலைகளே கேலி பேசிய காலத்தில், 'ஆனந்த சுதந்திரம் அடைந்தோம்' என பாடிக் களித்தவன் நம் பாரதி.காதலையும், கற்பனையையும் விற்பனை செய்தவர்களுக்கு மத்தியில், புது வெள்ளமாய் புறப்பட்டு புதிய பாதையில் பயணித்து, படிப்பவர் மனதில் மொழிப்பற்றையும், தேசப்பற்றையும் விதைத்த நம் பாரதியைப் பற்றி படிப்பதோடு நிறுத்தி விடாமல், நம்மில் இருந்து பல பாரதிகளை உருவாக்க வேண்டிய தருணம் இது.

அதற்கு இந்த அரசு அடியெடுத்து தர வேண்டிய நாள் தான் அவரது நுாற்றாண்டு நாள். இப்படி தமிழகத்தின் தவப்பயனாக, பாரத மாதாவின் செல்லப் புதல்வனாக தோன்றிய பாரதியின் எழுத்து நமக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம்.இந்த பொக்கிஷம் நமக்கு பின்வரும் தலைமுறைகளுக்கு மிகவும் தேவை. காலம் தாண்டி சிந்தித்த அந்த அமரகவியின் நுாற்றாண்டு நினைவு நாளை கொண்டாடும் வகையில், அவரின் நினைவு நாள் இனிமேல், 'மகாகவி நாள்' என கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு தரும் இந்த அறிவிப்புகள் யாவும் பெருமையும், சிறப்பும் நிச்சயம் சேர்க்கும். பாரதிக்கு அல்ல,- அரசுக்கு!
எல். முருகராஜ், பத்திரிக்கையாளர்தொடர்புக்கு: இ - மெயில்:
murugaraj@dinamalar.in
மொபைல்: 99443 09637

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-202110:51:43 IST Report Abuse
Nagaraj Perumal தினமலர் என் இப்படி செய்தி போட்டு மக்களை குழப்புகின்றிர் என்று புரியவில்லை. மேலே உள்ள ஒரு செய்தியில் பாரதியாரின் நினைவு தினத்தில் உள்ள முரண்பாடு என்று அரசை சாடுகின்றிர். ஆனால் இந்த செய்தியில் நீங்களே இன்று நினைவு தினம் என தலைப்பு வைத்து இருக்கின்றிர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
Rate this:
Cancel
VASEEGARAN - BANGALORE,இந்தியா
11-செப்-202110:21:49 IST Report Abuse
VASEEGARAN செப்டம்பர் பன்னிரண்டு தான் பாரதியார் இறந்த நாள்.. முதல்ல இறந்த தேதியை எல்லா இடத்திலும் சரி பண்ணிட்டு அப்புறம் மத்த ....
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
11-செப்-202108:28:25 IST Report Abuse
VENKATASUBRAMANIAN என்ன செய்வது அவர் பிராமனராக போய் விட்டார். இல்லையென்றால் இந்த திராவிட கட்சிகள் ஒன்றுமே செய்யாத ஈவேரா ஐ தூக்கி கொண்டாடுவது போல் எல்லாம் செய்த இவரை கொண்டாடும். இதுதான் தமிழகத்தின் தலைவிதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X