உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
ஆர்.கோவிந்தன், பொட்டல்புதுார், தென்காசியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஏழாம் அறிவு படத்தால், நோக்கு வர்மம் என்ற கலை குறித்து அறிந்தோம். 'நோக்கு கூலி' என ஒன்று உண்டு; அது பற்றி தெரியுமா? நம் அண்டை மாநிலமான, கம்யூ., ஆட்சி நடக்கும் கேரளாவில் தான் நோக்கு கூலி என்ற அடாவடி முறை நீண்ட காலமான கடைப்பிடிக்கப்படுகிறது. நோக்கு கூலி என்றால், வேடிக்கை பார்ப்போருக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமாம்.
ஒரு நிறுவனம், இயந்திரம் வாயிலாக பணி மேற்கொள்ளும் போது தொழிலாளர்கள் பணியிடத்திற்கு வந்து அமர்ந்து ஏழு மணி நேரம் வேடிக்கை பார்த்து, அடாவடியாக சம்பளம் வாங்குவர். இதற்கு பெயர் தான் நோக்கு கூலி! உங்களுக்கு சொந்தமான சுமையை வேறொருவர் சுமந்து வந்து, நீங்கள் குறிப்பிடும் இடத்தில் சேர்த்தால், அதற்கு கூலி கொடுக்க வேண்டும். அது தான் நியாயம். ஆனால் கம்யூனிஸ்ட் கொள்கைப்படி, உங்களுக்கு சொந்தமான சுமையை நீங்களே சுமந்து வந்தாலும், நோக்கு கூலி என்ற பெயரில் சம்பந்தமே இல்லாத மற்றொருவருக்கு பணம் கொடுக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக கேரளாவில் நடந்து வந்த இந்த அநியாயம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள தும்பாவில் இருக்கும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு, ஒரு பிரமாண்டமான இயந்திரம் வாகனத்தில் வந்திருக்கிறது. அதை பளு துாக்கும் இயந்திரத்தால் மட்டுமே இறக்கி வைக்க முடியும். 1,000 தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தாலும் அதை அசைக்க கூட முடியாது. அந்த இயந்திரத்தை ஏற்றி வந்த லாரியை மடக்கிய கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர், நோக்கு கூலி கேட்டு அடாவடி செய்திருக்கின்றனர். கடந்த 2018ல் கேரள அரசு நோக்கு கூலி முறையை ரத்து செய்தது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிகமாக இருக்கும் கேரளாவில் அதற்கு எல்லாம் மதிப்பு இருக்குமா?
வேலை பார்த்தால் சம்பளம் கொடுக்கலாம். வேடிக்கை பார்ப்பதற்கு சம்பளம் கேட்பதெல்லாம் கம்யூனிஸ்ட் கொள்கைப்படி நியாயம்! நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்... உருப்படுமா இந்த நாடு? தொழிற்சாலைகள் எதுவும் கேரளாவில் துவங்காததற்கான காரணம் இப்போது தெரிகிறதா? நம் வீட்டிற்குள் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் அடாவடியாக நுழைந்து, சமையலறையில் புகுந்து, தயாரிக்கப்பட்ட உணவை பார்வையிட்ட பின், 'கூலி தாருங்கள்' என, நம்மை மிரட்டாமல் உள்ளனரே... அது வரையில் மகிழ்ச்சி!