வாணியம்பாடி: வாணியம்பாடியில், மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் வசீம் அக்ரம், 40. சமூக ஆர்வலர், முன்னாள் கவுன்சிலரான இவர் தற்போது மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளராக இருக்கிறார். நேற்று இரவு 7:30 மணிக்கு ஜீவா நகரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தி விட்டு அவரது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கத்தி, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
கொலையாளிகளை கைது செய்தால் தான் உடலை எடுத்துச் செல்ல அனுமதிப்போம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி பிரேத பரிசோதனைக்காக உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கொலை நடந்த போது அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் கொலை நடந்த காட்சிகள் தெளிவாக இருந்தது.கொலையாளிகள் இண்டிகா காரில் வந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் கொலை செய்யப்பட்டதை பார்த்துக் கொண்டிருத்ததும், 6 பேர் கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், பாலு செட்டி சத்திரம் அருகே உள்ள சோதனை சாவடி வழியாக வந்த கார்களை போலீசார் மடக்கினர். போலீசாரை பார்த்ததும் ஒரு காரில் இருந்தவர்கள் காரை விட்டு விட்டு தப்பியோடினர். போலீசார் விரட்டிச் சென்று 2 பேரை மட்டும் பிடித்து விசாரித்தனர்.அதில் அவர்கள் வண்டலுார் ஓட்டேரியில் வசிக்கும் கூலிப்படையை சேர்ந்த பிரசாந்த், 23, தில்லி குமார், 25. வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி இம்தியாஷ் குறித்து வசீம் அக்ரம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் முன் விரேதம் இருந்தது. இதனால் 10 பேர் கொண்ட கூலிப்படையை வைத்து வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
பாலுசெட்டி சத்திரம் போலீசார் பிரசாந்த், தில்லி குமாரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, வீச்சரிவாட்களை பறிமுதல் செய்தார்.மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து வசீம் அக்ரத்தின் உறவினர்கள் கூறியதாவது: வசீம் அக்ரத்திற்கு ஏற்கனவே கொலை மிரட்டல் இருந்தது.இது குறித்து வாணியம்பாடி நகர போலீஸ் ஸ்டேஷனில் அவர் பல முறை புகார் செய்தார். போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை. அப்போதே அவருக்கு பாதுகாப்பு கொடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதே சமயம் கொலை நடந்த ஒரு மணி நேரத்தில், கொலை நடந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வளைதலங்களில் வெளியாவது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையை பார்த்த ஒரே சாட்சியான அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE