வேலுார்: வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், கடந்த சில மாதங்களாக, நடந்து செல்லும் பெண்களிடம் பைக்கில் வரும் மர்ம நபர்கள் செயின் பறித்துச் செல்வது அதிகளவு நடந்து வருகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் செயின் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலுார் மாவட்டம், காட்பாடி ஓட பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் வாட்ஸ் ஆப்பில் வெளியாகியுள்ளது. இருந்தாலும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. கடந்த மாதம் மட்டும் வேலுார் மாவட்டத்தில் 34 பேர், ராணிப்பேட்டை, 36, திருப்பத்துார் மாவட்டத்தில் 41 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக வழக்கு பதிவாகி உள்ளது. இதில் எவ்வளவு நகை பறிபோனது என தகவலை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். நிறைய பெண்கள், வழக்கு விசாரணைக்காக அலைய வேண்டும் என்பதால் புகார் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.
இது குறித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: இப்போது முக்கிய நகரங்களில் முக்கிய சாலைகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் கண்ட்ரோல் அறையில் இருந்து போலீசார் இதை கண்காணிக்கின்றனர். ஒரு இடத்தில் செயின் பறிப்பு நடந்த உடனே ஒயர்லெஸ்சில் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகவல் தெரிவித்தால் குற்றவாளிகளை தப்பிச் செல்வதற்குள் பிடித்து விடலாம். ஒரு குற்றவாளி ஒருவரிடம் மட்டும் செயின் பறிக்க வரமாட்டார். நிறைய பேர்களிடம் செயின் பறிக்கவே செல்வார். முன்பு இரவு நேரத்தில் மட்டும் செயின் பறிப்பது நடந்து வந்தது. இப்போது எப்போது வேண்டுமானாலும் நடக்கிறது. இதை தடுக்க போலீஸ் கண்ட்ரோல் அறைக்கு ஐ.டி., துறையில் உள்ள நிறைய பேர்களை நியமிக்க வேண்டும்.
இப்போது தங்கத்திற்கு அதிக விலை உள்ளதும் செயின் பறிப்பிற்கு முக்கிய காரணமாகும். படித்து விட்டு வேலையில்லாமல் நிறைய இளைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஒரு கும்பல் மாதம் சம்பளம், அலவன்ஸ், பெட்ரோல் படி போன்றவை கொடுத்து செயின் பறிப்பில் ஈடுபடுத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்கு 10 செயின் பறிப்பு செய்தால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கின்றனர். செயின் பறிப்பை தடுக்க போலீசாரை மட்டும் குறை சொல்ல முடியாது, பெண்களும் நிறைய நகை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE