அப்போது அவர்; இப்போது இவரா?
'கட்சியில் முக்கிய பதவிகளை அனுபவித்தவர்கள் கடைசி காலத்தில் கட்சியையும், மேலிட தலைவர்களையும் திட்டித் தீர்ப்பது வழக்கமாகி விட்டது' என புலம்புகின்றனர், காங்கிரஸ் நிர்வாகிகள். இந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம்நபி ஆசாத். மத்திய அமைச்சர், ஜம்மு - காஷ்மீர் முதல்வர், காங்., மேலிட பார்வையாளர் என, கட்சியிலும், ஆட்சி அதிகாரத்திலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சமீப காலமாக கட்சி மேலிட தலைவர்களுக்கும், இவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. 'கட்சியில் சீர்திருத்தம் செய்யுங்கள்; இல்லையெனில் தலைமைப் பொறுப்பை வேறு யாரிடமாவது கொடுத்து விட்டு நடையை கட்டுங்கள்' என, ஆவேசமாக கடிதம் எழுதினார் குலாம்நபி ஆசாத்.
இதனால் கட்சி மேலிடம் இவரை ஓரம் கட்டி வைத்துள்ளது. 'எந்த நேரத்திலும் பா.ஜ.,வுக்கு ஓடி விடுவார்' என, ஒரு சிலர் கூறி வருகின்றனர். குலாம்நபி ஆசாதோ, இதையெல்லாம் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. தன் அரசியல் வாழ்வில் நடந்த அனுபவங்களை தொகுத்து, புத்தகமாக எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறார். 'இந்த புத்தகத்தில் காங்., மேலிட தவைர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்' என, ஒரு தகவல் பரவி வருகிறது. 'ஏற்கனவே பிரணாப் முகர்ஜி இப்படித் தான் திட்டித் தீர்த்தார். இப்போது இவரா... மேலிடத்துக்கு இதுவும் வேண்டும்; இன்னுமும் வேண்டும்' என விரக்தியுடன் கூறுகின்றனர், கட்சி மேலிடத்தை விரும்பாதவர்கள்.
எல்லாம் நேரம்!
'அரசியல்வாதிகளுக்கு தங்களையும், தங்கள் குடும்பத்தையும் விட்டால் உலகில் வேறு யாருமே கண்ணுக்கு தெரியாது போலிருக்கிறது' என, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவை கிண்டலடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர். சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமா ராவ், தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ளார். சந்திரசேகர ராவ் பெயரளவுக்குத் தான் முதல்வர். வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து படிப்படியாக விலக திட்டமிட்டுள்ள அவர், தன் மகனை கட்சியிலும், ஆட்சியிலும் முன் நிறுத்தி வருகிறார்.
அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தினமும் ராமா ராவை புகழ்ந்து அறிக்கை வெளியிடுவதிலும், விளம்பரம் வெளியிடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். சந்திரசேகர ராவும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன் மகனுக்கு புகழாரம் சூட்டத் தவறுவது இல்லை. சமீபத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், தன் மனைவி சகிதமாக வந்து, தன் குழந்தைக்கு பெயர் சூட்டும்படி சந்திரசேகர ராவிடம் வேண்டினார். சந்திர சேகர ராவ் சற்றும் யோசிக்கவில்லை. 'ஆண் குழந்தையா' என கேட்ட அவர், 'ராமா ராவ்' என, பெயர் சூட்டினார். நன்றி தெரிவித்து விட்டு வெளியில் வந்த கட்சி நிர்வாகி, தன் மனைவியைப் பார்த்தார். அவரோ, 'புதுமையான பெயரைச் சூட்டுவார் என நினைத்தால், தன் மகனின் பெயரை, என் குழந்தைக்கு வைக்கிறாரே. எல்லாம் நேரம் தான்' என, முணுமுணுத்தபடியே நடையை
கட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE