கடந்த 1999 டிசம்பர் 24. நேபாள தலைநகர் காட்மாண்டுவிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம், நடுவானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அந்த விமானம் தரை இறங்கிய இடம், ஆப்கானிஸ்தானத்தில் உள்ள காந்தஹார் விமான நிலையம்.
விமானத்திலிருந்த கடத்தப்பட்ட பயணியரை வெளியே கொண்டு வர, நம் இந்திய 'கமாண்டோக்கள்' தயாராக இருந்த நேரத்தில், அவர்களை காந்தஹார் விமான நிலையத்திற்கு வர விடாமல், அப்போது ஆட்சியில் இருந்த தலிபான் பயங்கரவாதிகள் அரசு தடுத்தது. கடத்தப்பட்ட விமான பயணியரை விடுவிக்க, இஸ்லாமிய பயங்கரவாத கடத்தல்காரர்கள் வைத்த நிபந்தனை, இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளில் மூவரை விடுவிக்க வேண்டும் என்பது தான்.
அந்த மூவரில் ஒருவர், ஜெய்ஷ் - இ - முஹம்மது என்ற காஷ்மீர் பயங்கரவாத இயக்கத்தை ஆரம்பித்தவரும், 2001ல் டில்லியில் பார்லிமென்ட் கட்டடத்தை தகர்க்க வெடிகுண்டு வைத்த சூத்ரதாரியும், கொடூரமான 2008 மும்பை தாக்குதலை வழி நடத்தியவருமான, மவுலானா மசூத் அசார் என்ற பயங்கரவாதி.
மற்றொருவரும் பயங்கரவாதி தான். உமர் சையத் அமாத் என்ற அவர் தான், பின்நாளில் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை, விமானத்தால் தகர்க்க உதவிய பயங்கரவாதி. மூன்றாவது நபர், முஷ்டாக் அகமது தயாஹ், காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ஆயுத பயிற்சியும் தற்கொலை தாக்குதல் பயிற்சியும் கொடுத்தவர்.
விமானத்திலிருக்கும் பயணியர் அனைவரையும் பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்றால், இந்த பயங்கரவாதிகள் மூவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தலிபான் பயங்கரவாதிகள், இந்திய அரசுக்கு விடுத்தனர். அந்தக் கோரிக்கையை அப்போதைய, பா.ஜ.,வை சேர்ந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்த பா.ஜ., கூட்டணி அரசு, வேறு வழியின்றி ஏற்றது; அந்த மூன்று பயங்கரவாதிகளும் விடுவிக்கப்பட்டனர்; விமானத்தையும், பயணியரையும் இந்திய அரசு மீட்டது.
அன்று இந்திய விமானத்தை காட்மாண்டிலிருந்து காந்தஹார் வரை கடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவிய அதே தலிபான்கள் தான், 22 ஆண்டுகள் கழித்து இப்போது ஆப்கனை கைப்பற்றி உள்ளனர்.
இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல் - குவைதா பயங்கரவாதிகளுக்கு ஆப்கன் தலிபான் அரசு அடைக்கலம் கொடுக்கிறது என்பதை அறிந்த அமெரிக்கா, ஆப்கன் மீது படையெடுத்து, அங்கிருந்த தலிபான்களை விரட்டியடித்தது. அந்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான்களை வேட்டையாடி வந்த அமெரிக்க படைகள், புதிய அதிபர் ஜோ பைடானால் விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளன. அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறும் முன், ஆட்சியை கைப்பற்றியுள்ளனர் தலிபான்கள். அந்த அளவுக்குத் தான் அந்நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக நிலை இருந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவால், மனித உரிமை மீறலுக்கும், பெண் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தலிபான்களின் ஆட்சியால் இந்தியாவுக்கு பெரும் சவாலும், பேராபத்தும் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
போர் குணம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஆப்கன், 'சக்கரவர்த்திகளின் சுடுகாடு' என்று எழுதப்பட்டுள்ளது. ரோமானியர்கள், கிரேக்கர்கள், பாரசீகர்கள், மங்கோலியர்கள், மாவீரன் அலெக்சாண்டர், மவுரிய பேரரசர்கள், சீக்கியர்களும் படையெடுத்த இடம் தான் இன்றைய ஆப்கன்.
இந்த கலவர பூமியில் எந்த ஒரு அரசும் நீண்ட காலம் முழுமையாக ஆட்சி புரிந்ததாக சரித்திரம் இல்லை. இங்குள்ள மக்கள், 6 அடி உயரமும், கட்டுமஸ்தான உடம்பும், போர்க்குணமும், வெறி தாக்குதலும், மதவெறியும், பழி வாங்கும் வெறி குணமும் கொண்டவர்கள்.இது, அவர்களின் மரபணுக்களில் எழுதப்பட்டுள்ளது. மலைப்பகுதியிலும், மலைச்சரிவுகளிலும் முரட்டு வாழ்க்கை வாழ்பவர்கள்; யாருக்கும் அடங்காதவர்கள்.
ஆப்கன், 70 சதவீதம் உயர்ந்த மலைகளையும், குகைகளையும் கொண்ட நாடு. 30 சதவீத நிலப்பரப்பில் தான் மக்கள் வாழுகின்றனர். பத்து முக்கிய இன மக்கள், பத்து இன தலைவர்களோடு வாழ்கின்றனர். இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் அனைவரும் ஆப்கனிலிருந்து வந்தவர்கள் தான்.
இந்தியாவின் உதவி
நம் நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு, ஆப்கனில் ரஷ்யா ஆதரவில் அரசு அமைந்தது. அந்த அரசுக்கு இந்தியா பக்க பலமாக இருந்தது. இந்த நல்லுறவு 1978 முதல் 1992 வரை நீடித்தது.
அந்த காலக்கட்டத்தில் ரஷ்யாவை ஆப்கனில் இருந்து வெளியேற்ற 'முஜாஹிதீன்' என்ற பெயரிலான பயங்கரவாதிகள், 'தலிபான்' என்ற மாணவ அமைப்போடு சேர்ந்து, ஆப்கன் அரசுக்கு எதிராக சண்டை நடத்தினர். மிக கடுமையாக நடந்த இந்த சண்டையின் இறுதியில் ரஷ்யா, ஆப்கனை விட்டு 1991ல் வெளியேறியது. பலமிழந்திருந்த ஆப்கன் அரசை, தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அவர்கள் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தனர்.
2001ல் அவர்களை அமெரிக்க ராணுவம் விரட்டி, ஜனநாயக ரீதியிலான தன் பொம்மை அரசை அங்கு உருவாக்கியது. ஆப்கனில் அமெரிக்க ராணுவம் முகாமிட்டிருந்த காலத்தில், அங்கு பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. பெண்கள் படிக்கத் துவங்கினர். சுதந்திரமாக வெளியே உலாவத் துவங்கினர். போக்குவரத்து வசதி ஏற்பட்டது. நல்ல தரமான சாலைகள் கிடைத்தன.தொழில் விஷயமாக பல நாடுகளுக்கும் ஆப்கன் மக்கள் சென்று வர முடிந்தது.
எனினும், 20 ஆண்டுகளாக, ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தலிபான்கள் அவ்வப்போது, அமெரிக்க படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தனர்; அமெரிக்கப் படையினரும் விரட்டியடித்து வந்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், 'ஆப்கனில் உள்ள அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுவர்' என தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தபடி வாபஸ் பெற்றுள்ளார். 'அந்நாட்டின் உள்விவகாரத்தில் நாம் ஏன் தலையிட்டு, நம் வீரர்களை பலி கொடுக்க வேண்டும்' என்பது அவரின் நிலைப்பாடு.அமெரிக்க படைகள் வெளியேறிய அடுத்த நாளே, ஆட்சியை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி விட்டனர் என்பது தான் சோகம்.
கோபம் ஏன்?
இந்தியா பல்வேறு உதவிகளை, ஆப்கனின் ஹமித் கர்சாய் அரசுக்கு செய்துள்ளது. பாலங்களை, சாலைகளை அமைத்தது; பார்லிமென்ட் கட்டடங்களை கட்டியது; மருத்துவமனைகளை கட்டியது; மருத்துவர்களை அனுப்பியது; பெரிய அணைகளை கட்டியது.ராணுவ ரீதியிலும் பல உதவிகளை வழங்கிஉள்ளது. இது, தலிபான் பயங்கரவாதிகளுக்கு கோபத்தை ஊட்டியது. இதன் விளைவாக, இந்தியாவுக்கு எதிராக அவர்கள், பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
ஆப்கனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐ.எஸ்.ஐ.,எஸ்., - கே, லஷ்கர் - இ - தொய்பா, அல் - குவைதா போன்ற பயங்கரவாதிகளை தலிபான்கள் தற்போது விடுவித்துள்ளனர். இப்போது இவர்கள் பயங்கரவாதத்திற்கு புது உருவம் கொடுத்துள்ளனர்.
ஆப்கனின், 20 ஆயிரம் டன் தங்கத்தையும், ஒரு பில்லியன் அமெரிக்க டாலரையும், அமெரிக்கா தன் நாட்டின் 'பெடரல்' வங்கியில் வைத்துக் கொண்டுள்ளது. ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்களிடம் காலி கஜானா தான் இருக்கிறது.
இந்நிலையில், உலக நாடுகள் உதவினால் தான், தலிபான்களால் ஆட்சியை நடத்த முடியும். அந்நாட்டின் நிலைமையை உணர்ந்துள்ள சீனா, பல லட்சம் கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்க முன்வந்து உள்ளது. ஆப்கனின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் போன்ற சில நாடுகள், தலிபான் அரசுக்கு ஆதரவாக உள்ளன.
ஆனால், இந்தியா எதிர்ப்பாக உள்ளது. அதனுடன் ரஷ்யா இப்போதைக்கு இணைந்துள்ளது. மேலும், ஆப்கன் அருகில் உள்ள தஜிகிஸ்தான் நாடும், ஆப்கனுக்கு ஆதரவாக உள்ளது. அது மத்திய ஆசியாவில் உள்ள முஸ்லிம் நாடு. இங்கு நம் இந்திய ராணுவம் முகாம் அமைத்துள்ளது.
மத்திய ஆசியாவில் சீனாவின் சில்க் சாலைக்கு, தலிபான்களால் ஆபத்து வராமல் தடுக்கவும், அதே நேரத்தில் சீனாவின் உய்கூர் முஸ்லிம்களுக்கு எதிரான சீன ராணுவத்தின் நடவடிக்கைகளில் தலிபான்கள் தலையிட கூடாது என்பதற்காகவும், தலிபான்களுக்கு ஏராளமாக நிதியுதவி கொடுத்து வாயை அடைக்கப் பார்க்கிறது சீனா.
இப்போதைய நிலையில், தலிபான்களுடன் சீனாவும், பாகிஸ்தானும் இணைந்துள்ளன. இந்த மூன்று நாடுகளும் இணைந்து, சர்வதேச அரங்கில் எப்படி செயல்பட போகின்றன என்பது தான் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆப்கனில் இருந்து அமெரிக்க படை முழுவதும் வெளியேறிய பிறகு, அங்கு பெரிய பொருளாதார சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், ஆப்கனின் பல லட்சம் கோடி பணம், அமெரிக்க வங்கியில் உள்ளது. அந்த பணம் வந்தால் தான் தலிபான்கள் ஆட்சி செய்ய முடியும்.
இந்தியாவுக்கு ஆபத்து
இல்லையேல், பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, அரசை நடத்துவதற்கும், சம்பளம் கொடுக்கவும் பணம் இருக்காது. அதன் விளைவாக பஞ்சம், பட்டினி, அபாய நிலை ஏற்படும்.
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம், ஆப்கன் மக்கள் அகதிகளாக சாரை சாரையாக, பாகிஸ்தானுக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றனர்.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, மலை குகைகளில் பதுங்கி இருந்தபடி, உலக வல்லரசான அமெரிக்காவின் சக்தி வாய்ந்த படைகளுடன், தலிபான் பயங்கரவாதிகள் போராடி கொண்டு இருந்தனர். இப்படி போராடிய தலிபான்களால் தங்களின் போர்க்குணத்தை ஒரே நாளில் விட்டொழிக்க முடியுமா; இந்தியாவை அவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்.
மறைமுகப் போர்
தலிபான்களால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ்., - கே, லஷ்கர் - இ - தொய்பா, அல் - குவைதா பயங்கரவாதிகள், அதிக எண்ணிக்கையில் பாகிஸ்தான் வழியாக காஷ்மீருக்குள் வந்தபடி இருப்பர். காஷ்மீரில் 40 ஆண்டுகளாக, இந்திய ராணுவம், பாக்., ஆதரவு பயங்கரவாதிகளோடு மறைமுக போரில் ஈடுபட்டுள்ளது. இப்போது ஆப்கனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் பலர், போராளிகளாகவும், கூலிப்படையாகவும், அடியாட்களாகவும் இந்திய நகரங்களுக்குள் ஊடுருவர்.
இந்தியாவில் எட்டாண்டுகளாக எவ்வித பயங்கரவாத தாக்குதலையும் நடத்த முடியாத, பாக்., ஆதரவு பயங்கரவாதிகள், மறைமுக போரில் இறங்கியுள்ளனர். சில மதவாத சக்திகளின் துணையோடு, நம் நாட்டு இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து, வெளிநாடுகளில் வேலை என்று அழைத்து போய், பயங்கரவாதிகளாக மாற்றி அனுப்புகின்றனர்.
நம் நாட்டின் பல பல்கலைக்கழகங்களில், மாணவர்களுக்கு பொருளாதார உதவி செய்து, அவர்களை பழமைவாத இஸ்லாமிய சித்தாந்தத்திற்குள் ஈர்க்கின்றனர். பல நகரங்களில் பயங்கர குண்டுவெடிப்பு, மத ஆதரவாளர்கள் கொலை, மிகப் பெரிய கொள்ளைகளுக்கு இவர்களே காரணம்.பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்ட, இந்தியாவில் போதை மருந்து விற்பது, ஆயுத விற்பனை, ஆயுத பயிற்சி, மேல்நாட்டு பணப்பரிமாற்றம் போன்றவற்றில் ரகசியமாக ஈடுபடுகின்றனர்.இந்த சக்திகள் தேர்தல் நேரத்தில், ஏராளமான நிதியை, அரசியல்வாதிகளுக்கு கொடுத்து தங்களைப் பாதுகாத்து கொள்கின்றனர். பல ஆண்டுகளாக இவர்களுக்கு சில அரசியல்வாதிகளின் ஆசிர்வாதமும், துணையும் இருக்கிறது.
தலிபான்கள் மற்ற பயங்கரவாத குழுக்கள் போல, நேரடியாக இந்தியாவோடு போர் புரிய போவதில்லை. தங்களின் இந்திய விரோதத்தை, பயங்கரவாத குழுக்களை அனுப்பி இந்தியாவின் ஸ்திர தன்மையையும், அமைதியையும் கெடுக்க முயற்சிப்பர். பல ஆண்டுகளாக, காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், போரையும், பயங்கரவாதிகளை ஆதரிக்கும் இந்திய அரசியல்வாதிகளையும் சந்தித்துள்ள இந்தியா, இனிவரும் காலத்தில் புதிய உருவம் எடுத்துள்ள உலக கொடூரமான, இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களின் பேராபத்தை உறுதியாக எதிர்கொள்ளும்!
டாக்டர் பேராசிரியர் எஸ்.அர்த்தநாரி
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:
இ - மெயில்: prabhuraj.arthanaree@gmail.com
மொபைல்: 98843 53288
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE