காங்கிரசின் தனி ஆவர்த்தனம்| Dinamalar

காங்கிரசின் தனி ஆவர்த்தனம்

Updated : செப் 14, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (2) | |
மத்திய அரசுக்கு எதிராக இனிமேல் அதிக அளவில் போராட்டங்களை நடத்த சோனியா முடிவு செய்துள்ளாராம். மாநில கட்சிகள் அதிக அளவில் போராட்டங்களை நடத்தி தேசிய கட்சியான காங்கிரசை கண்டு கொள்ளாமல் ஓரங்கட்டி வருவதால் இந்த முடிவாம்.மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. எப்போது எங்கு போராட்டம் நடத்த வேண்டும் என்பதை இந்த கமிட்டி முடிவு செய்கிறது.காங்.
 டில்லி உஷ்!

மத்திய அரசுக்கு எதிராக இனிமேல் அதிக அளவில் போராட்டங்களை நடத்த சோனியா முடிவு செய்துள்ளாராம். மாநில கட்சிகள் அதிக அளவில் போராட்டங்களை நடத்தி தேசிய கட்சியான காங்கிரசை கண்டு கொள்ளாமல் ஓரங்கட்டி வருவதால் இந்த முடிவாம்.மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. எப்போது எங்கு போராட்டம் நடத்த வேண்டும் என்பதை இந்த கமிட்டி முடிவு செய்கிறது.

காங். அலுவலகத்தில் ஒரு அறையில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் எந்த மாநிலத்தில் எப்போது போராட்டம் என குறிக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் உள்ளவர்களை அவ்வப்போது சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார் பிரியங்கா.


புதிய கவர்னர் நியமனமும் அரசியலும்!ஒரு வழியாக தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு மூத்த அரசியல்வாதி கவர்னராக வருவார் என எதிர்பார்த்திருந்த பா.ஜ.வினருக்கு பிரதமர் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.புதிய கவர்னர் ஆர்.என். ரவி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி. நாகாலாந்து கவர்னராக இருந்தவர். உளவுத்துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர்.

தென் மாநில அரசியலை நன்கு அறிந்தவர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் சிஷ்யர். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள நிலையில் இந்த விவகாரத்தை நன்கு கண்காணிக்கவே ரவியை பிரதமர் நியமித்துள்ளார் என்கின்றனர். தமிழகத்தில் பிரிவினைவாதம் தலைதுாக்காமல் இருக்கவும் இவர் நியமனம் உதவும் என சொல்லப்படுகிறது.

அரசியல் ரீதியாக ஒரு விஷயம் அலசப்படுகிறது. 'கவர்னர் ரவி நேர்மையானவர்; தேவையில்லாத அரசியல் விவகாரங்களில் தலையிட மாட்டார். இவரை கவர்னராக நியமித்ததன் மூலம் தி.மு.க. அரசுடன் மத்திய அரசு சுமுகமாக செயல்பட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்' என்பது தெரிகிறது என்கின்றனர் டில்லி பா.ஜ. தலைவர்கள்.ஜனாதிபதிக்கு தயாராகும் பங்களா


அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். ஓய்வு பெற்ற பின் இவர் வசிக்க டில்லியில் அரசு பங்களா ஒதுக்கப்பட வேண்டும். இவருக்கு ஏற்ற அரசு பங்களாவை தேடுவதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கியுள்ளன. அக்பர் சாலையில் உள்ள 24ம் எண் பங்களா ராம்நாத் கோவிந்திற்கு ஒதுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பங்களாவில் இப்போது காங்கிரஸ் அலுவலகம் உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு அரசு தரப்பிலிருந்து இடம் ஒதுக்கப்பட்டு அந்த அலுவலகங்கள் புதிய கட்டடங்களுக்கு இடம் மாறிவிட்டன. காங்கிரசுக்கும் வேறு இடம் ஒதுக்கப்பட்டாலும் இதுவரை புதிய அலுவலகத்திற்கு இடம் மாறவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் அக்பர் சாலையிலுள்ள பங்களாவை காலி செய்ய காங்கிரசுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.கணவருக்காக காசி செல்லும் மனைவி


அந்த பிரபல தலைவரின் மனைவிக்கு கடவுள் பக்தி அதிகம். தமிழகத்தில் அவர் போகாத கோவிலே இல்லை எனலாம். தன் கணவரின் உடல்நலம் மற்றும் குடும்ப நலத்திற்காக அவர் பல கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகிறார்.விரைவில் இவர் காசி விஸ்வநாதரை தரிசிக்க செல்கிறார். அங்குள்ள மற்ற கோவில்களுக்கும் சென்று வர திட்டமிட்டு உள்ளாராம். இதற்காக ஒரு குழு காசி சென்று ஆய்வு செய்ய உள்ளது.

காசியை அடுத்து நம் அண்டை நாடான நேபாளத்திற்கும் செல்ல திட்டமாம். நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் பசுபதிநாத் கோவில் உள்ளது. இங்குள்ள சிவலிங்கம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஹிந்துக்களின் புனித கோவிலாக பசுபதிநாத் கோவில் கருதப்படுகிறது.பாகமதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கும் அந்த பிரபலத்தின் மனைவி சென்று தன் கணவருக்காக வேண்டிக் கொள்ள இருக்கிறாராம்.


பிரதமர் வேட்பாளர் மம்தா?


கடந்த லோக்சபா தேர்தலில் எந்த எதிர்க்கட்சியும் பிரதமர் வேட்பாளர் யார் என சொல்ல தயங்கிய போது 'ராகுல் தான் வேட்பாளர்' என அறிவித்தார் ஸ்டாலின். அந்த தேர்தலில் காங்கிரசுக்கு மரண அடி விழுந்தது. அதேபோல் 2024ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கும் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல் தான் என ஸ்டாலின் அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டில்லி அரசியலை ஸ்டாலின் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்கின்றனர் தலைநகர் அரசியல்வாதிகள்.
இதற்கு காரணம் டில்லி அரசியலை தமிழக முதல்வருக்கு தி.மு.க. சீனியர் எம்.பி.க்கள் சரியாக எடுத்துச் சொல்வதில்லை.வெறும் ஜால்ரா மட்டுமே தட்டி உண்மை நிலையை ஸ்டாலினுக்கு சொல்லாமல் தவிர்க்கின்றனர் என கூறப்படுகிறது. காங்கிரசை ஓரம் கட்டிவிட்டு 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை அறிவிக்க சரத் பவார் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தயாராகவே உள்ளனர். எனவே இந்த விஷயத்தில் ஸ்டாலினுக்குத் தான் தர்மசங்கடமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே இது தொடர்பாக திரிணமுல் காங்கிரசின் மூத்த தலைவர்கள் தி.மு.க.வினரிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X