சென்னை,:'போர்டு கார் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், வாடிக்கையாளர் சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது; தொடர்ந்து தொழில்நுட்ப சேவைகள் மற்றும் காருக்கு தேவையான உதிரி பாகங்கள் வழங்கப்படும்' என, 'போர்டு இந்தியா' நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மறுகட்டமைப்பு
இந்தியாவில் 1995ல் போர்டு இந்தியா கார் நிறுவனம் துவங்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் சென்னை மற்றும் குஜராத் மாநிலம் சனந்த் ஆகிய நகரங்களில், போர்டு கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்நிலையில், போர்டு நிறுவனம் 10 ஆண்டுகளில், 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை செயல்பாட்டு நஷ்டத்தையும், குறைந்த வளர்ச்சியையும் சந்தித்துள்ளது. அதனால், நிறுவன செயல்பாடுகளை மறுகட்டமைப்பு செய்யும் நோக்கில், சென்னையில் உள்ள போர்டு கார் தொழிற்சாலையில், 2022 இரண்டாம் காலாண்டு முதல், இன்ஜின் மற்றும் கார் உற்பத்தி நிறுத்தப்படுகிறது.
அதேபோல, குஜராத் மாநிலத்தில் 2022ம் ஆண்டு நான்காம் காலாண்டு முதல், கார் தயாரிப்பு நிறுத்தப்படுகிறது என அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் போர்டு கார்களுக்கு தேவையான இன்ஜின்களை வழங்குவதற்காக, குஜராத் - சனந்த் தொழிற்சாலையில் இன்ஜின்கள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. கார் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், வாடிக்கையாளருக்கான சேவை தொடர்ந்து வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.இது குறித்து, போர்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:இந்தியாவில், கார் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, 'டீலர்'களிடம் இருப்பில் உள்ள கார்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன.மேலும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கார்களுக்கான பராமரிப்பு சேவைகள், தொழில் நுட்ப சேவைகள் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும். கார்களுக்கு தேவையான உதிரி பாகங்களும் தொடர்ந்து வினியோகிக்கப்படும். இது குறித்து, வாடிக்கையாளர்கள்கவலைப்பட தேவைஇல்லை.மேலும், தற்போது போர்டு நிறுவனத்துடன் இணைந்துள்ள டீலர்களை தொடர்ந்து தக்கவைக்க, சிறப்பு ஊக்கத் தொகைகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆலையை இயக்க சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்
'போர்டு தொழிற்சாலையை, தொடர்ந்து இயக்க வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான, சி.ஐ.டி.யு.,வின் மாநில தலைவர் சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும், 'போர்டு' கார் உற்பத்தி தொழிற்சாலையில், அடுத்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உற்பத்தியை நிறுத்தப் போவதாக அந்த நிறுவனம்
செய்துள்ள அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.குஜராத்தில் உள்ள தொழிற்சாலைக்கும், இதுபோன்ற அறிவிப்பை செய்துள்ளது. ஆலை மூடப்படும் என்பதை வேறு வார்த்தை
களில், அந்த அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது.
நேரடி ஊழியர்கள் 7,000 பேரும், மறைமுக தொழிலாளர்கள் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் வேலை இழப்பர்.தொழிலாளர்களுக்கு ஏற்படும் வருமான இழப்பு, அந்த மாவட்டத்தின் வியாபாரத்தை கடுமையாக பாதிக்கும். இந்த தொழிற்சாலையை மூட நியாயமான காரணம் எதுவும் இல்லை.ஆலை மூடலுக்கு, அரசின் அனுமதியை கேட்டு, அந்த நிறுவனம் விண்ணப்பிக்கும் போது, அரசு உறுதியாக அனுமதி மறுத்து தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.