தகுதியுள்ளதை காலம் சுமக்கும்: எழுத்தாளர் சோ.தர்மன் சிறப்பு பேட்டி

Updated : செப் 12, 2021 | Added : செப் 11, 2021
Advertisement
முறுக்கிய வெள்ளை மீசை, கம்பீரமான பேச்சு, கரிசல் காட்டு வாசம் வீசும் சொல்லாடல் என, தனக்கே உரிய பாணியில் பேச ஆரம்பித்தார் எழுத்தாளர் சோ.தர்மன். தமிழில் அறியப்படும் எழுத்தாளரான இவருக்கு, 2016ல் ‛சூல்' நாவலுக்கு ‛சாகித்ய அகாடமி' விருது கிடைத்தது.இது தவிர ‛சுஜாதா' விருது 1992 மற்றும் 1994ல் இலக்கிய சிந்தனை சிறந்த சிறுகதைக்கான விருது, ‛கூகை' நாவலுக்காக, 2005 ல் தமிழக அரசின்
தகுதியுள்ளதை காலம் சுமக்கும்: எழுத்தாளர் சோ.தர்மன் சிறப்பு பேட்டி

முறுக்கிய வெள்ளை மீசை, கம்பீரமான பேச்சு, கரிசல் காட்டு வாசம் வீசும் சொல்லாடல் என, தனக்கே உரிய பாணியில் பேச ஆரம்பித்தார் எழுத்தாளர் சோ.தர்மன். தமிழில் அறியப்படும் எழுத்தாளரான இவருக்கு, 2016ல் ‛சூல்' நாவலுக்கு ‛சாகித்ய அகாடமி' விருது கிடைத்தது.

இது தவிர ‛சுஜாதா' விருது 1992 மற்றும் 1994ல் இலக்கிய சிந்தனை சிறந்த சிறுகதைக்கான விருது, ‛கூகை' நாவலுக்காக, 2005 ல் தமிழக அரசின் சிறந்த நூல் விருது என பல விருதுகள். இவரின் எழுத்துக்கான அங்கீகாரமாக உள்ளது.

‛கூகை' எனும் நாவல், ஆக்ஸ்போர்டு பல்கலையில், ஆங்கிலத்திலும், ‛மூங்கா' என்னும் பெயரில் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வில்லிசை பற்றிய இவரின் ஆய்வு நூலும், எழுத்துலகில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

திருப்பூருக்கு வந்திருந்த சோ.தர்மனை, மகாகவியின் நினைவு நாளில் சந்தித்து பேசினோம்...எழுத்துலக அறிமுகம் குறித்து...


எனது தந்தையார் சோலையப்பன் ஒயில் கும்மி கலைஞர். ராமர் வேடமிட்டு, அவர் கூத்துக்கட்டுவதை நான் பலமுறை பார்த்துள்ளேன். அதனுடைய தாக்கம், என்னை எழுத துாண்டியது. இதைத்தவிர, எழுத்தாளர் கி.ரா.,வின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டது ஒரு காரணம்.தங்கள் படைப்புகள் எதைப்பற்றி பேசுகின்றன...


கரிசல் காட்டு மக்களை பற்றித்தான். 'சூல்' நாவல், கண்மாய்களின் அவலத்தை பற்றி கூறினேன். அதிலும், விருதுகள் கிடைக்கும் போது, பொறுப்பு அதிகமானதை உணர்கிறேன்.


சாதனை என்றால் எதனை சொல்வீர்கள்...


தினமும், மதியம், மூன்று மணிக்கு கோவில்பட்டியில் உள்ள ஏதாவது ஒரு கண்மாயில் துாண்டில் போட்டு கொண்டிருப்பேன். ஆனால், உண்மை அதுவல்ல. நான் எழுதிய, எழுதப்போகும் பாத்திரங்களோடு, உரையாடி கொண்டு, சிந்தனை வயப்பட்டிருப்பேன்.

அப்படி ஒரு நாளில், வந்த ஒரு முதியவர், 'ஐயா, இந்த கண்மாயில் எனது மாடுகளை தண்ணீர் குடிக்க அனுமதிப்பீர்களா?' என்றார். ஆச்சரியப்பட்டு, 'இதற்கென்ன அனுமதி வேண்டி கிடக்கு. குடித்து விட்டு போகட்டும்' சொன்னதும், 'இல்லய்யா, பல கண்மாய்களை குத்தகைக்கு விட்டுள்ளனர். போனா வெரட்டுறாங்கய்யா...' ஆதங்கத்துடன் பதிலளித்தார்.

இது குறித்து, எனது முகநுால் பக்கத்தில், பதிவிட்டேன். அதனை படித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கண்மாய்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கிய தீர்ப்பில், 'கண்மாய்களை ஏலத்தில் விடுவதை ரத்து செய்ய வேண்டும், பொதுமக்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது, குளத்துக்கு வரும் பறவைகளை விரட்ட கூடாது, கால்நடைகள் தண்ணீர் பருக அனுமதிக்க வேண்டும்,' என சுட்டிக்காட்டியிருந்தார். இந்த ஒரு நிகழ்ச்சி, எனது எழுத்துக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். 'சூல்' நாவல் கூட இதனை பற்றியே பேசுகிறது.


விவசாயிகளின் கஷ்டம் குறித்து, விவசாயி என்ற முறையில்...


முயல் வேட்டையாடினால், பிடித்து உள்ளே போடுகின்றனர். இதனால், நரிக்குறவர்கள் பயந்து அதனை கைவிட்டனர். விளைவு, அவை பெருகி பயிரை கடித்து குதறுகின்றன. இது போலவே மயில்களும். நரிகளும், கீரிப்பிள்ளைகளும், மயில் முட்டைகளை சாப்பிடும். இப்போது, அவற்றை காணவில்லை. இதனால், மயில்கள் பெருகி, விவசாயத்தை அழிக்கின்றன. ஆஸ்திரேலியாவில், கங்காரு வேட்டைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்து. அதன் விளைவு, பல்கிப் பெருகிய அவற்றால், பெரும் நாசம். விவசாயிகள் போராட்டத்தால், அரசாங்கமே, ஐம்பது சதவீத கங்காருவை அழித்தது. ஆனால், இங்கே நிலைமையோ தலைகீழ். ஆட்சியாளர்கள் எதைப்பற்றியும் கவலை கொள்வதில்லை. இதுகுறித்து பொது நல வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.


உங்கள் ஆதர்ச எழுத்தாளர் கி.ரா., பற்றி...


மிகவும் சகஜமாக பேசுவார். நேரடியாக குறைகளை சொல்லவே மாட்டார். இந்த இடத்தில், இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என மென்மையாக கோடிட்டு காட்டுவார். அவரை போல், யாராலும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியது கிடையாது. நான் மெதுவாக நாவல்களை வெளியிடுவேன். இடைவெளி ஏற்பட்டால், உடனே எனக்கு தபால் எழுதி, என்னாச்சு, எழுதுங்க, என்பார்.


இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கம் எப்படி...


'இ-புத்தகம்', அலைபேசி செயலி என வாசிக்கும் முறை மாறியுள்ளதே தவிர, பழக்கம் குறையவில்லை. ஆனால், இப்போது, வாசகர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டனர். ஏதோ, நான்கு வரி எழுதி, கவிதை என்கின்றனர். அதனை, புத்தகம் போட்டு, ஏதாவது ஒரு வி.ஐ.பி.,யை வைத்து வெளியிடுகின்றனர்.


இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...


பொறுமையாக எழுதுங்கள், அவசரப்படாதீர்கள். எனது 41 ஆண்டு எழுத்து பயணத்தில், 78 சிறுகதைகளும், 4 நாவல்களும் மட்டுமே எழுதி உள்ளேன். எழுத்தில் உயிர் இருந்தால் மட்டுமே, கவனிக்கப்படுவீர்கள். தகுதியுள்ளதை காலம் சுமந்து கொண்டு சென்று கொண்டேயிருக்கும். காத்திருந்து, சாதித்து காட்டுங்கள். கண்டிப்பாக முடியும்.

நாம் பார்த்திராத கம்பனும், வள்ளுவரும், இளங்கோவடிகளும் விழா எடுத்து தான் புத்தகங்களை வெளியிட்டனரா? இன்று மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர்களின் படைப்புகள் வாழும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X